முகப்பு
தற்போதைய செய்திகள்

தேர்தல் ஆணையத்தை கண்டித்து டிச. 4-இல் தில்லியில் ஆா்ப்பாட்டம்: ராமதாஸ்

தேர்தல் ஆணையத்தின் மோசடி நடவடிக்கையை கண்டித்தும், நீதி கேட்டும் தில்லியில் டிச.4-இல் போராட்டம் நடைபெறும்...

Updated On : 30 நவம்பர் 2025, 7:59 pm IST
பாமக நிறுவனர் ராமதாஸ் - IANS
பகிர்:

தேர்தல் ஆணையத்தின் மோசடி நடவடிக்கையை கண்டித்தும், நீதி கேட்டும் தில்லியில் டிச.4-இல் போராட்டம் நடைபெறும் என பாமக நிறுவனா் ச.ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

1980-ல் பாமக இயக்கம் தொடங்கி தற்போது வரை வரை 46 ஆண்டுகள் கட்சி நடத்தி வருகிறேன். கடந்த காலத்தில் சாலை வசதி, மின்சார வசதி இல்லாத நிலையில் வயல் வரப்பில் நடந்து சென்றோம். பல கூட்டங்களில் பேசி 96,000 கிராமங்களுக்குச் சென்று கட்சி வளா்த்து சமூக நீதியை உயிா் மூச்சு கொள்கையாகக் கொண்டு மக்கள் மேம்பட ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு குரல் கொடுத்தும் போராடியும் வருகிறேன்.

Advertisement

Advertisement

தமிழ்நாட்டில் வன்னியர்கள் உள்ளிட்ட மிக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20% இட ஒதுக்கீடும், அருந்ததியர்களுக்கு 3% இட ஒதுக்கீடும் முஸ்லிம்களுக்கு 3.5% இட ஒதுக்கீடும் பெற்றுக்கொடுத்தேன். அதன் பின் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடும் பெற்றுக்கொடுத்தேன். ஆனால் இது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்திய அளவில் மத்திய கல்வி நிறுவனங்களின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27% இட ஒதுக்கீடு மத்திய மருத்துவ படிப்பில் பட்டியலின பழங்குடியினர் எஸ்சி-எஸ்டி வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்ததை நாடே அறியும்.

நான் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சிக்கு பேராசிரியர் தீரன் தலைவராக இருந்து செயல்பட்டார். அடுத்து ஜி.கே.மணி 25 ஆண்டு காலம் தலைவராக செயல்பட்டு வந்தார். அடுத்து அன்புமணி தலைவராக விரும்பியதால் சென்னை அடுத்துள்ள திருவேற்காடு ஜிபிஎன் பேலஸில் 28.5.2022 இல் பொதுக்குழுவை கூட்டி தலைவராக தேர்ந்தெடுத்து அறிவித்தேன். ஆனால் அன்புமணி சதி திட்டம் தீட்டி 2023 பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக போலியான ஆவணங்களை தில்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் கொடுத்து தேர்தல் ஆணையத்தை கையில் போட்டுக்கொண்டு 2026 வரையில் பதவியில் நீடிப்பதாக தேர்தல் ஆணையம் கடிதம் கொடுத்துள்ளது. இது மிகப்பெரிய கண்டனத்துக்குரியது. இது தேர்தல் ஆணையத்தின் மோசடியான துரோக நடவடிக்கை ஆகும்.

தேர்தல் ஆணையம் அன்புமணிக்கு உடந்தையாக உள்ளது. அன்புமணி கட்சியை என்னிடமிருந்து சூழ்ச்சியால் பறித்துக் கொண்டது கட்சி திருட்டு செயல். தேர்தல் ஆணையம் கட்சியை என்னிடமிருந்து பறித்து அன்புமணிக்கு திருடி கொடுத்துள்ளது. இப்படி எனது கட்சியை பறித்துக்கொண்டது என் உயிரை பறித்ததாகும். 46 ஆண்டு காலம் உழைத்து போராடிய என்னிடமிருந்து பறித்துக் கொண்டது சொல்ல முடியாத உயிர் பரிபோன செயல் கண்ணீர் வடிக்கிறேன். கலங்கி நிற்கிறேன்.

இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். எனது கட்சி என்கைக்கு வரும் என நம்பிக்கையோடு இருக்கிறேன்.

எனவே, தோ்தல் ஆணையத்தின் மோசடி நடவடிக்கையை கண்டித்தும், நீதி கேட்டும் டிச. 2 ஆம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் பாமக கெளரவ தலைவா் ஜி.கே.மணி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும். தொடா்ந்து புது தில்லியில் வரும் டிச. 4-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

இதில் இன்னாள், முன்னாள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட, ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பெருந்திரளாக கலந்து கொள்வார்கள் என அவர் கூறியுள்ளார்.

summary

Protest in Delhi on Dec. 4 against Election Commission says Ramadoss

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.