முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆட்டோ ஓட்டுநரால் தாக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ மரணம்!

கர்நாடகத்தில் ஆட்டோ ஓட்டுநரால் தாக்கப்பட்ட கோவாவின் முன்னாள் எம்எல்ஏ மரணமடைந்துள்ளதைப் பற்றி...

Updated On : 16 பிப்ரவரி 2025, 4:22 pm IST
கோவா மாநில முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் லாவூ மாம்லெட்தார்.
பகிர்:

கர்நாடகத்தில் ஆட்டோ டிரைவரின் தாக்குதலுக்கு ஆளான கோவா மாநில முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

கோவாவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான லாவூ மாம்லெட்தார் (வயது 69) கர்நாடகத்தின் பெல்காவி மாவட்டத்திற்கு நேற்று (பிப்.15) தொழில் ரீதியான பயணமாக தனது காரில் வந்துள்ளார். அப்போது, வழியில் அவரது கார் ஓர் ஆட்டோவை மோதியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அந்த ஆட்டோ ஓட்டுநர் மாம்லெட்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், தனது ஆட்டோவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு இழப்பீடாக அவர் பணம் கேட்க அதற்கு மாம்லெட்தார் மறுத்துள்ளார். இதனால், கோவமடைந்த அந்த ஆட்டோ ஓட்டுநர் மாம்லெட்தாரை பல முறை தாக்குவது அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

Advertisement

இதையும் படிக்க: எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை தேவை: சசி தரூர்

பின்னர், பெல்காவியில் அவர் தங்கியுள்ள விடுதி அறைக்கு சென்ற அவர் அங்குள்ள மின் தூக்கியில் ஏறியபோது மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக, அவர் மீட்கப்பட்டு மருத்துவமனை அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மரணமடைந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த அம்மாநில காவல் துறையினர் அந்த ஆட்டோ ஓட்டுநரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, கோவா நகர காவல் துறை உயர் அதிகாரியாக பணியாற்றிய லாவூ மாம்லெட்தார் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு அம்மாநில சட்டப்பேரவை உறுப்பினராக 2017 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகிய அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.