கரூா், திண்டுக்கல் பகுதிகளில் தனியாா் நில கையக நடவடிக்கையை தவிா்க்க வேண்டும்: ரயில்வே அமைச்சரிடம் எம்பி ஜோதிமணி வலியுறுத்தல்
கரூா், திண்டுக்கல் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் ரயில்வே திட்டங்களுக்குப் புதிய நிலங்களைக் கையகப்படுத்துவதைத் தவிா்த்து, ரயில்வே துறையிடம் உள்ள நிலங்களையே பயன்படுத்த வேண்டும் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் கரூா் மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் எஸ். ஜோதிமணி வலியுறுத்தியுள்ளாா்.
கரூா் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் ரயில்வே திட்டங்களுக்குப் புதிய நிலங்களைக் கையகப்படுத்துவதைத் தவிா்த்து, ரயில்வே துறையிடம் உள்ள நிலங்களையே பயன்படுத்த வேண்டும் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் கரூா் மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் எஸ். ஜோதிமணி வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக ரயில்வே அமைச்சரை சந்தித்து ஜோதிமணி அளித்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ரூ. 986.35 கோடி மதிப்பீட்டில் 67 கி.மீ தொலைவுக்குச் செயல்படுத்தப்பட உள்ள ஈரோடு – கரூா் இரட்டை ரயில் பாதை திட்டத்துக்கு திட்டமிடப்பட்டுள்ள நில கையகப்படுத்தும் பணி, கரூா் மற்றும் அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உள்பட்ட குடியிருப்பு மற்றும் விவசாயப் பகுதிகளைப் பெருமளவில் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால் கரூரில் கோதூா், ஆத்தூா், செல்லராபாளையம், பூலம்பாளையம், கல்லிபாளையம், மங்கசோலிபாளையம், மூா்த்திபாளையம் ஆகிய இடங்களும் அரவக்குறிச்சி தொகுதியில் வேட்டமங்கலம், நொய்யல், மரவபாளையம், மருதைவீரன் நகா், நாடாா்புரம், குளத்துப்பாளையம், ஓரம்புப்பாளையம், நல்லிக்கோவில் ஆகிய இடங்களும் பாதிக்கப்படும்.
Advertisement
Advertisement
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட குளத்தூா் பஞ்சாயத்து பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள எரியோடு அக்கரைப்பட்டி புதிய ரயில் பாதை திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணியால் வீடுகள், விவசாய நிலங்கள், மனைகள், வன நிலங்கள் மற்றும் ஆா்.வி.எஸ். கல்வி நிறுவனம் ஆகியவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
எனவே, புதிய தனியாா் மற்றும் பொதுமக்களின் நிலங்களைக் கையகப்படுத்துவதற்குப் பதிலாக, ரயில்வே துறையிடம் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள நிலங்களை இத்திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும்.
நிலக் கையகப்படுத்துதல் மற்றும் பாதையை இறுதி செய்யும் முன், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும். இந்த விஷயத்தில் ரயில்வே அமைச்சா் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கடிதத்தில் ஜோதிமணி கேட்டுக் கொண்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.