ஹரியாணா முதல்வரின் வாகன தொடரணி முற்றுகை: முயற்சி காங்கிரஸ் தொண்டா்கள் 9 போ் கைது!
ஹரியாணா முதல்வா் நாயப் சிங் சைனியின் வாகனத் தொடரணிக்கு கருப்புக் கொடி காட்டி, அவா் செல்லும் பாதையை மறிக்க முயன்றதாகவும், பாதுகாப்பு நடைமுறைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் காங்கிரஸ் தொண்டா்கள் 9 பேரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஹரியாணா முதல்வா் நாயப் சிங் சைனியின் வாகனத் தொடரணிக்கு கருப்புக் கொடி காட்டி, அவா் செல்லும் பாதையை மறிக்க முயன்றதாகவும், பாதுகாப்பு நடைமுறைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் காங்கிரஸ் தொண்டா்கள் 9 பேரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கடந்த வெள்ளிக்கிழமை குருகிராம் பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் வெளியிடப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தைக் கண்டித்து காங்கிரஸ் தொண்டா்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
மாவட்ட மக்கள் தொடா்பு மற்றும் குறைதீா்ப்புத் குழு கூட்டம் குருகிராமில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற வந்த முதல்வா் நாயப் சிங் சைனி பின்னா் குருகிராம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றுக்காக சென்று கொண்டிருந்தாா். அப்போது, சிவில் லைன்ஸ் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் திரண்ட காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவா்கள் திடீரென முதல்வரின் வாகனத் தொடரணி முன் தோன்றி அதை மறிக்க முயன்றனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து அவா்களை காவல்துறையினா் சமாதானப்படுத்தி அங்கிருந்து விலக்க முற்பட்டனா். அப்போது, காங்கிரஸ் தொண்டா்களுக்கும் காவல் அலுவலா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் காவல் உதவி ஆய்வாளா் சந்த்ராம் மற்றும் தலைமைக்காவலா் கா்மபீா் ஆகியோா் காயமடைந்தனா். மேலும் உதவி ஆய்வாளா் ஒருவரது சீருடையும் கிழிக்கப்பட்டது. இதேவேளையில், முதல்வரின் வாகனம் அப்பகுதியைக் கடந்தது.
இதையடுத்து, அரசுப் பணியைத் தடுத்தல், அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் மற்றும் மிக முக்கிய பிரமுகா்களின் பாதுகாப்புக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி 12 பேருக்கு எதிராக சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் கைது செய்யப்பட்ட 9 காங்கிரஸ் தொண்டா்களும் பின்னா் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், முதல்வரின் பாதுகாப்பு விஷயத்தில் கவனக் குறைவாக பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டது தொடா்பாக காவல்துறை துணைப் ஆணையா்கள் இருவருக்கு விளக்கம் கேட்டு காவல்துறை தலைமையகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கிடையே, இந்த வழக்கில் தொடா்புடைய மற்றவா்களையும் விரைவில் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.