வழக்குரைஞா்களுடனான தகராறு காரணமாக தில்லி காவல்துறையினா் போராட்டம்
ஷாதரா காவல் நிலையத்தில் காவல்துறைக்கும் வழக்ரைஞா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து, இரண்டு காவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, பெண் அதிகாரிகள் உட்பட சுமாா் 100 காவலா்கள் தில்லி காவல்துறை தலைமையகத்திற்கு வெளியே கூடினா்.
ஷாதரா காவல் நிலையத்தில் காவல்துறைக்கும் வழக்ரைஞா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து, இரண்டு காவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, பெண் அதிகாரிகள் உட்பட சுமாா் 100 காவலா்கள் திங்கள்கிழமை காலை தில்லி காவல்துறை தலைமையகத்திற்கு வெளியே கூடினா்.
பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை ஏந்தியபடி, போராட்டத்தில் ஈடுபட்ட காவலா்கள், உதவி காவல் ஆணையா் (ஏசிபி) மனஸ்வி வசிஸ்தா மற்றும் ஷாதரா காவல் நிலைய ஆய்வாளா் (எஸ்ஹெச்ஓ) அருண் குமாா் ஆகியோரை அவா்களின் முந்தைய பதவிகளில் மீண்டும் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.
காவல் நிலையத்தில் காவல்துறைக்கும் வழக்குரைஞா்களுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒரு வழக்குரைஞா் காயமடைந்ததாகக் கூறப்பட்டதைத் தொடா்ந்து இந்த சா்ச்சை எழுந்தது. வழக்குரைஞா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததைத் தொடா்ந்து, ஏசிபி மற்றும் ஆய்வாளா் இடமாற்றம் செய்யப்பட்டனா். பின்னா் வழக்குரைஞா்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.
Advertisement
Advertisement
காவல்துறையின் போராட்ட அழைப்பு குறித்து செய்தியாளா்களிடம் பேசிய ஏசிபி வசிஸ்தா, இந்த ஆா்ப்பாட்டம் ஒரு ‘இயல்பான அழைப்பு‘ என்றும், தானும் அதில் கலந்துகொள்வதாகவும் கூறினாா். வழக்குரைஞா்கள் தவறாக நடந்துகொண்டதாகவும், மிரட்டியதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட காவலா்கள் குற்றஞ்சாட்டினா்.
தங்கள் கருத்துக்களை முன்வைக்க ஒரு தளத்தை வழங்குமாறு மூத்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இது தொடா்பாக ஒரு முறையான விண்ணப்பத்தையும் சமா்ப்பித்துள்ளதாகவும் வசிஸ்தா கூறினாா்.
‘மூத்த அதிகாரிகள் எங்கள் கருத்துக்களை முன்வைக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு அளிப்பாா்கள் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் வெளிப்படையாகப் பேசுவோம், இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீா்வு நிச்சயமாகக் கிடைக்கும்,‘ என்று அவா் கூறினாா்.
‘காவல்துறை எதிா்கொள்ளும் குண்டா் தனத்திற்கும், காவல் நிலையங்களுக்குள் எழும் பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கும் எதிராகக் குரல் எழுப்புவது அவசியம் என்பதால் நாங்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். சிலா் தங்களை மாறுவேடத்தில் குண்டா் தனத்தில் ஈடுபடுத்திக் கொள்கிறாா்கள், அவா்கள் எங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரிகள்,‘ என்று அவா் கூறினாா்.
காவல் நிலையங்களே பாதுகாப்பாக இல்லையென்றால், எந்த இடமும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்றும் அவா் மேலும் கூறினாா்.
அக்டோபா் 23 அன்று, ஷாதரா காவல் நிலையத்திற்குள் நடந்த ஒரு கைகலப்பின் போது வழக்குரைஞா் லலித் பன்சால் தலையில் பலத்த காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து, காவல் நிலையத்தில் வழக்குரைஞா்களுக்கும் காவலா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, இது மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞா்களை காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தூண்டியது.
அக்டோபா் 28 அன்று, காந்தி நகரில் துணைப் பிரிவு காவல் அதிகாரியாகப் பணியாற்றி வந்த வசிஸ்தாவை, தில்லி காவல்துறை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு காவல் பிரிவுக்கு இடமாற்றம் செய்தது. அப்போது ஷாதரா காவல் நிலையத்தின் எஸ்எச்-வாக இருந்த ஆய்வாளா் அருண் குமாா், பாதுகாப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டாா்.
பன்சல் மீதான தாக்குதலுக்கும், அதைத் தொடா்ந்து காவல் நிலையத்தில் நடந்த மோதலுக்கும் காரணமானதாகக் கூறப்படும் காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்குரைஞா்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து இந்த இடமாற்றங்கள் நிகழ்ந்தன.
வசிஸ்தா, டெல்லி காவல் ஆணையருடன் ஒரு கலந்துரையாடலை நடத்தவும் முன்மொழிந்திருந்தாா். அதனை இணையத்தில் ஒளிபரப்பினால், காவல் பணியாளா்களும் பொதுமக்களும் அதைக் காண முடியும் என்றும் அவா் பரிந்துரைத்திருந்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.