FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சீருடைப் பணிகளில் சேர வழிகாட்டும் ஓய்வு பெற்ற ராணுவ மேஜர்!

சீருடைப் பணிகளில் சேர வழிகாட்டும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கெளரவ் மிஸ்ரா பற்றி...

24 செப்டம்பர் 2026, 1:01 pm IST
ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் கௌரவ் மிஸ்ரா. - படம் : ஆர். ஸ்ரீராம்
பகிர்:

மரக்காணம் அருகே வசித்து வரும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கெளரவ் மிஸ்ரா, ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சீருடைப் பணிகளில் சேருவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார்.

அரை ரூபாய் சம்பளம் வாங்கினாலும் அரசாங்க உத்தியோக சம்பளத்தை வாங்க வேண்டும் என்பது கிராமத்தில் காலம் காலமாக பேசப்பட்டு வரும் பழமொழியாகும். அந்த அரசாங்கப் பணியிலும் சிறப்புமிக்கதாகக் கருதப்படுவது சீருடைப் பணியாகும். சீருடைப் பணியாக மாநிலக் காவல்துறையைப் போன்று, மத்தியில் ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பணியாற்றுவது ஒவ்வொருவருக்கும் சிறப்பை அளிக்கும்.

நாட்டின் பாதுகாப்புப் பணியில், கடற்படைப் படையில், விமானப் படையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றி வரும் வீரர்கள் பலர் தங்கள் பணி நிறைவுக்காலத்துக்குப் பின்னர், முன்னாள் படைவீரர்களுக்கு மத்திய, மாநில அரசுத் துறைகளில் வழங்கப்படும் வேலைவாய்ப்பை பெற்று, தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். பலர் ஓய்வுக் காலத்தை குடும்பத்துடன் அனுபவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

அந்த வகையில் சற்று வித்தியாசப்பட்டு, முப்படையிலுள்ள வேலைவாய்ப்புகள் என்ன, அதை அடைவதற்கான வழிகள் என்ன என்பது குறித்த விழிப்புணர்வுப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் விருப்ப ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான மேஜர் கௌரவ் மிஸ்ரா.

மத்தியப் பிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த கௌரவ் மிஸ்ரா (35), தனது விருப்ப ஓய்வுக் காலத்துக்குப் பின்னர், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், பொம்மையார்பாளையத்தில் கடந்த பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். பணி ஓய்வுக்காலத்துக்குப் பின்னர் தமிழ்நாடு, புதுவை மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு சீருடைப் பணியின் அவசியம் குறித்தும், அந்த பணியில் சேருவதற்கான வாய்ப்புகள் என்னென்ன உள்ளது, அதை அடைவதற்கான வழிமுறைகள் போன்றவை குறித்து விழிப்புணர்வுப் பணியை மேற்கொண்டு வருகிறார்.

இதுகுறித்து மேஜர் கௌரவ் மிஸ்ராவுடன் உரையாடிய போது, அவர் கூறியது:

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிறந்திருந்தாலும் சென்னையில்தான் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தேன். 2013-ஆம் ஆண்டில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தேர்வில் தேர்ச்சி பெற்று ராணுவத்தில் லெப்டினன்டாக பணியில் சேர்ந்தேன். ஜம்மு - காஷ்மீர், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் பிரிவு மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும், மத்திய இந்திய மாநிலங்களிலும் ராணுவத்தில் பணியாற்றிய நான், 2024 ஆம் ஆண்டில் மேஜராக பணியாற்றிய நிலையில் விருப்ப ஓய்வு பெற்றேன். விமானப் பயிற்றுநராகத் தகுதி பெற்ற நான், 150-க்கும் மேற்பட்ட விமானிகளுக்குப் பயிற்சியையும் அளித்துள்ளேன்.

எனது குடும்பத்தைச் சேர்ந்த பலரும் சீருடைப் பணிகளில் உள்ளனர். அவர்களின் சேவைதான் என்னையும் இந்த சீருடைப் பணியில் சேரத் தூண்டியது. எனது மனைவி வைஷ்ணவி செல்லப்பாவும் விமானப்படையில் ஸ்குவாட்ரன் லீடராக பணியாற்றி வருகிறார்.

