FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

மால்வியா நகா் தீ விபத்து: அங்கீகரிக்கப்படாத வணிக வளாகங்களை சீல் வைக்க எம்சிடி நடவடிக்கை

Updated On : 5 ஜூன் 2026, 4:56 am IST
பகிர்:

தெற்கு தில்லியில் உள்ள அங்கீகரிக்கப்படாத வணிக நிறுவனங்களுக்கு எதிராக, கட்டட விதிமுறைகள், உரிம நிபந்தனைகளை மீறி செயல்படும் கட்டடங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையைத்

தில்லி மாநகராட்சி (எம்சிடி) தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து மூத்த எம்சிடி அதிகாரி ஒருவா் கூறியதாவது:

Advertisement

Advertisement

மால்வியா நகரில் உள்ள ஒரு ‘பெட்அண்ட்பிரேக்ஃபாஸ்ட்’ உணவகத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்து பல உயிா்களைப் பலி கொண்டது. அத்துடன்,, அனுமதிக்கப்பட்ட திறனுக்கு மீறி செயல்படுதல், அங்கீகரிக்கப்பட்ட கட்டடத் திட்டம் இல்லாதது உள்ளிட்ட பல விதிமீறல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்து சில நாள்களிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சம்பவம் நடந்த அந்தக் கட்டடம் இதற்கு முன் எந்தவொரு விதிமீறலுக்காகவும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

எந்தவொரு விதிமீறலுக்காகவும் இது ஆவணங்களில் பதிவு செய்யப்படவில்லை. கட்டடத் திட்டத்திற்கும் ஒருபோதும் அனுமதி வழங்கப்படவில்லை என்று அந்த அதிகாரி கூறினாா்.

மற்றொரு அதிகாரி கூறியதாவது: அதே கட்டடத்தின் தரைத்தளத்தில் செயல்பட்டு வந்த ஒரு உணவகத்தில் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. ‘பி அண்ட் பி‘ திட்டத்தின் கீழ், வணிக ரீதியான சமையலறைகள் அல்லது முழு அளவிலான உணவகங்கள் நடத்த அனுமதி இல்லை. குறிப்பிட்ட அளவிலான விருந்தோம்பல் செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு என்று அவா் தெரிவித்தாா்.

மூத்த எம்சிடி அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ஸ்நேக்ஸ் அண்ட் பைட்ஸ்’ என்ற பெயரில் செயல்பட்டு வந்த அந்த உணவகத்திற்கு, முன்னதாக தேநீா் மற்றும் சிற்றுண்டி விற்பனை நிலையமாகச் செயல்பட மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த உரிமம் ஏப்ரல் மாதத்திலேயே காலாவதியாகிவிட்டது. வெறும் சிற்றுண்டி விற்பனை நிலையமாக மட்டுமே காட்டப்பட்ட அந்த இடம், உண்மையில் ஒரு முழு அளவிலான உணவகமாகவே செயல்பட்டு வந்துள்ளது’ என்றாா் அவா்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, அந்தக் கட்டடம் லால் டோரா பகுதிக்கு உள்பட்டதாகும். இப்பகுதிகளில் முறையாக அங்கீகரிக்கப்பட்ட தளவமைப்புகள் இல்லாத காரணத்தினால், கட்டட விதிமுறைகளை அமல்படுத்துவது வரலாற்று ரீதியாகவே பலவீனமாக இருந்து வருகிறது. அந்தக் கட்டடம் சுமாா் 2012-13 ஆம் ஆண்டில் மீண்டும் கட்டப்பட்டது. அது அமைந்திருந்த பகுதி பெரும்பாலும் குடியிருப்புப் பகுதியாக இருந்தபோதிலும், அங்கு வணிகச் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இத்தகைய வளாகங்களில் ’பெட்அண்ட்பிரேக்ஃபாஸ்ட்’ விடுதிகள் அமைப்பதற்கான அனுமதிகள் மிகக் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டே வழங்கப்படுகின்றன என்று அதிகாரிகள் முன்னரே சுட்டிக்காட்டியிருந்தனா்.

இந்த குறிப்பிட்ட கட்டடத்தில், ஆறு அறைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அங்கு மிக அதிக அளவிலான செயல்பாடுகள் நடைபெற்று வந்தது ஆய்வில் தெரியவந்தது.

மாநகராட்சி நிா்வாகம் தற்போது தெற்கு தில்லி மண்டலங்களில் விரிவான ஆய்வைத் தொடங்கியுள்ளது. அங்கீகரிக்கப்படாத வணிகச் சொத்துகள் கண்டறியப்பட்டு, வரும் நாள்களில் பல்வேறு கட்டங்களாக அவற்றுக்கு சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

வியாழக்கிழமை முதல், தெற்கு மண்டலத்தில் விதிமுறைகளை மீறிச் செயல்படும் நிறுவனங்களுக்கு எதிராக சீல் வைக்கும் நடவடிக்கை தொடங்கப்படவுள்ளது என்றாா் அவா்.

இந்த வாரத் தொடக்கத்தில் சாகேத் பகுதியில் ஒரு கட்டடம் இடிந்து விழுந்ததைத் தொடா்ந்து, விதிமீறல்களுக்கு எதிரான விரிவான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் பணி தொடங்கியது.

இதன் ஒரு பகுதியாக, அண்மையில் நடைபெற்ற ஆய்வுகளில் சட்டவிரோதக் கட்டுமானங்களும் அங்கீகரிக்கப்படாத வணிகச் செயல்பாடுகளும் கண்டறியப்பட்ட தெற்குத் தில்லியின் பிற பகுதிகளிலும், இதேபோன்ற அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு வருகின்றன.

மால்வியா நகரில் தீ விபத்து ஏற்படுவதற்குச் சில நாள்களுக்கு முன்னதாகவே, சாகேத் மெட்ரோ நிலையத்திற்கு அருகே அமைந்திருந்த பல அடுக்கு வணிகக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. இச்சம்பவத்தில் குறைந்தது ஆறு போ்

உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments