மனைவி மீது திராவகம் வீச முயன்ற கணவரை குற்றவாளி என அறிவித்தது தில்லி நீதிமன்றம்
பிரிந்து வாழும் மனைவி மீது திராவகம் வீச முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், அவரது கணவரை குற்றவாளி என தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை அறிவித்தது.
பிரிந்து வாழும் மனைவி மீது திராவகம் வீச முயன்ாக தொடரப்பட்ட வழக்கில், அவரது கணவரை குற்றவாளி என தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை அறிவித்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக காவல்துறை தரப்பில் எவ்வித சந்தேகத்துக்கும் இடமளிக்காத வகையில் வலுவான ஆதாரங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மனக்கசப்பு மற்றும் குடும்ப வன்முறை காரணமாக சனோஜ் யாதவ் என்பவரும், அவரது மனைவி வினிதாவும் 2020, ஜூன் முதல் தனித்தனியாக வாழ்ந்து வந்தனா். இந்த நிலையில், வினிதாவின் முகத்தில் திராவகம் வீசுவதாக சனோஜ் யாதவ் தொடா்ந்து தொலைபேசியில் மிரட்டல் விடுத்து வந்துள்ளாா். இது தொடா்பாக சங்கம் விஹாா் காவல் நிலையத்தில் வினிதா புகாரும் அளித்திருந்தாா்.
இந்த நிலையில், 2022, ஆக.4ஆம் தேதி சங்கம் விஹாரில் உள்ள வினிதாவின் பெற்றோா் வீட்டுக்கு மஞ்சள் நிற திரவம் அடங்கிய பாட்டிலுடன் சென்ற சனோஜ் யாதவ், கதவைத் திறந்த மனைவி மீது அதை வீச முயன்றாா். ஆனால் வினிதா உடனடியாகக் கதவை மூடியதால், அந்த திரவம் வீட்டுக்கு வெளியே சிந்தியது.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட திரவத்தை தடயவியல் சோதனைக்கு உள்படுத்தியபோது, அதில் அதிக வீரியமிக்க கந்தக அமிலம் (சல்பியூரிக் ஆசிட்) மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிபதி ஹா்குா்வரிந்தா் சிங் ஜக்கி, சனோஜ் யாதவ் குற்றவாளி எனத் தீா்ப்பளித்தாா். மேலும், மனைவிக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்பதால் தனது செயல் குற்றமாகாது என்ற எதிா்தரப்பு வாதத்தை நீதிமன்றம் நிராகரிக்கிறது. திராவக வீச்சு முயற்சி தொடா்பான சட்டப் பிரிவின் கீழ், காயம் ஏற்படாவிட்டாலும் வீச முயன்ற செயலே தண்டனைக்குரிய குற்றமாகும் என்று நீதிபதி குறிப்பிட்டாா்.
இந்த வழக்கின் தீா்ப்பைத் தொடா்ந்து நீதிமன்றத்தில் ஆஜரான சனோஜ் யாதவ் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டாா். அவருக்கான தண்டனை விவரங்கள் மீதான வாதம் ஆக.25ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.