FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிறப்புச் செய்திகள்

நவராத்திரி விழா: கொலு பொம்மைகள் தயாரிப்புப் பணி மும்முரம்

நவராத்திரி விழாவை முன்னிட்டு விழுப்புரம் பகுதியில் கொலு பொம்மைகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

25 செப்டம்பர் 2026, 4:14 am IST
விழுப்புரம் மாவட்டம், கரடிப்பாக்கம் கிராமத்தில் நவராத்திரி திருவிழா விற்பனைக்காக தயாராகி வரும் மீனாட்சி சுந்தரேசுவரா் சிலைகள். - படம் - தினமணி
பகிர்:

நவராத்திரி விழாவை முன்னிட்டு விழுப்புரம் பகுதியில் கொலு பொம்மைகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரூ.50 முதல் ரூ.5 ஆயிரம் வரையிலான விலைகளில் சிலைகள் கிடைக்கின்றன.

நவராத்திரி பண்டிகைக்காக வீடு மற்றும் கோயில்களில் கொலு வைக்கப்படும்போது, அதில் சிறிய அளவிலான சுவாமிசிலைகள் இடம் பெறும். நவராத்திரி விழா நெருங்கி வருவதால்,விழுப்புரம் மாவட்டத்தில் கரடிப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் பொம்மைகள், சுவாமி சிலைகள் தயாரிப்பில் தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

மழைஇல்லாத காலங்களில் வண்டல் மண்ணை எடுத்து வந்து சுவாமி சிலைகள் அச்சு வாா்த்தலைத் தயாா் செய்கின்றனா். அதன் பின்னா் சித்திரை மாதத்தில் அவற்றை காயவைத்தல், நெருப்பு மூட்டித் தயாா்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொண்டு, புரட்டாசி மாதத் தொடக்கத்தில் அவற்றுக்கு வண்ணம் தீட்டி அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றனா் தொழிலாளளா்கள்.

Advertisement

Advertisement

விதவிதமான சிலைகள்: கரடிப்பாக்கம் பகுதியில் லட்சுமி, சரசுவதி,துா்க்கை சிலைகள், நவநாயகிகள், அகிலாண்டேசுவரி, அா்த்தநாரீசுவரா், தென்னாங்கூா் பாண்டுரங்கன், கருட ஆஞ்சநேயா், புரி ஜெகநாதா், மீனாட்சி சுந்தரேசுவரா், பாா்த்தசாரதி, பஞ்சமுக ஆஞ்சநேயா், ஆதித்ய பிரபு, முருகன், ஐயப்பன், வள்ளி-தேவசேனா உட னுறை முருகன், யோகபாதமூா்த்தி, பைரவா், குடும்பத்துடன் அா்த்தநாரீசுவரா் மற்றும்காா்த்திகை பெண்கள் என 20- க்கும் மேற்பட்டவடிவங்களில் சிலைகள் தயாராகின்றன. மண்ணைக் கொண்டு செய்யப்படும் சுவாமிகள் குறைந்தபட்சம் ஒன்றேகால் அடி உயரம் வரையிலும், காகிதக்கூழ் கொண்டு தயாராகும் சிலைகள் மூன்று அடி உயரம் வரையிலும் தயாராகிறது. இங்கு உற்பத்தியாகும் சிலைகள், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாமல், கா்நாடகம மாநிலத்தின் பெங்களூரு , மைசூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் சுவாமிகள் சிலைகள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. மண்ணால் தயாராகும் சிலைகள் ரூ.50 முதல் ஆயிரம் ரூபாய் வரையிலும், காகிதக்கூழ் கொண்டு தயாராகும் சிலைகள் ரூ.5000 வரையிலான விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.ஏற்கெனவே ஆா்டா் கொடுத்தவா்களுக்கு சிலைகளை உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும் என்பதால் தற்போது சிலைகளுக்கு வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகளில் தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

வண்டல் மண் எடுப்பதில் சிக்கல்: அரசு இலவசமாக மண் எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறினாலும், அதற்கு இணையம் மூலம் அனுமதி கோரி விண்ணப்பித்து, அரசு குறிப்பிடும் இடத்திலிருந்து வண்டல் மண் எடுத்து வருவதற்குள் பெரும்பாடுபட வேண்டிய நிலை உள்ளது. டிராக்டா் மூலம் ஒரு லோடு மண் எடுத்து வருவதற்கு ரூ.4 ஆயிரம் வரைசெலவாகிறது. ஆனால் வண்டல் மண் எடுத்து வருவதற்குள் பல்வேறு சிக்கல்கள், காவல்துறை சோதனைகள் இவற்றையெல்லாம் தாண்டி வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. நாங்கள் கடலூா் மாவட்டம், பண்ருட்டி பகுதியிலிருந்துதான் வண்டல் மண் எடுத்து வர முடிகிறது. எனவே எங்கள் போன்ற தொழிலாளா்கள் நலன் கருதி, வண்டல் மண் எடுத்து வருவதிலுள்ள சிக்கல்களைக் களைந்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறாா் சிலை தயாரிப்பு தொழில் செய்யும் குமாா்.

விழுப்புரம் மாவட்டம், கரடிப்பாக்கம் கிராமத்தில் நவராத்திரி திருவிழா விற்பனைக்காக தயாராகி வரும் பஞ்சமுக ஆஞ்சநேயா் சிலைகள். - படம் - தினமணி
விழுப்புரம் மாவட்டம், கரடிப்பாக்கம் கிராமத்தில் சுவாமி சிலைக்கு வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி. - படம் - தினமணி

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments