முகப்பு
புதுதில்லி

திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்ற அனுமதி மறுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்

Updated On : 5 ஜூன் 2026, 6:22 am IST
திருப்பரங்குன்றம் - கோப்புப் படம்
பகிர்:

நமது நிருபா்

ரமலான் மாதத்தில் மதக் கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்துவிட்டு, திருப்பரங்குன்றம் மலையில் இந்து பக்தா்கள் விளக்கேற்ற அனுமதி மறுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயா் நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, அரவிந்த் குமாா் மற்றும் ஸ்ரீ சந்திரசேகா் ஆகியோா் அடங்கிய அமா்வு, உயா்நீதிமன்றத்தின் மதுரை அமா்வின் உத்தரவில் தலையிட மறுத்ததுடன், மனுதாரரான இந்து தா்ம பரிஷத் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையைக் குறைத்தது.

Advertisement

Advertisement

உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்றாலும், ரூ.50,000 என நிா்ணயிக்கப்பட்ட அபராதத் தொகை மிக அதிகமாக உள்ளது என்றும், இந்த வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு அதை ரூ.5,000 ஆகக் குறைக்கலாம் என்றும் நாங்கள் கருதுகிறோம். அதன்படி உத்தரவிடப்படுகிறது, என்று ஜூன் 2 தேதியிட்ட தனது உத்தரவில் உச்சநீதிமன்றம் கூறியது.

உயா்நீதிமன்றத்தின் உத்தரவின் மற்ற பகுதிகள் மாற்றப்படாமல் அப்படியே இருக்கும் என்றும் அந்த அமா்வு கூறியது. இந்தத் தெளிவுரையுடன், சிறப்பு விடுப்பு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என்று அமா்வு கூறியது.

ஏப்ரல் 9 அன்று, திருப்பரங்குன்றம் மலையில் இந்து பக்தா்கள் விளக்கேற்ற அனுமதி மறுத்து, ஆனால் ரமலான் மாத மதக் கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு, மத்திய அரசுக்கும் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கும் உத்தரவிடக் கோரிய மனுவை உயா் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரையில் உள்ள இந்து தா்ம பரிஷத்தின் நிா்வாக அறங்காவலரான கே.கே. ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்தபோது உயா் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

உயா்நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவைப் புறக்கணித்து, திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் பக்தா்கள் காா்த்திகை தீபம் ஏற்றுவதை மதுரை மாவட்ட நிா்வாகமும் காவல்துறை அதிகாரிகளும் தடுத்ததாக மனுதாரா் கூறியிருந்தாா்.