FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தலைமுறைகள் கடந்தும் பாரம்பரியம்...

நவராத்திரி விழாவில் கோயில்கள், வீடுகளில் மக்கள் கொலு வைத்து நண்பர்கள், உறவினர்களை அழைத்து பிரசாதம் வழங்குதல் தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்படுகிறது.

10 அக்டோபர் 2026, 7:53 pm IST
பகிர்:

ஆர்.கணேசன்

நவராத்திரி விழாவில் கோயில்கள், வீடுகளில் மக்கள் கொலு வைத்து நண்பர்கள், உறவினர்களை அழைத்து பிரசாதம் வழங்குதல் தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்படுகிறது. நவராத்திரி கொலுவில் வைக்கப்படும் பொம்மைகள் தயாரிப்பில், மதுரையின் 'விளாச்சேரி பொம்மைகள்' புவிசார் குறியீடு பெற்றதோடு பாரம்பரியம், கலை, கலாசாரத்தைப் பறைசாற்றி வருகிறது. மதுரைத் தமிழின் தொன்மையைப் போல், கைவினைக் கலைஞர்களின் பெருமைகளில் ஒன்றான விளாச்சேரி பொம்மைகள் தலைமுறைகள் கடந்தும் நிலைத்திருக்கின்றன.

மதுரை- திருமங்கலம் சாலையில், விளாச்சேரி கிராமத்தில் பாண்டியக் குலாலர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது முந்தைய தலைமுறையினர் போன்று பொம்மைகள் தயாரிப்பில் 1965-ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டு முழுவதும் வேலை இருக்கின்ற சூழ்நிலையில் சூளை போடுதல், சாக் பவுடர், ஃபினிசிங், ஒய்ட் எமர்சன் பெயிண்ட் அடித்தல், வர்ணம் பூசிக் கண் திறத்தல் என்று தொடர்ந்து பொம்மைகள் ஒவ்வொரு கட்டமாகத் தயாராகின்றன.

Advertisement

Advertisement

சீசனுக்கேற்ற வகையில் விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி கொலுப் பொம்மைகள் களிமண்ணாலும் காகிதக் கூழாலும் தயாராகின்றன. பிளாஸ்டர் ஆஃப் பாரிசில் கிறிஸ்துமஸ் (பதினெட்டு பொம்மைகள் கொண்ட செட்) குடில்கள் மட்டும் செய்யப்படுகிறது.

ஐந்து படிகள் கொண்ட கொலு செட், தசாவதாரம், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, மீனாட்சி தாரை வார்த்துக் கொடுத்தல், ஸ்ரீனிவாசா கல்யாணம், திருவண்ணாமலை அருணாசலேசுவரர், அஷ்டலட்சுமி, திருமண செட், லிங்கம், நந்தி, சிவன் பார்வதி எனப் பல வடிவங்களில் ஜொலிக்கின்றன.

இந்த வருடம் விநாயகர் கோயில், பெருமாள் கோயில் குடமுழுக்கு செட், நவதுர்கா செட், நவ நடராஜர் செட், பதினெட்டு சித்தர்கள் செட், மாயா பஜார் செட், கோவர்த்தனகிரி, புரி ஜெகன்னாதர் செட், ஐந்து பெருமாள் உள்ளிட்ட பொம்மைகள் புதிதாக களத்துக்கு வந்திருக்கின்றது.

மதுரை விளாச்சேரி குலாலர் கைவினைக் கலைஞர்கள் சங்கத்தின் கெளரவத் தலைவர் எம்.ராமலிங்கத்திடம் பேசியபோது, அவர் கூறியது:

'கிராமக் கோயில் பூசாரியாக இருந்துள்ளதால், சுவாமி சிலை, புரவி எடுப்புச் சிலை செய்திருக்கிறேன். இந்தக் களிமண் சிலைகள், பொம்மைகள் 100 ஆண்டுக்கும் மேலாக அப்படியே இருக்கும். 2025-ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு பெற அதற்கான ஆதாரங்களுடன் முயற்சி எடுத்தோம். ஒரு வருடம் இதற்கான ஆய்வுகள் சென்றது.

தில்லியிலிருந்து 35 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் குழுவினர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் வந்து பார்வையிட்டனர். விளக்கங்களைச் சொன்னோம். அதன்பிறகு புவிசார் குறியீடு கிடைத்தது.

விழுப்புரம், பண்ருட்டி உள்ளிட்ட நகரங்களில் இருந்து சூளைகளில் பொம்மைகள் வாங்கி வந்து, அந்தப் பொம்மைகளுக்கு சாக் பவுடர் முதல் ஆயில் பெயின்ட் அடி த்து ஃபினிசிங் பண்ணி பொம்மைகள் தயாராகின்றன.

காதி கிராமத் தொழில் வாரியம், மாவட்டத் தொழில் மையம் மூலமாக 25 இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை இரண்டு மாதம் தொடர்ந்து அளிக்கிறது. பயிற்சி முடிந்தவுடன் அரசுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. பெண்களுக்கு 35 சதவீதமும், ஆண்களுக்கு 20 சதவீத மானியத்துடன் வங்கிக் கடன் உதவி அளிக்கப்படுகிறது. ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு இளைஞர்கள் விரும்பி இந்தத் தொழிலுக்கு வருகிறார்கள்.

களிமண் பொம்மைகள் மூன்று இஞ்ச் முதல் பதினைந்து இஞ்ச் வரையும், காகிதக்கூழ்ப் பொம்மைகள் அடிக்கணக்கிலும் கிடைக்கும். கடவுள் சிலைகள், அரசியல் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் என விதவிதமாகப் பொம்மைகளைத் தயாரித்து வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கிறோம்.

பல ஆண்டுகள் வீடுகளில் பத்திரமாக வைத்திருக்கும் பொம்மைகளுக்கு ரீபெயின்ட் செய்தும் தருகிறோம்' என்கிறார் ராமலிங்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments