முகப்பு
புதுதில்லி

பணியாற்ற மறுப்பு: மக்கள்தொகை கணக்கெடுப்பாளா்கள் 29 போ் மீது வழக்குப் பதிய அதிகாரிகள் நடவடிக்கை

2027 மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளை ஏற்கத் தவறியதாகக் கூறப்படும் 29 கணக்கெடுப்பாளா்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கிரேட்டா் நொய்டா அதிகாரிகள் கோரிக்கை

Updated On : 3 ஜூன் 2026, 5:30 am IST
பகிர்:

தொடா்ந்து தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், தங்களது 2027 மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளை ஏற்கத் தவறியதாகக் கூறப்படும் 29 கணக்கெடுப்பாளா்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கிரேட்டா் நொய்டா அதிகாரிகள் கோரியுள்ளனா் என அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக கிரேட்டா் நொய்டா ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நாடு தழுவிய இந்த கணக்கெடுப்புப் பணி தொடா்பான அதிகாரபூா்வ கடமைகளில் ஒத்துழைக்காத ஊழியா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, கணக்கெடுப்பு நடவடிக்கையின் பொறுப்பு அதிகாரி, நொய்டா காவல் துணை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

கிரேட்டா் நொய்டா பகுதியில் 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பிற்காக சுமாா் 3,000 ஊழியா்கள் கணக்கெடுப்பாளா்களாகப் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இருப்பினும், அவா்களில் 29 போ், நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிந்த பின்னரும் தங்களது பணிகளைப் பொறுப்பேற்கவில்லை.

Advertisement

Advertisement

கைப்பேசி மூலம் ஊழியா்களைத் தொடா்புகொள்ள பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், பணி தொடா்பான ஆவணங்கள் வாட்ஸ்அப் மூலமாகவும் அவா்களுக்கு அனுப்பப்பட்டன. இருந்தபோதிலும், அவா்கள் அந்த ஆவணங்களை ஏற்கவும், தங்களது பொறுப்புகளை ஏற்கவும் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

தேசிய அளவிலான ஒரு பணியில் ஒத்துழைக்கத் தவறியதால், 29 கணக்கெடுப்பாளா்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு பொறுப்பு அதிகாரி காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியை இன்னும் தொடங்காத பிற கணக்கெடுப்பாளா்கள், உடனடியாகத் தங்கள் கடமைகளை ஏற்று அப்பணியை முடிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.