உயிர்பெறும் ஒப்பனைகள்
சொன்னது போலவே ராஜாமணி அண்ணன் எனது அலுவலகத்து வாசலில் வந்து நின்றதை சிசிடிவி கேமரா மூலமாகத் தெரிந்துகொண்டேன்.
சொன்னது போலவே ராஜாமணி அண்ணன் எனது அலுவலகத்து வாசலில் வந்து நின்றதை சிசிடிவி கேமரா மூலமாகத் தெரிந்துகொண்டேன்.
எம்ஜிஆர் தொப்பியையும், அவர் போல கருப்புக் கண்ணாடியையும் அணிந்திருந்தார்.
செக்யூரிட்டியை இன்டர்காமில் கூப்பிட்டு, அவரை உள்ளே அனுப்பப் பணித்தேன். இன்று அவரிடம் சற்று உரையாடல் நடத்தி, எனக்குள் இருக்கும் அந்தச் சின்ன சந்தேகத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்ள நினைத்தேன்.
Advertisement
Advertisement
சராசரிக்கும் சற்றுக் குள்ளமான உருவம், கருத்த மேனி, எடுப்பான பல், தொளதொள உடை, அவரின் பாதங்களைவிட பெரிதான காலணி, வகிடெடுத்து வழித்துச் சீவிய தலைமுடி.
நீளமான கைப்பிடி கொண்ட பை ஒன்றைத் தோளில் தொங்க விட்டிருப்பார். சட்டைப் பையில் இரண்டு மூன்று பேனா வைத்திருப்பார். யாருக்கும் எந்தப் பாதிப்பும் தராத ஓர் அப்பாவி ஆத்மா. சொல்லப்போனால், எம்ஜிஆருக்கு நேரெதிரான அத்தனை அம்சங்களும் நிறைந்த அண்ணனை எம்ஜிஆராக எல்லோருக்கும் காட்டுவது 'பஞ்சுத் தொப்பியும், கருப்புக் கண்ணாடியும்'.
கண்ணாடிக் கதவைத் திறந்து உள்ளே வந்த ராஜாமணி அண்ணன் பளீர் வெளிச்சத்துடன், குளுகுளுவென்றிருக்கும் அலுவலகத்தைப் பார்த்ததும் தயங்கி நின்றார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே எனது அலுவலகம் வரும் அவர் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் தயங்கி நிற்பார்.
நான் எனது மேஜையின் மேலிருந்த அழைப்பு மணியை அழுத்தி, அட்டென்டரைக் கூப்பிட்டு, அண்ணனை எனது அறைக்கு கூட்டி வரச் சொன்னேன்.
ராஜாமணி அண்ணன் தீவிரமான எம்ஜிஆர் விசுவாசி, ரசிகர், வெறியர் என என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். எம்ஜிஆர் சாகவில்லை என்கிற எண்ணம் அவருக்கு இன்று வரை இருக்கத்தான் செய்கிறது. அதை வெளியே சொன்னால், கேலி செய்வார்கள் என்பதால் அவர் அதுபற்றி யாரிடமும் பேசுவதில்லை. அந்த அப்பாவி மனிதர் சற்று மனப் பிறழ்வானவர் என்பது அவரிடம் நெருங்கிப் பேசிப் பழகும் என்னைப்போன்ற ஒரு சிலருக்குத்தான் தெரியும்.
அவர் வருடத்துக்கு மூன்று நாள்கள் மட்டும் எம்ஜிஆர் தோற்றத்தில் இருப்பார். அது எம்ஜிஆரின் பிறந்த தினம், நினைவு தினம் மற்றும் குலசேகரப்பட்டினத்துக்கு வேஷமிட்டுச் செல்லும் கடைசி விரத நாள்.
எம்ஜிஆரின் பிறந்த நாளிலும், அவர் மறைந்த நாளிலும் எங்களது அலுவலக வாசலை ஒட்டியதுபோல் இருக்கும் காலி இடத்தில் சிறிய அளவில் தட்டுப் பந்தல் அமைக்கப்பட்டிருக்கும். எம்ஜிஆரின் விசுவாசிகளால் இன்றுவரை மிகுந்த சிரத்தையுடன் ஏற்பாடு செய்யப்படும் அந்த நிகழ்வில் பந்தலுக்குள் பெரியதாக ஒரு மேஜை வைத்து, அதில் எம்ஜிஆர் கையில் கைக்குட்டை வைத்தபடி சிரித்திருக்கும் புகழ்பெற்ற படம் வைத்து அலங்கரித்திருப்பார்கள்.
படத்தைச் சுற்றிலும் சீரியல் பல்ப் எரிய, முன்னால் இலை விரித்து, தேங்காய் உடைத்து, பழம் வைத்து, அதில் சில ஊதுபத்திகளை ஏற்றி வைத்திருப்பார்கள். முத்தாய்ப்பாக அண்ணனுக்குப் பிடித்தாற்போல அன்று முழுக்க எம்ஜிஆரின் பாடல்கள் இரண்டு பெரிய ஸ்பீக்கர்களில் ஒலித்துக்கொண்டிருக்கும்.
இன்றைய எம்ஜிஆர் வேஷத்தைக் கோயிலுக்காகப் பூண்டிருப்பதால் அண்ணன் இன்று அடக்கமாக இருக்கிறார். ஆனால், மற்ற இரண்டு தினங்களில் அண்ணன் தன்னை எம்ஜிஆராகவே நினைத்துக் கொள்வார்.
பந்தலின் வாசலில் நின்று ஒலித்துக்கொண்டிருக்கும் எம்ஜிஆரின் பாடல்களுக்கு ஏற்ப அவரின் பிரத்யேக தலை சாய்வுகளையும், கையசைப்புகளையும் அப்படியே அசைத்து, அண்ணன் எம்ஜிஆராகவே ஆடிக்கொண்டிருப்பார், அதுவும் நின்ற இடத்தில் நின்றபடி. வருவோர் போவோர் எல்லாம் அவரை ஒரு மாதிரியாகப் பார்த்துச் செல்வார்கள். அது குறித்து அண்ணன் சட்டை செய்ததில்லை.
இதில் அண்ணனுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு என்னவென்றால், உள்ளே படத்துக்குச் சாத்தியிருக்கும் மாலைகளையும், வைத்திருக்கும் தேங்காய், பழங்களையும் ஆடு, மாடுகளிடமிருந்து காப்பாற்றுவது.
'எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப்போலவே இருப்பான்' என்கிற பாடலுக்கு அவர் கையசைத்துப் பாவனை பண்ணும்போது, ஆடுகள் ஏதாவது பந்தலுக்கு அருகில் வந்தன என்றால், அண்ணன் தனது பாவனையை நிறுத்தி, அவைகளை விரட்டி விடுவார். அதுவும் நீண்ட தொலைவு வரை அதை விரட்டி விட்டு வருவார். மீண்டும் அண்ணன் அவர் நின்ற இடத்தில் வந்து அந்தப் பாடலின் சரணத்தில் இணைந்து 'நேற்று நாம் வாழ்ந்த வாழ்க்கை விதம் பார்த்து மனித குலம் வாழ உழைப்பான் அண்ணன் தம்பியாய் அன்பு கொள்ளவே சின்னஞ் சிறுவரை அழைப்பான்' என்கிற வரிகளில் இணைந்து பாவனை செய்வார்.
யாராவது 'ஏ ராஜாமணி... இது அன்பே வா
படம்தானே?' என்று அண்ணனை சோதிப்பது போல் கேட்டால் போதும், 'ச...ச... இது 'பணம் படைத்தவன்' எனத் திருத்துவார். அண்ணனுக்கு எம்ஜிஆர் படங்களெல்லாமே அத்துப்படி.
பொறுப்பில் இருக்கும் கட்சிக்காரர்களும், பிரபலங்களுமாக ஒவ்வொருவராக அவ்வப்போது வந்து எம்ஜிஆரின் படத்துக்கு மாலை மரியாதை செய்வார்கள். அப்படியே எம்ஜிஆராக நிற்கும் அண்ணனை பாராட்டிச் செல்வார்கள். அதுபோதும் அண்ணனுக்கு. பிறகு எம்ஜிஆர் பாடல் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டுவிடும். அண்ணனும் கிளம்பிவிடுவார்.
மீண்டும் மாலையிலும் அதேபோலப் பாடல்கள் ஒலிக்க, எம்ஜிஆர் பாவனைகளுடன் அண்ணன் பந்தலைப் பாதுகாப்பார். இரவு 8 மணிக்கு எல்லாம் எல்லாக் கொண்டாட்டங்களும் அடங்கியதும், அண்ணன் அந்தப் பந்தலிலேயே படுத்துக்கொள்வார்.
இன்று என் அலுவலகத்துக்கு வந்து நிற்கும் அண்ணன், குலசேகரப்பட்டினத்துக்கு எம்ஜிஆர் வேஷமிட்டுச் செல்லும் நாள். குலசேகரப்பட்டினத்துக்கு அவர் வேஷம் போடுவது மொத்தம் 5 நாள்கள். கரடி, அனுமன், பிச்சைக்காரர், பெண் என எல்லா வேடமும் போட்ட பிறகு கடைசி நாள் எம்ஜிஆர் வேஷம்.
குலசேகரப்பட்டினத்துக்கு வேஷமிடும் பக்தர்கள் நாளுக்கொரு வேஷமிட்டு, யாசகம் கேட்டு, சேர்ந்த காணிக்கையை கோயிலின் தெய்வங்களான ஞானமூர்த்தீஸ்வரர்-முத்தாரம்மனுக்கு உண்டியலில் சேர்த்து, தங்களது நேர்ச்சையையும் நிறைவு செய்வார்கள். இது ஆண்டுதோறும் நடக்கும் வாடிக்கையான வழிபாட்டு முறை.
ஒவ்வொரு வருடமும் அண்ணன் காணிக்கைக் கேட்டு எனது அலுவலகத்துக்கு வருவதும், தயங்கி நிற்பதும், அட்டென்டர் போய்க் கூட்டி வருவதும் வழக்கம்போல் நடப்பது. அப்படி அவர் வரும்போதெல்லாம் எனது அறைக்கு அண்ணனை அழைத்து, அவர் மனதுக்கு நிறைவு தரும் தொகையைக் கொடுத்து அனுப்புவேன்.
ஆனால், இதுவரை நான்கு நாள்களும் அண்ணன் வரவில்லை. இன்று கீழ ரத வீதியில் எம்ஜிஆர் வேஷத்துடன் நின்றிருந்த அவரைப் பார்த்ததும் எனது காரை நிறுத்தி, கண்ணாடியை இறக்கி, 'இந்த தடவ இன்னும் வரலயே...இன்னைக்குக் கண்டிப்பா வாண்ணே' என்று அவரை அன்புடன் அழைத்தது அவருக்குப் பிடித்திருக்க வேண்டும். அதனால்தான் எனது அலுவலகத்துக்கு வந்திருக்கிறார். எனது தந்தையும் அவரின் தந்தையும் நெருங்கிய நண்பர்கள் என்பது எங்களுக்குள் இருக்கும் இன்னொரு உறவு.
இன்று அவரிடம் சற்று உரையாடி, ஒரு கேள்வியைக் கேட்க நினைத்தேன். ஒவ்வொரு வருடமும் கேட்க நினைத்த கேள்வி ஏனோ தோன்றவில்லை. இன்று எம்ஜிஆர் வேஷமணிந்ததால் கேட்க நினைத்தேன்.
அண்ணன் உள்ளே வந்தார். என்னைப் பார்த்துச் சிரித்தார். அந்த எடுப்பான பல்லுடன் அவர் சிரிக்கும்போது எம்ஜிஆர் இன்னும் விலகிப்போனார்.
அந்தத் தொப்பியும், கண்ணாடியும்தான் அண்ண
னுடன் எம்ஜிஆரை பிணைத்து வைத்திருந்தன.
'என்னண்ணே எப்படி இருக்கே?'
'நல்லாருக்கேன், நீ நல்லாருக்கியா?' அண்ணனைவிட நான் ஐந்து வயது இளையவன் என்பது அண்ணனுக்குத் தெரியும்.
'உட்காரு...' எனச் சொல்லவும், தயங்காமல் எனக்கு எதிரில் உட்கார்ந்தார்.
'என்னண்ணே சாப்பிடுத... டீயா, காபியா, இல்ல ஜூஸ் ஏதாவது..?'
'ஜூஸ்'. அட்டென்டரை நான் பார்த்ததும், அவர் ஜூஸ் வாங்கிவரச் சென்றார்.
'ஏம்ணே வரவேயில்ல... நீ வருவேன்னு நான் டெய்லி வெயிட் பண்வேன். யாரும் எதும் சொன்னாங்களா?'
'ச..ச.. அதெல்லாம் இல்லையே, இங்க வரணும்னு நினைப்பேன். உன் ஆபிசைத் தாண்டிப் போகும்போது உன் கார் இருக்காது. சரி நீ இருக்க மாட்டேன்னு கிளம்பிடுவேன்.'
'என் போன் நம்பர் வெச்சிருக்கியா?'
'இல்லை.'
எனது விசிட்டிங் கார்டை எடுத்து அவனிடம் கொடுத்தேன். வாங்கி பையில் வைத்துக்கொண்டான். சட்டைப்பையில் பேனா ஒன்றுகூட இன்று இல்லை.
'ஏதாவது தேவைனா போன் பண்ணு...' சரி என்பதுபோல் தலையாட்டி சுவரில் ஒளிரும் டிஜிட்டல் கடிகாரத்தைப் பார்த்தான். மணி நண்பகல்12 -யைத் தாண்டி இருந்தது.
'பேனாவா எங்க?'
'கோயிலுக்குப் போறம்லா, தொலைஞ்சு போய்ருமேன்னு வீட்ல போட்டுட்டேன்...' என்று கூறி, அண்ணன் எனது மேஜையின் மீது வைத்திருந்த பொருள்களையெல்லாம் நோட்டமிட்டான்.
'மகா என்ன செய்றாண்ணே?'
'டீச்சர் வேல பாக்கா'
'எங்க?'
'ஆலங்குளத்துல...'
'ஒத்தப் புள்ளய உருப்படியா வளத்து கட்டிக்கொடுத்துட்ட என்னண்ணே?'
அண்ணன் சிரித்தார்.
'மாப்பிள்ள?'
'அவர் பத்திர ஆபீஸ்ல'
'எங்க?'
'சுரண்டைல'
அண்ணனின் மகளுக்கும் மருமகனுக்கும் அரசாங்கப் பணி என்பதை நான் தெரிந்து வைத்திருந்தேன். கள்ளமில்லா மனதுக்கு அப்படித்தானே அமையும். ஜூஸ் வந்தது. குடிக்கத்தொடங்கினார்.
'ஏம்ணே... தினசரி எவ்வளவு சேரும்?'
'என்னது?'
'காணிக்கைணே, தினசரி சேரும் காணிக்கை எவ்வளவுன்னு கேக்கேன்...'
'தெரியாதே!'
'என்னண்ணே, நீ தானே உண்டியல்ல போடுவ. சும்மா குத்து மதிப்பா சொல்லு...'
'நான் உண்டியல்லயே போடமாட்டேனே...'
'அப்போ என்ன செய்வ... சரி, அதவிடு எந்த வேஷத்துக்கு நிறைய காணிக்கை சேரும்?'
அண்ணன், இன்று அவர் போட்டிருக்கும்
எம்ஜிஆர் வேஷத்துக்குத்தான் என்று சொல்வார் என நினைத்தேன். அவர் ஜூûஸக் குடித்து முடித்திருந்தார். அண்ணாந்து பார்த்துச் சுற்றிலும் நோட்டமிட்டார். கிழக்கு நோக்கி முருகர் சிரித்துக்கொண்டிருந்தார். அவர் முருகர் படத்துக்கு அருகில் போய் நின்றார். அவர் என்னிடம் கேட்டார்.
'வாத்தியாருக்கு முருகர் வேஷம் எந்தப் படம் தெரியுமா?' அவர் கேட்டபடி எனது மேஜையின் முன்னால் வந்து நின்றார்.
'தெரியாதே!'
அவர் சிரித்துக்கொண்டார். அவருக்குத் தெரிந்திருந்தது. அவர் கிளம்பத் தயாரானார் என அவரது நடவடிக்கையில் தெரிந்தது.
'எண்ணே, இந்தா காணிக்கை'
அண்ணன் வாங்க மறுப்பதுபோல் தலையாட்டினார். நான் சற்று திகைத்தேன். காணிக்கையை அண்ணன் மறுக்கக் காரணம் என்னவென்று தெரியாமல் சற்று குற்ற உணர்ச்சியும் தோன்றியது.
'ஏம்ணே ஏதும் தப்பா கேட்டுட்டனா?'
'இல்லப்பா...நீ தப்பா நெனைக்காத என்ன...நான்
எம்ஜிஆர் வேஷம் போட்டம்னா யார்கிட்டேயும் காசு வாங்க மாட்டேன். சேத்து வெச்சிருந்த காணிக்கை எல்லாத்தையும் கோயிலுக்குப் போறப்ப நான் பாக்குற வேஷம் போட்டவங்ககிட்ட கொடுத்துருவேன். எம்ஜிஆர் வேஷம் போட்டா வாங்கக்கூடாதுப்பா, கொடுக்கணும். அதான்' நீ தப்பா நினைக்காத என்ன...' அண்ணன் கிளம்பினார்.
என்னிடம் இருந்த எல்லாக் கேள்விகளும் காணாமல் போயின. நானிருக்கும் அறையின் கண்ணாடிக் கதவை திறந்து வெளியே சென்ற ராஜாமணி அண்ணனையே பார்த்தேன். அவரிடம் எம்ஜிஆர் பூரணமாகப் பொருந்தியிருப்பதாகப் பட்டது. என் கையில் இருக்கும் காணிக்கை அப்படியே இருந்தது. இது எம்ஜிஆர் எனக்குக் கொடுத்த காணிக்கையாக வைத்துக்கொள்ளலாம் அல்லவா?