சிவகங்கை அருகே பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை
சிவகங்கை வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வெட்டிக் கொலை.
சிவகங்கை: சிவகங்கை அருகே வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பாஜக கூட்டுறவு பிரிவு சிவகங்கை மாவட்டச் செயலராக இருந்து வந்தவர் வேலாங்குளத்தை சேர்ந்த செல்வகுமார் (53). இவர் அதே பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார்.
இவர் நேற்று (சனிக்கிழமை) இரவு தனது இரு சக்கர வாகனத்தில் சிவகங்கை இளையான்குடி சாலையில் சென்றபோது மர்ம நபர்கள் செல்வகுமாரை வழிமறித்து வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
Advertisement
அவ்வழியாக வந்த அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வகுமாரை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த 108 ஊழியர்கள் அவரை பரிசோதித்த பின், அவர் இறந்து விட்டதாக கூறினர்.
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த சிவகங்கை தாலுகா காவல் துறையினர் அவரின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிராம மக்கள் சாலை மறியல்
இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அங்கேயே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடம் வந்த காவல் துறையினர் அவர்களை சமாதானம் செய்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்ல முயற்சித்தனர். ஆனால் அவர்கள் சமாதானம் ஆகாமல் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்யக் கோரி மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட கண்காணிப்பாளர் டேங்கரே பிரவீன் உமேஷ் நேரில் வந்து குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை அடுத்து தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்
மூன்று நாள்களில் தொடர்ச்சியாக நடைபெற்ற 3 கொலை சம்பவங்களால் சிவகங்கை மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.