உருவாகும் நவராத்திரி கொலு!
நவராத்திரி என்றாலே வீடுகள், கோயில்கள்தோறும் களைகட்டும் கொலு நினைவுக்கு வரும்.
பொ.ஜெயச்சந்திரன்
நவராத்திரி என்றாலே வீடுகள், கோயில்கள்தோறும் களைகட்டும் கொலு நினைவுக்கு வரும். படிப்படியாக அடுக்கி வைக்கப்படும் வண்ணமயமான பொம்மைகள், அவற்றைச் சுற்றி ஒலிக்கும் பக்திப் பாடல்கள், குழந்தைகளின் குதூகலம், உறவினர்களின் வருகை என நவராத்திரி நாள்கள் தனி அழகைப் பெறுகின்றன.
அந்தக் கொலு பொம்மைகளைத் தங்களது கைகளாலேயே உருவாக்கி, அவற்றைக் கோயில்களுக்கு வழங்கும் எண்ணத்துடன் மாணவ, மாணவியர் கடந்த மூன்று மாதங்களாக உழைத்து வருவது இந்த நவராத்திரிக்கு மேலும், ஒரு சிறப்பைச் சேர்த்துள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து தென்காசி நகரில் உள்ள மேலகரத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் பார்வதி பாலாவிடம் பேசியபோது:
'இயற்கை வண்ணங்களைத் தயாரித்து ஓவியம் வரைவேன். விதைகள், தேங்காய் ஓடுகள், களிமண்ணைப் பயன்படுத்தி அணிகலன்கள் செய்துள்ளேன். ஓவியக் கண்காட்சியையும் நடத்தியுள்ளேன்.
தென்காசி காசி விசுவநாதர் கோயிலில் கடந்த ஆண்டு முதல் நவராத்திரி நிகழ்வில் பல்வேறு விதமான கொலு பொம்மைகள் வைக்கப்பட்டன. அதில், எங்கள் ஆடலி கலைப் பள்ளி மாணவர்கள் குழுவாக இணைந்து ஆலமரத்தடியில் கண்ணன் புல்லாங்குழல் வாசிப்பது, அந்த இசையில் மெய்மறந்து ரசிக்கும் கால்நடைகள், வனவிலங்குகள், பறவைகள் ஆகியவற்றை பொம்மைகளாகச் செய்து காட்சிப்படுத்தினோம்.
இந்த ஆண்டும் கொலு நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பதற்காக, பண்டைய தமிழர்களின் ஐந்து வகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றைக் கருவாக எடுத்துள்ளோம். அந்தந்த நிலத்துக்குரிய தெய்வம், மக்கள், விலங்குகள், பறவைகள், மலர்கள் மற்றும் அவர்களது தொழில்கள் போன்றவற்றை பொம்மைகளாக கடந்த மூன்று மாதங்களாக மாணவர்கள் செய்து வருகின்றனர்.
இதில் மான், புலி, யானை, காளை, பசு, முயல், எருமை, மக்கள், வீடுகள், கடவுள், கொற்றவை, மலை, காடு, வயல்வெளி, தாமரைக் குளம், கடல், படகு, வறண்ட நிலம், நாரைகள், அன்னப்பறவை, புறாக்கள், நீர், காகம் மற்றும் பழைமையான மரங்கள் போன்ற பொம்மைகள் அடங்கும். களிமண் காகிதம், காகிதக் கூழ், கட்டுக்கம்பிகள், வேர்கள், காய்ந்த இலைகள் , புற்கள், காய்ந்த தண்டுகள், தற்சார்பு வண்ணங்கள், மூங்கில் குச்சிகள், மரக்குச்சிகள், குட்டைகள், நூல், நார் வகைகள் போன்றவற்றை மூலப் பொருள்களாகக் கொண்டு பொம்மைகள் செய்துள்ளோம்.
பல்வேறு விதமான பொம்மைகளைச் செய்கையில் பலவிதமான கற்றலும் கிடைக்கிறது. மாணவர்களின் கற்பனைத் திறன் அதிகரிப்பதையும் காண்கிறோம். ஒவ்வொரு பொம்மையின் பின்னாலும், மாணவரின் நேரமும், உழைப்பும் இருக்கிறது. தாங்கள் உருவாக்கிய ஒரு சிறிய பொம்மை, கோயிலில் பலராலும் பார்க்கப்படும் என்பது அவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இது பாரம்பரியம் அடுத்த தலைமுறையிடமும் தொடர்கிறது என்பதற்கான அழகான அடையாளமாகும்' என்கிறார் பார்வதி பாலா.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.