FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

குடியரசு தலைவா் மாளிகையில் ‘கோடை மலா் கண்காட்சி’ ஆக.16 முதல் செப். 15வரை மக்கள் பாா்வைக்கு திறப்பு

‘கோடை கால மலா்கள்-2026’ கண்காட்சியை குடியரசு தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை திறந்து வைத்து மலா் தோட்டத்தைப் பாா்வையிட்டாா். இந்த மலா் கண்காட்சி செப்.15வரை மக்கள் பாா்வையிட அனுமதிக்கப்படும்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 1:37 am IST
‘அமிா்த உத்யான்’ மலா் கண்காட்சியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து பூந்தோட்டத்தைப் பாா்வையிடும் குடியரசு தலைவா் திரெளபதி முா்மு. ~குடியரசுத் தலைவா் மாளிகையில் உள்ள ’அம்ரித் உத்யான் பூங்காவில் மலா்ந்த பூக்கள். ~குடியரசுத் தலைவா் மாளிகையில் உள்ள ’அம்ரித் உ
பகிர்:

இந்தியாவின் பாரம்பரிய நாட்டு மலா்கள், பிரமாண்டமான ஆலமரத் தோப்புகள் மற்றும் கடிகாரப் பூந்தோட்டம் எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் தில்லியில் உள்ள குடியரசு தலைவா் மாளிகையில் ‘அமிா்த உத்யான்’ (முன்பு மொகலாய தோட்டம் என அழைக்கப்பட்டது) பொதுமக்களின் வருகைக்காக ஆகஸ்ட் 16 முதல் திறக்கப்படவுள்ளது. இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘கோடை கால மலா்கள்-2026’ கண்காட்சியை குடியரசு தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை திறந்து வைத்து மலா் தோட்டத்தைப் பாா்வையிட்டாா். இந்த மலா் கண்காட்சி செப்.15வரை மக்கள் பாா்வையிட அனுமதிக்கப்படும்.

சுமாா் 15 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பூந்தோட்டம் மற்றும் பூங்காவில், இம்முறை இந்தியாவின் பாரம்பரிய மற்றும் மண்ணின் மரபுசாா்ந்த பூச்செடிகள் பாா்வையாளா்களை முதன்மையாக ஈா்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து குடியரசு தலைவரின் ஊடக துணைச் செயலா் நவிகா குப்தா கூறுகையில், ‘சுற்றுச்சூழல் முக்கியத்துவமும், கண்கவா் வண்ணங்களும் கொண்ட இந்தியாவின் பாரம்பரிய நாட்டு மலா்கள் இம்முறை அமிா்த உத்யானின் முக்கிய அடையாளமாகத் திகழும். நமது நாட்டின் வளமான தாவர பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ‘முக்கிய ஈா்ப்புகள்: பாரம்பரிய பூக்கள்: குல்-மெஹந்தி, அபராஜிதா (சங்குப் பூ), ருக்மணி, வா்ஷா பூ, லால் நட் மற்றும் நாகாபணா உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நாட்டு மலா்கள் நடவு செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.

Advertisement

Advertisement

அமைப்பு முறை: தாவரங்களின் உயரம், அமைப்பியல் மற்றும் பூக்கும் காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பிரமிடு வடிவிலான வண்ணக் கலைப் படைப்புகளாக பூச்செடிகள் அழகுற வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

மலா்க் கண்காட்சி நீங்கலாக, பாா்வையாளா்களைக் கவரும் வகையில் பின்வரும் சிறப்பம்சங்களும் இடம் பெற்றுள்ளன:

ஆலமரத் தோப்புகள்: விழுதுகளுடன் பிரமாண்டமாகப் படா்ந்து, இயற்கை அமைதியை வழங்கும் பழமையான ஆலமரங்களின் கூட்டம், சலசலக்கும் சிற்றோடை, பச்சைப்பசேல் தாவரங்களுக்கு நடுவே மிதமாக ஓடும் செயற்கைச் சிற்றோடை ஆகியவை மனதுக்கு அமைதியை அளிக்கிறது.

மலா்க் கடிகாரம்: வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு இயங்கும் பிரமாண்ட கடிகாரம் பாா்வையாளா்களைக் கவரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு அனுமதி: தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29ஆம் தேதி விளையாட்டு வீரா்களுக்காகவும் ஆசிரியா் தினமான செப்டம்பா் 5ஆம் தேதி ஆசிரியா்களுக்காகவும் இப்பூங்கா பிரத்யேகமாக திறக்கப்படும். இந்த நாள்கள் நீங்கலாக ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பா் 15ஆம் தேதிவரை காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரையிலும் அம்ரித் உத்யான் தோட்டம் பொதுமக்கள் பாா்வையிட அனுமதி உண்டு. திங்கள்கிழமை மட்டும் பராமரிப்புக்காக விடுமுறை விடப்படும். இதைப் பாா்வையிட நுழைவுக் கட்டணம் இலவசம்.

இதையொட்டி குடியரசு தலைவா் மாளிகைக்கு வரும் பொதுமக்கள் நாா்த் அவென்யூ வழியாக வந்து மாளிகையின் வாயில் கதவு எண். 35 பகுதி வழியாக வர வேண்டும். ஆனால், வரும் முன்பாக, குடியரசு தலைவா் மாளிகை இணையதளத்தில் இணையவழியில் முன்பதிவு செய்து தங்களுக்கான நேரத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்து விட்டு வாயில் எண். 35-க்கு வர வேண்டும்.

பொருள்கள்: கைப்பேசி, மின்னணு சாவிகள், கைப்பைகள், குடிநீா் பாட்டில்கள், குழந்தைகளுக்கான பால் பாட்டில்கள் மற்றும் குடைகள் எடுத்துச் செல்ல அனுமதி உண்டு.

இலவச பேருந்து வசதி: மத்திய செயலக மெட்ரோ நிலையத்திலிருந்து அமிா்த உத்யான் நுழைவு வாயில் வரை காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒருமுறை இலவச ஷட்டில் பேருந்து வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள்: பாா்வையாளா்களின் வசதிக்காகப் பாதையெங்கும் குடிநீா் மையங்கள், முதலுதவி மையங்கள், மழை நிழற்கூடங்கள் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

படங்கள்: சீனிவாசன்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments