கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடக் கூடாதா? குங்குமப் பூ சாப்பிட்டால் என்னவாகும்?
கர்ப்ப காலம் குறித்த தவறான நம்பிக்கைகளும் அதுபற்றிய உண்மைகளும்...
- சிந்துஜா ஜேன்
கர்ப்ப காலத்தில் குங்குமப் பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும், வயிற்றின் வடிவத்தை வைத்தது குழந்தையின் பாலினத்தைக் கணிப்பது, பப்பாளி சாப்பிடக் கூடாது, உடற்பயிற்சி செய்யக் கூடாது... இவ்வாறு கர்ப்ப காலத்தில் பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன. இதெல்லாம் உண்மைதானா?
கர்ப்ப காலம் குறித்த தவறான நம்பிக்கைகளுக்கு விளக்கமளிக்கிறார் சென்னை, 'ஜெயஸ்ரீ பெண்கள் ஸ்பெஷாலிட்டி கிளினிக்'கின் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர் ஜெயஸ்ரீ சர்மா.
Advertisement
Advertisement
தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்
கர்ப்பிணிப் பெண்கள், இருவர் சாப்பிடும் அளவுக்கு உணவு சாப்பிட வேண்டும்
அப்படி நேரடியாக அர்த்தம் கொள்ளக் கூடாது. இதனால் உடல் எடை அதிகமாக கூடுவதற்கு வழிவகுத்துவிடும். கர்ப்ப காலத்தில் அதிக எடை, கூடுதல் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் குழந்தையின் எடை அதிகரிப்பிற்குமான சத்துகளை உணவின் மூலமாக பெற வேண்டும் என்பதையே மருத்துவர்கள் வலியுறுத்துவார்கள்.
உணவின் அளவை அதிகரிப்பதைவிட, ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து, புரதம், கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது அவசியம்.
வயிற்றின் வடிவத்தை வைத்து கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கணிக்க முடியும்
இது ஒரு தவறான நம்பிக்கை. ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று ஊகிக்கும்போது 50% அவர்களின் கணிப்பு சரியாக அமையலாம். தாயின் வயிற்றின் வடிவம் என்பது அவரது உடல்வாகு மற்றும் குழந்தையின் நிலை ஆகியவற்றைப் பொறுத்தது. தாயின் உயரம், தசை வலிமை, இடுப்பு எலும்புகளின் அமைப்பு, குழந்தையின் அளவு, நிலை ஆகியவையே வயிற்றின் வடிவத்தைத் தீர்மானிக்கின்றன.
குங்குமப்பூ கலந்த பாலைக் குடித்தால் குழந்தை சிவப்பான நிறத்துடன் பிறக்கும்.
இது உண்மையல்ல. குங்குமப்பூவில் பல அரிய தாவர வேதிப்பொருள்கள் உள்ளன. இது கர்ப்பிணிப் பெண்களுக்குப் பல நன்மைகளைத் தருகிறது. இது பதற்றத்தைக் குறைத்து மனதை அமைதிப்படுத்துவதுடன், இரும்புச்சத்து போன்ற முக்கிய சத்துக்களையும் அளிக்கிறது. குங்குமப்பூ கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே நல்லது.
கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி சாப்பிடக் கூடாது, அது கருச்சிதைவை ஏற்படுத்தும்.
கருச்சிதைவை ஏற்படுத்தும் எந்த வேதிப்பொருளும் பப்பாளி பழத்தில் இல்லை. பொதுவாக கருச்சிதைவு என்பது குழந்தை ஆரோக்கியமாக இல்லாத காரணத்தினாலேயே நிகழ்கிறது. இது குழந்தையின் வளர்ச்சியில் உள்ள குறைபாடுகளைப் பொறுத்தது. பப்பாளியில் கருப்பையைச் சுருங்கச் செய்யும் ஒரு வேதிப்பொருள் உள்ளது. இது வயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்தலாமே தவிர, கருச்சிதைவை உண்டாக்காது. அனைத்துப் பழங்களும் பாதுகாப்பானவைதான்.
'மார்னிங் சிக்னஸ்' எனும் கர்ப்ப கால குமட்டல்/ வாந்தி என்பது காலையில் மட்டுமே ஏற்படும்
பொதுவாக காலையில் தூங்கி எழுந்தவுடன் கர்ப்பிணிகள் வாந்தி எடுப்பதால் இந்த பெயர் வந்தது. ஆனால், குமட்டல், குறிப்பிட்ட உணவுகள் அல்லது வாசனைகள் மீதான வெறுப்பு ஆகியவை நாள் முழுவதும் இருக்கலாம். இது காலையில் மட்டும் ஏற்படும் பிரச்னை அல்ல, நாள் முழுவதும் நீடிக்கக் கூடியது. இது 'நார்மல் டெலிவரி' எனும் யோனி வழி பிரசவத்திற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது. இருப்பினும் நார்மல் டெலிவரி மற்ற காரணிகளையும் பொறுத்தது.
கர்ப்பிணிகள் உடற்பயிற்சி செய்யக் கூடாது; ஆபத்தானது.
கர்ப்பிணிகள் உடல் ஆரோக்கியத்துடனும் உடல் நெகிழ்வுத்தன்மையுடனும் இருக்கச் சில உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அதிகச் சிரமம் தரும் பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். மிதமான உடற்பயிற்சிகள் தாய்க்கும் குழந்தைக்கும் நல்லது. இது தாயைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். ஒரு 'பிசியோதெரபிஸ்ட்' உதவியுடன் இந்தப் பயிற்சிகளைச் செய்வது சிறந்தது.
பொதுவாக, கர்ப்பத்தின் 20-வது வாரத்திற்குப் பிறகு அனைத்து வகையான உடற்பயிற்சிகளையும் செய்யுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம். 20 வாரங்களுக்கு முன் நடைப்பயிற்சி போன்ற சாதாரணப் பயிற்சிகளைச் செய்தாலே போதுமானது.
தமிழில்: எம். முத்துமாரி
Myths and facts about pregnancy and pregnancy period
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.