FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முப்படைகளில் சேர...

ராணுவம், கடற்படை, விமானப் படை வீரர்கள் தங்கள் பணிநிறைவுக்குப் பின்னர், முன்னாள் படைவீரர்களாகின்றனர்.

பகிர்:

கு.வைத்திலிங்கம்

ராணுவம், கடற்படை, விமானப் படை வீரர்கள் தங்கள் பணிநிறைவுக்குப் பின்னர், முன்னாள் படைவீரர்களாகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மத்திய, மாநில அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். பலர் ஓய்வுக் காலத்தை குடும்பத்துடன் அனுபவிக்கின்றனர். அந்த வகையில் சற்று வித்தியாசமாக முப்படையிலுள்ள வேலைவாய்ப்புகள் என்ன? அதை அடைவதற்கான வழிகள் குறித்த விழிப்புணர்வுப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் விருப்ப ஓய்வு பெற்ற ராணுவ அலுவலரான முப்பத்து ஐந்து வயதான மேஜர் கௌரவ் மிஸ்ரா.

மத்தியப் பிரதேசத்துக்கு உள்பட்ட ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தனது விருப்ப ஓய்வுக் காலத்துக்குப் பின்னர் விழுப்புரம் அருகேயுள்ள மரக்காணத்தை அடுத்துள்ள பொம்மையார்பாளையத்தில் வசித்து வருகிறார். சீருடைப் பணியின் அவசியம், அந்தப் பணியில் சேருவதற்கான வாய்ப்புகள், அதை அடைவதற்கான வழிமுறைகள் குறித்து இளைய தலைமுறையினரிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

Advertisement

Advertisement

அவருடன் பேசியபோது:

'சென்னையில் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தேன். 2013-ஆம் ஆண்டில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) தேர்வில் தேர்ச்சி பெற்று ராணுவத்தில் லெப்டினன்டாகப் பணியில் சேர்ந்தேன். ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் பிரிவு மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும், மத்திய மாநிலங்களிலும் ராணுவத்தில் பணியாற்றினேன்.

2024-ஆம் ஆண்டில் மேஜராகப் பணியாற்றிய நிலையில் விருப்ப ஓய்வு பெற்றேன். விமானப் பயிற்றுநராகத் தகுதி பெற்ற நான், 150-க்கும் மேற்பட்ட விமானிகளுக்குப் பயிற்சி அளித்துள்ளேன்.

எனது குடும்பத்தைச் சேர்ந்த பலரும் சீருடைப் பணிகளில் உள்ளனர். அவர்களின் சேவைதான் என்னையும் இந்தச் சீருடைப் பணியில் சேரத் தூண்டியது. எனது மனைவி வைஷ்ணவி செல்லப்பாவும் விமானப் படையில் ஸ்குவாட்ரன் லீடராகப் பணியாற்றி வருகிறார்.

2022-ஆம் ஆண்டில் நான் ராணுவத்தில் பணியில் இருந்தபோது, இளைஞர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வை நடத்தத் தொடங்கினேன். பணியால் என்னால் முழுமையாக ஈடுபட முடியவில்லை. இதற்காகவே விருப்ப ஓய்வு பெற்று வழிகாட்டி வருகிறேன்.

அரசுக் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் பலர் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். எனவே இதற்காக நான் யாரிடமும் எந்தக் கட்டணத்தையும் பெறுவதில்லை.

ராணுவத்தில் அலுவலர்களாகச் சேர விரும்புவோருக்கு முக்கியத் தடைகளில் ஒன்றாக இருப்பது போதிய விழிப்புணர்வு இல்லாததுதான். அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சீருடைப் பணிகளிலுள்ள வாய்ப்புகள், அவர்களுக்கான தேர்வுகள், அலுவலர் பணிக்கான நுழைவுத் தேர்வுகள் எனப் பல விஷயங்களில் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன்.

கல்வி நிலையங்களில் விழிப்புணர்வு, வாட்ஸ்அப்பில் வழிகாட்டுதல்: தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், மத்தியப் பிரதேச மாநிலங்களிலுள்ள 39 பள்ளிகள், 29 கல்லூரிகளில் சீருடைப் பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். இதுவரை நான் நடத்திய விழிப்புணர்வு நிகழ்வுகளில் பங்கேற்று, உரிய வழிகாட்டுதல்களைப் பெற்ற மாணவர்களில் 19 பேர் சீருடைப் பணியில் இணைந்துள்ளனர்.

விழிப்புணர்வு நிகழ்வுடன் என்னுடைய பணி முடிவதில்லை. ஆர்வமுள்ள மாணவர்கள் செய்திக் குழுக்களில் (கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக வலை

தளக் குழுக்கள்) இணைக்கப்படுகின்றனர். அந்தக் குழுக்களில் தேர்வுகள், தயாரிப்பு முறைகள், புத்தகங்கள் குறித்த தகவல்கள் பகிரப்படுகின்றன. அது மாணவர்களுக்கு பெரும் பயனைத் தருகிறது.

இதுமட்டுமல்லாது தனிநபர் நேர்காணல், தகவல் தொடர்புத் திறன், ஆளுமை மேம்பாடு ஆகியவற்றுக்கான பயிற்சியையும் நான் வழங்கி வருகிறேன். தேர்வுகள், மருத்துவப் பரிசோதனைகளுக்குத் தயாராகும் முறைகள் குறித்த வழிகாட்டுதல்களையும் வழங்கி வருகிறேன். மாணவர்களை சீருடைப் பணிக்கு அழைத்துச் செல்வதே எனது நோக்கம். அவர்களை ஊக்குவித்து, வழிகாட்டி அவர்கள் இலக்கை அடைவதற்கான சரியான பாதையைக் காண்பிப்பதே எனது பணியாகும்.

அரசுப் பள்ளியில் படிப்பவராக இருந்தாலும், கிராமப்புறத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் முப்படைப் பணிகளில் ஏதேனும் ஒன்றில் சேருவது தனக்கும் சாத்தியமான ஒன்று என்ற எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படுத்தவேண்டும் என்பதே எனது நோக்கமாகும்' என்கிறார் கௌரவ் மிஸ்ரா.

படம்: ஆர்.ஸ்ரீராம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments