FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வாய்ப்பு கிடைக்கும் வரை பாடிக்கொண்டிருப்பேன்...

சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற வைக்கம் விஜயலட்சுமி மேடையேறிய அந்தத் தருணம், லட்சக்கணக்கானோர் கேட்டு ரசித்த குரலுக்கான அங்கீகாரமாக அமைந்தது.

31 அக்டோபர் 2026, 7:47 pm
வைக்கம் விஜயலட்சுமி
பகிர்:

சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற வைக்கம் விஜயலட்சுமி மேடையேறிய அந்தத் தருணம், லட்சக்கணக்கானோர் கேட்டு ரசித்த குரலுக்கான அங்கீகாரமாக அமைந்தது. ஆனால், அந்தக் குரலுக்குப் பின்னால் வாழ்வில் அவர் சந்தித்த பல சவால்கள் உள்ளன.

உலகைப் பார்க்க முடியாத 44 வயது விஜயலட்சுமி, 72-வது தேசிய திரைப்பட விருது விழாவில், 'அஜயன்டே ரண்டாம் மோஷனம்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'அங்கு வான கோணிலு' என்ற பாடலைப் பாடியதுக்காக சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றார். பின்னணிப் பாடகியாக அறிமுகமாகி பல ஆண்டுகளுக்குப் பிறகே இந்த அங்கீகாரம் அவருக்குக் கிடைத்துள்ளது.

'பார்வைக் குறைபாட்டுக்கான சிகிச்சையைத் தேடிய தொடர் முயற்சிகள், பிறரிடமிருந்து எதிர்கொண்ட உணர்ச்சியற்ற அணுகுமுறைகள், இடையில் விலகிக்கொள்ள நேர்ந்த திருமணப் பந்தம் எனப் பல ஏற்ற இறக்கங்களை உள்ளடக்கிய நீண்ட பயணத்தில் ஒரு மகரந்தத் தருணம்தான் இந்த விருது நிகழ்ச்சி' என்று சொல்லும் வைக்கம் விஜயலட்சுமி தொடர்கிறார்.

Advertisement

Advertisement

'எனக்கு தேசிய விருது பெற்றுத் தந்த பாடலின் வரிகள் உன்னதமானவை. 'உயர்ந்து வா... உயர்ந்து வா...

தடைகளை உடைத்து உயர்ந்து வா... உலகை வென்று உயர்ந்து வா...' போன்ற பாடலின் வரிகள் எனக்கு மிகவும் பொருந்தும். நானும் இன்று இருக்கும் நிலையை அடைய எண்ணற்ற தடைகளைத் தாண்டி வந்துள்ளேன்.

பிறவியிலேயே பார்வைத்திறன் குறைபாடுடன் பிறந்தவள் நான். 'நான் யார் என்று தெரிகிறதா?', 'குரலை வைத்து ஆட்களை அடையாளம் காணமுடிகிறதா?' என்று என்னிடம் கேட்பதை நான் வெறுக்கிறேன்.

சிறு வயதிலேயே பாடத் தொடங்கிவிட்டேன். அப்பா முரளீதரன், அம்மா விமலா எனது இசைப் பயிற்சிக்கு ஆதரவளித்ததுடன், எனது இசைப் பயணத்திலும் உற்ற துணையாக இருந்தனர். பிரபலப் பின்னணிப் பாடகர் கே. ஜே. யேசுதாஸ்,

எம். எஸ். சுப்புலட்சுமி, பாலமுரளிகிருஷ்ணா மற்றும் செம்பை சுவாமிகள் போன்ற இசைக்கலைஞர்களின் பாடல்களைக் கேட்டு வளர்ந்தேன். பாடக் கற்றுக் கொண்டேன்.

காலப்போக்கில் தொழில்முறைப் பாடகியாகி, பல இந்திய மொழிகளில் பாடியுள்ளேன். 'ஒருவர் ஒரு பொருளை வாங்கிவிட்டு அதை என்னிடம் காட்டாமல் இருந்தால், நான் வருத்தப்படுவேன். பார்வையற்றவள் என்பதால் நான் புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறேன். நான் எதிர்பார்ப்பது சிறப்புச் சலுகைகளையல்ல; மாறாக அனைவருடனும் ஒருவராக என்னை இணைத்துக் கொள்ளப்படுவதையே நான் விரும்புகிறேன். அப்பா, அம்மா எனது கண்கள். அந்தக் கண்கள் மூலமாக நான் உலகைப் பார்க்கிறேன்.

மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று வந்தேன். எனது கண் பார்வை பிரச்னை விழித்திரையில் உள்ளதா அல்லது மூளையில் உள்ளதா என்பது குறித்து எல்லா மருத்துவர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. பார்வை இல்லாமலேயே அமைத்துக்கொண்ட வாழ்க்கையை ஏற்றுக்கொண்ட அதே வேளையில், பார்வை வந்துவிடாதா என்ற எதிர்பார்ப்பும் இல்லாமல் இல்லை.

என்னைத் திருமணம் செய்துகொண்டவர், இசைக்கு ஆதரவளிக்கவில்லை. நான் பாடுவதற்கான நேரத்தைக் கட்டுப்படுத்தினார். இசையைச் சார்ந்தே சுதந்திரத்தை... வாழ்க்கையை அமைத்துக்கொண்ட எனக்கு, இத்தகைய கட்டுப்பாடுகள் மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுத்தன.

அதனால் வேறுவழியில்லாமல் திருமண உறவிலிருந்து விலகினேன். எனக்கு இசை , பாடல்தான் எல்லாம். வாய்ப்பு கிடைக்கும் வரை பாடிக்கொண்டிருப்பேன்...' என்கிறார் வித்தியாசமான குரலுக்குச் சொந்தக்காரரான வைக்கம் விஜயலட்சுமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments