முதல்வர் என். ரங்கசாமியின் செல்வாக்கை உயர்த்திய தட்டாஞ்சாவடி தேர்தல் முடிவுகள்!
புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியின் செல்வாக்கை உயர்த்திய தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிவுகளைப் பற்றி...
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் அரசுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளன. மேலும், முதல்வர் என். ரங்கசாமியின் அரசியல் செல்வாக்கை நிரூபிக்கும் இடைத் தேர்தலாகவும் மாறியுள்ளது.
புதுச்சேரியில் முதல்வர் என்.ரங்கசாமி தலைமையில் என். ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நடந்து வருகிறது. இப்போது இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றியின் மூலம் சட்டப்பேரவை பொதுத் தேர்தலில்போது இருந்த எம்எல்ஏக்களின் பலம் மீண்டும் கிடைத்துள்ளது. புதுச்சேரி தேசிய ஜனநாயக் கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக 1, லட்சிய ஜனநாயகக் கட்சி 1 என்று 18 எம்.எல்.ஏ.க்களின் பலம் மீண்டும் வந்துவிட்டது.
தட்டாஞ்சாவடி தொகுதியில் 1991, 1996, 2001, 2006 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்.ரங்கசாமி.
Advertisement
Advertisement
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய பிறகு இந்தத் தொகுதியில் 2011 ஆம் ஆண்டில் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றார். மீண்டும் இந்தத் தொகுதியில் 2016 இல் என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சொத்துக் குவிப்பு வழக்குக் காரணமாக 2019 இல் பதவியை இழந்தார் அசோக் ஆனந்த். 2021 ஆம் ஆண்டில் தட்டாஞ்சாவடியில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு முதல்வர் என்.ரங்கசாமி வெற்றி பெற்றார். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியிலும், மங்கலம் தொகுதியிலும் போட்டியிட்டு ரங்கசாமி வெற்றி பெற்றார்.
தட்டாஞ்சாவடி தொகுதியை முதல்வர் ரங்கசாமி ராஜிநாமா செய்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அசோக் ஆனந்த், இடைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தட்டாஞ்சாவடி தொகுதியைப் பொறுத்தவரை முதல்வர் என். ரங்கசாமியின் முகம்தான் அசோக் ஆனந்துக்கு அடையாளமாக இருந்தது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது முதல்வர் என். ரங்கசாமி, புதுச்சேரியின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஆட்சியின் பலத்தை அதிகரிக்க வாக்களிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
சட்டப்பேரவை பொதுத் தேர்தலின் போது நேயம் மக்கள் கழகத்தின் வேட்பாளரான இ. விநாயகம், கடைசி நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். அப்போது தவெக கூட்டணியுடன் இக்கட்சி போட்டியிட்டது. இப்போது காங்கிரஸுக்கு தவெக ஆதரவு அளித்தது. மேலும், இக் கூட்டணியில் விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் இவருக்கு ஆதரவு அளித்தன. இருப்பினும் இடைத்தேர்தலிலும் 2-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டார் விநாயகம்.
கடைசி நேரத்தில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டவர் சேது என்கிற கு.சேதுசெல்வம். இந்திய கம்யூனிஸ்ட்கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்ததால் சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு மூன்றாம் இடம் பிடித்தவர். இப்போது இடைத்தேர்தலில் திமுக இவருக்குப் போட்டியிட வாய்ப்புக் கொடுத்தது.
மேலும், கூட்டணி கட்சிகள் இல்லாமல் போட்டியைச் சந்தித்து மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது திமுக. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்டவர் அ.மு.சலீம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவருக்குப் போட்டியிட திமுக வாய்ப்புக் கொடுத்ததை ஏற்று கொள்ள முடியாமல் சலீம் போட்டியிட்டார். இவரது போட்டியின் காரணமாக இடதுசாரி கட்சிகளுக்குஇடையே பலமான கூட்டணி உருவாகவும் காரணமாக இருந்தார். இவர் 4 ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
மொத்தத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு உயர இந்த இடைத்தேர்தல் முடிவு காரணமாக அமைந்துள்ளது.
The results of the Thattanchavady by-election in Puducherry serve as an endorsement of the ruling government. Furthermore, the by-election has proven to be a testament to Chief Minister N. Rangasamy's political influence.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.