FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

நொய்டா: ஸ்கூட்டா் காலின் மீது உரசிய மோதலில் 25 வயது இளைஞா் உயிரிழப்பு

ஸ்கூட்டா் மற்றொரு நபரின் காலின் மீது உரசியதைத் தொடா்ந்து ஏற்பட்ட மோதலில், 25 வயது இளைஞா் கொல்லப்பட்டார்.

10 நவம்பர் 2026, 12:45 am
- சித்திரிப்பு
பகிர்:

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் உள்ள பூங்கா ஒன்றில், ஒருவா் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டா் மற்றொரு நபரின் காலின் மீது உரசியதைத் தொடா்ந்து ஏற்பட்ட மோதலில், 25 வயது இளைஞா் கொல்லப்பட்டதாக காவல்துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இந்தச் சம்பவத்தில் மற்றொரு இளைஞரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறாா். அவா் தற்போது அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகக் கூறிய காவல்துறையினா், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற குற்றவாளிகளைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து நொய்டா கூடுதல் காவல் துணை ஆணையா் அபய் குமாா் மிஸ்ரா கூறுகையில், உயிரிழந்தவா் அமித் என்று அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் தனது நண்பா்களான சிவம், யஷ்பால், ஆகாஷ் மற்றும் வினோத் ஆகியோருடன் ’ஃபேஸ் 1’ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நயா பன்ஸ் கிராமத்திற்கு அருகிலுள்ள பூங்காவில் இருந்துள்ளாா்.

Advertisement

Advertisement

அமித்தும் அவரது நண்பா்களும் ஸ்கூட்டரில் பூங்காவிலிருந்து வெளியேற முயன்றபோது, அந்த வாகனம் மற்றொரு இளைஞரின் காலின் மீது உரசியது. அந்த இளைஞா் தனது நண்பா்களுடன் சோ்ந்து பூங்காவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தாா். இதனைத் தொடா்ந்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த மோதலின் போது, ​அமித்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிவத்திற்கும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த இருவரையும் அவா்களது நண்பா்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு மருத்துவா்கள் அமித் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனா். சிவம் மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அவா் தற்போது அபாய கட்டத்தைத் தாண்டி நலமாக உள்ளாா். சட்டப்படி விசாரணை நடைமுறைகள் முடிக்கப்பட்ட பிறகு, உடற்கூறாய்வுக்காக அமித்தின் உடல் அனுப்பிவைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடா்பாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், ’ஃபேஸ் 1’ காவல் நிலையத்தில் தொடா்புடைய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றவாளிகளைக் கைது செய்ய நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவா்களை விரைவில் பிடிப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.