2022 ஆம் ஆண்டில் நான் ராணுவத்தில் பணியில் இருந்த போது இளைஞர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வை நடத்தத் தொடங்கினேன். ஆனால், பணியின் காரணமாக இதில் என்னால் முழுமையாக ஈடுபட முடியவில்லை. இளைஞர்களுடன் முழு நேரம் பணியாற்றி, அவர்களை சீருடைப் பணிகளுக்கு வழிநடத்துவதற்காகவே, நான் விருப்ப ஓய்வு பெற்றேன். அரசுக் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் பலர் பொருளாதாரத்தில் பின்தங்கியக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். எனவே இந்த சேவைக்கு நான் யாரிடமும் எந்த கட்டணத்தையும் பெறுவதில்லை.
ராணுவத்தில் அலுவலர்களாக சேர பலரும் விரும்புகின்றனர். அவ்வாறு விரும்பும் பலருக்கு முக்கியத் தடைகளில் ஒன்றாக இருப்பது போதிய விழிப்புணர்வு இல்லாததுதான். குறிப்பாக அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சீருடைப் பணிகளிலுள்ள வாய்ப்புகள் குறித்து தெரிவதில்லை. அவர்கள் எழுதக் கூடிய தேர்வுகள், குறிப்பாக அலுவலர் பணிக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு எவ்வாறு தயாராகுவது என்பதும் பலருக்குத் தெரியவில்லை. எனவே தான் சீருடைப் பணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்தான் எனது ஓய்வுக் காலத்துக்குப் பின்னர் இப்பணியில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன் என்கிறார் கௌரவ் மிஸ்ரா.

ஆயுதப்படைகள் நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் தாங்களும் அலுவலர்களாக முடியும் என்பது பல மாணவர்களுக்குத் தெரிவதில்லை. இவ்வாறு உள்ள மாணவர்களுக்குத்தான் விழிப்புணர்வு அவசியம் தேவைப்படுகிறது. சீருடைப் பணிகளில் என்னென்ன வாய்ப்புகள், அதில் சேருவதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள், அந்த தேர்வுகளை எவ்வாறு அணுகுவது, அதற்குத் தயார்படுத்திக் கொள்ளும் முறைகள் போன்றவை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடும் போது, மாணவர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்தி செய்து கொள்கின்றனர். தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதிலும் மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

பள்ளி, கல்லூரிகளிலும் விழிப்புணர்வு

தமிழ்நாடு, புதுவை, ஆந்திரம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களிலுள்ள 39 பள்ளிகள், 29 கல்லூரிகளில் சீருடைப் பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியுள்ளேன். இதுவரை நான் நடத்திய விழிப்புணர்வு நிகழ்வுகளில் பங்கேற்று, உரிய வழிகாட்டுதல்களை பெற்ற மாணவர்களில் 19 பேர் சீருடைப் பணியில் இணைந்துள்ளனர். இவர்கள் தமிழ்நாடு, புதுவை, மத்தியப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
விழிப்புணர்வு நிகழ்வுடன் என்னுடைய பணி முடிவதில்லை. ஆர்வமுள்ள மாணவர்கள் செய்திக் குழுக்களில் (கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூகவலைதளக் குழுக்கள்) இணைக்கப்படுகின்றனர். அந்த குழுக்களில் தேர்வுகள், தயாரிப்பு முறைகள், புத்தகங்கள் குறித்த தகவல்கள் பகிரப்படுகின்றன. அது மாணவர்களுக்கு பெரும் பயனைத் தருகிறது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்ற ஓய்வு பெற்ற மேஜர் கௌரவ் மிஸ்ரா.

இதுமட்டுமல்லாது தனிநபர் நேர்காணல், தகவல் தொடர்புத் திறன், ஆளுமை மேம்பாடு ஆகியவற்றுக்கான பயிற்சியையும் நான் வழங்கி வருகிறேன். தேர்வுகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்குத் தயாராகும் முறைகள் குறித்த வழிகாட்டுதல்களையும் வழங்கி வருகிறேன். மாணவர்களை சீருடைப் பணிக்கு அழைத்துச் செல்வதே எனது நோக்கம். அவர்களை ஊக்குவித்து, வழிகாட்டி அவர்கள் இலக்கை அடைவதற்கான சரியான பாதையைக் காண்பிப்பதே எனது பணியாகும்.

அரசுப் பள்ளியில் படிப்பவராக இருந்தாலும், கிராமப்புறத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் முப்படைப் பணிகளில் ஏதேனும் ஒன்றில் சேருவது தனக்கும் சாத்தியமான ஒன்று என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட வேண்டும் என்பதே எனது நோக்கமாகும் என்றார் கௌரவ் மிஸ்ரா.

ராணுவத்தில் பணியாற்றினோம், பணிக்காலம் முடிந்த பின்னர் வேறு வேலையைப் பார்க்கச் சென்றுவிடாமல், தன்னை போன்று கிராமப்புறங்களில் உள்ள ஏழை, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களும் சீருடைப் பணியில் சேர வேண்டும் என்பதை மையப்படுத்தி, அதற்கான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டிப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கௌரவ் மிஸ்ரா பாராட்டுக்குரியவர்தான்.

summary

Retired Army officer guides aspirants to join uniformed services!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments