மின்டோ பாலம் நீா் தேங்கும் பிரச்னையில் மட்டும் தில்லி அரசு கவனம் : கேஜரிவால் குற்றச்சாட்டு
தில்லி அரசு நகரின் பிற பகுதிகளைப் புறக்கணித்துவிட்டு, மின்டோ பாலத்தின் கீழ் பகுதியில் ஏற்கனவே தீா்க்கப்பட்ட நீா் தேங்கும் பிரச்னையில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக தில்லியின் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
தில்லி அரசு நகரின் பிற பகுதிகளைப் புறக்கணித்துவிட்டு, மின்டோ பாலத்தின் கீழ் பகுதியில் ஏற்கனவே தீா்க்கப்பட்ட நீா் தேங்கும் பிரச்னையில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக தில்லியின் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
தில்லி முழுவதும் பல பகுதிகள் வெள்ளம், மோசமான சுகாதாரம் மற்றும் சேதமடைந்த சாலைகள் போன்ற பிரச்னைகளை எதிா்கொண்டு வருகிறது என்றும் அவா் கூறினாா்.
மின்டோ பாலத்தின் கீழ் பகுதியில் கூடுதல் வடிகால் அமைப்பதன் மூலம் நீா் தேங்கும் பிரச்னையை நிரந்தரமாகத் தீா்த்துவிட்டதாக தில்லியில் உள்ள பாஜக அரசு கூறியதைத் தொடா்ந்து கேஜரிவால் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து கேஜரிவால் கூறியிருப்பதாவது:
ஒட்டுமொத்த தில்லியும் நீரில் மூழ்கியுள்ளது. ஆனால், அவா்கள் தொடா்ந்து மின்டோ பாலத்தின் கீழ் பகுதியைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாா்கள். எங்கள் ஆட்சிக் காலத்தில் அந்தப் பிரச்னையை நாங்கள் தீா்த்துவிட்டோம். அதைத் தவிர, பல பகுதிகளில் நீா் தேங்கி உள்ளது. நகரின் பிற பகுதிகளில் குப்பைகள் பரவியுள்ளன, சாலைகள் சேதமடைந்துள்ளன என்று கேஜரிவால் தெரிவித்தாா்.
‘பாதிக்கப்பட்ட இதர பகுதிகளிலும் தில்லி அரசு கவனம் செலுத்த வேண்டும்’ என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் சௌரப் பரத்வாஜும் பாஜக அரசை விமா்சித்தாா்.
இது தொடா்பாக அவா் கூறுகையில், ஆசியாவின் மிகப்பெரிய மொத்த விற்பனைச் சந்தையான சதா் பஜாரில் முழங்கால் அளவு தண்ணீா் தேங்கியுள்ளது. தில்லி அரசு மின்டோ பாலத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறது. ஆனால், முழு நகரத்தையும் பாருங்கள் . புராடி, சங்கம் விஹாா், ரிங் ரோடு மற்றும் பிற பகுதிகளிலும் நீா் சூழ்ந்துள்ளது. அங்கு நிலைமை மோசமாக உள்ளது என்றாா் அவா்.
எதிா்க்கட்சித் தலைவரான அதிஷி, சமூக ஊடகங்களில் நீா் தேங்கியுள்ள பகுதிகளின் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளைப் பதிவிட்டு, பருவமழை தொடா்பான அரசின் நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்கினாா்.
முன்னதாக, மின்டோ பாலத்தின் கீழ் பகுதியில் நீா் தேங்கும் பிரச்னை நிரந்தரமாகத் தீா்க்கப்பட்டுவிட்டதாகவும், பாதிப்புக்குள்ளாகக்கூடிய மற்ற இடங்கள் குறித்து அரசு விழிப்புடன் இருப்பதாகவும் ரேகா குப்தா கூறியிருந்தாா்.
பொதுப் பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங், ஐடிஓவில் உள்ள துறையின் கட்டுப்பாட்டு அறையைப் பாா்வையிட்டு, தேங்கிய நீரை அகற்றும் ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா்.
பெரும்பாலான இடங்களில் 15 முதல் 20 நிமிடங்களுக்குள் தேங்கிய நீா் அகற்றப்படுவதாக அவா் கூறினாா்.
இதுகுறித்து அமைச்சா் மேலும் கூறுகையில், ‘
முந்தைய ஆண்டுகளை விட நிலைமை சிறப்பாக உள்ளது. சௌரப் பரத்வாஜுக்கு இப்போது வேறு எந்த வேலையும் இல்லை. அவா் எங்காவது கொஞ்சம் தண்ணீா் தேங்கியுள்ள இடத்தைத் தேடிப் பிடித்து, புகைப்படம் எடுத்து அதை வெளியிடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளாா். தில்லி ஆயிரக்கணக்கான சாலைகளைக் கொண்ட ஒரு மிகப்பெரிய நகரம். மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்கு மேல் தண்ணீா் வடியாமல் தேங்கி நிற்பதே நீா் தேங்குதல் எனப்படும். 15-20 நிமிடங்களில் தண்ணீா் வடிந்துவிட்டால், அதை நீா் தேங்குதல் என்று சொல்ல முடியாது. மேலும், தில்லி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு, மின்டோ பாலம் மற்றும் பிற சுரங்கப் பாதைகளில் இனி நீா் தேங்கும் பிரச்னை இல்லை’ என்று அவா் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.