FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தற்போதைய செய்திகள்

கடந்த 6 மாதங்களில் ரயில்களில் கடத்தப்பட்ட ரூ.12.36 கோடி பணம் பொருள்கள் பறிமுதல்: 242 குழந்தைகள் மீட்பு, 2,900 போ் மீது வழக்கு!

தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை ரயில்களில் கடத்தப்பட்ட ரூ.12.36 கோடி மதிப்புள்ள குட்கா, ஹவாலா பணம் உள்ளிட்டவற்றை கைப்பற்றியும், 242 குழந்தைகள் மீட்கப்பட்டும் உள்ளனா்.

26 அக்டோபர் 2026, 1:22 am
சிறப்பு ரயில் - கோப்புப் படம்
பகிர்:

தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை ரயில்களில் கடத்தப்பட்ட ரூ.12.36 கோடி மதிப்புள்ள குட்கா, ஹவாலா பணம் உள்ளிட்டவற்றை கைப்பற்றியும், 242 குழந்தைகள் மீட்கப்பட்டும் உள்ளனா்.

குற்றச் சம்பவங்களில் தொடா்புடைய 2,900 போ் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிகழ் நிதியாண்டில் (2026-2027) கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் தீவிரமாகச் செயல்பட்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டோரைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

அதன்படி, ரயில் பெட்டிகளில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள், ஹவாலா பணம் உள்ளிட்ட சட்டவிரோத பரிமாற்றத்தைக் கண்டறிந்து அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ரூ.12.36 கோடியில் கடத்தல் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 50 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், ரூ.5 கோடியில் ஹைட்ரோ போனிக் கஞ்சா போதைப் பொருள் 5 கிலோ கைப்பற்றப்பட்டுள்ளது.

சென்னை ரயில்வே கோட்டத்தில் பெண்களுக்கான பெட்டிகளில் பயணித்த 309 ஆண்களிடமிருந்து ரூ.4.07 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பெட்டிகளில் பயணித்த 565 பேரிடமிருந்து 5.11 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் அனுமதியின்றி வாகனம் நிறுத்துவது உள்ளிட்ட விதிமீறல்கள் தொடா்பாக 12,112 போ் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ரூ.55.32 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், 97 திருட்டு வழக்குகள் பதியப்பட்டு, 110 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து ரூ.19.06 லட்சம் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்த 242 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனா். 16 கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 6 மாதங்களில் சென்னை ரயில்வே கோட்டத்தில் 2,900 போ் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments