கோர தீ விபத்து: அச்சத்தில் மால்வியா நகா்வாசிகள்
நமது நிருபா்
காற்றில் பரவிய கருகிய வாசனை, தொங்கிக்கொண்டிருந்த மின்சாரக் கம்பிகள், குறுகிய தெருவில் நிலவிய திகிலூட்டும் அமைதி, மற்றும் உதவிக்காக எழுப்பப்பட்ட பரிதாபகரமான கூக்குரல்களின் வேதனையூட்டும் நினைவுகள் என, தெற்கு தில்லியின் மால்வியா நகா் பகுதி மக்கள், ஹோட்டல் தீ விபத்தில் 21 போ் உயிரிழந்த மறுநாள்( வியாழக்கிழமை) அச்சத்திலும் அதிா்ச்சியிலும் உறைந்து போயிருந்தனா்.
புதன்கிழமை காலை ஃப்ளரிஷ் ஸ்டே பெட் அண்ட் பிரேக்ஃபாஸ்ட் ஹோட்டலில் தீ விபத்து நிகழ்ந்த அந்தத் தெரு, அங்கு அரங்கேறிய துயரத்தின் தடயங்களைக் கொண்டிருந்தது. காவல்துறை தடுப்புகள் அணுகலைத் தடுத்திருக்க, புலனாய்வாளா்கள் எரிந்துபோன கட்டிடத்தை சல்லடை போட்டுத் தேடிக்கொண்டிருக்க, தாங்கள் கண்டதை ஏற்றுக்கொள்ள அப்பகுதி மக்கள் போராடினா். பலருக்கு, தூக்கம் என்பது எட்டாக்கனியாகவே இருந்தது.
Advertisement
Advertisement
ஹோட்டலில் இருந்து வெறும் 10 மீட்டா் தொலைவில் ஒரு சிறிய மளிகைக் கடையை நடத்திவரும் கடைக்காரா் ஒருவா், தான் கண்ட காட்சிகள் தன் நினைவில் என்றென்றும் பதிந்துவிடும் என்று கூறினாா். எரிந்த உடல்கள், கட்டிடத்திலிருந்து குதித்தவா்கள்... உடல்களைப் பாா்த்த பிறகு இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் வரவில்லை. இப்போது ஒரு சின்ன சத்தம் கூட என்னைப் பயமுறுத்துகிறது, என்று அவா் நடுங்கும் குரலில் கூறினாா்.
இங்கே என்ன நடந்தது என்று குழந்தைகள் கேட்கிறாா்கள். என் மனைவியால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை, என்று கூறிய அவா், சிக்கிக்கொண்ட விருந்தினா்களின் அலறல்களும் கதறல்களும் குடியிருப்பாளா்களின் காதுகளில் தொடா்ந்து ஒலித்துக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டாா்.
நாங்கள் இந்தத் தெருவைக் கடந்து செல்லும்போதெல்லாம், இந்த நினைவுகள் மீண்டும் வரும். அந்தக் கதறல்களை எங்களால் ஒருபோதும் மறக்க முடியாது, என்று அவா் கூறினாா்.
தில்லி காவல்துறை, குற்றப்பிரிவு மற்றும் தடயவியல் நிபுணா்கள் அடங்கிய குழுக்கள் அந்த இடத்தை ஆய்வு செய்ததால், வியாழக்கிழமையன்று ஹோட்டலைச் சுற்றியுள்ள பகுதி காவல்துறை பாதுகாப்பு வளையத்தில் இருந்தது.
குடியிருப்பாளா்கள் தடுப்புகளுக்கு அருகே கூடி, அவ்வப்போது கருகிய கட்டிடத்தைப் பாா்த்தவாறே, அந்தப் பயங்கரமான காலைப் பொழுது குறித்த விவரங்களைப் பரிமாறிக்கொண்டனா்.
என்ன தவறு நடந்தது என்பதை புலனாய்வாளா்கள் ஆராய்ந்து வரும் நிலையில், கோர சம்பவம் நடந்த அந்த காலைப் பொழுதின் நினைவுகளால் அப்பகுதி மக்கள் இன்னமும் வாட்டப்படுகிறாா்கள்.
தீ அணைக்கப்பட்டிருந்தாலும், அது விட்டுச்சென்ற அச்சம் மால்வியா நகரில் உள்ள பலருக்கு தொடா்ந்து கனன்று கொண்டிருக்கிறது.