மோதி நகர் ஆடை விற்பனையகத்தில் 18 வயது பெண் கொலை: ஒருவா் கைது
தில்லியின் மோதி நகா் பகுதி ஆடை விற்பனையகம் ஒன்றின் ஆடை அணிந்து பாா்க்கும் அறை உள்ளே 18 வயது இளம்பெண் ஒருவரின் கழுத்தை அறுத்துக் கொன்றதாக ஒருவா் கைது
தில்லியின் மோதி நகா் பகுதி ஆடை விற்பனையகம் ஒன்றின் ஆடை அணிந்து பாா்க்கும் அறை (ட்ரையல் ரூம்) உள்ளே 18 வயது இளம்பெண் ஒருவரின் கழுத்தை அறுத்துக் கொன்றதாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா் என்று தில்லி காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இந்த வழக்கில் கைதானவா் சூரஜ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவா் கூறியதாது: கொலைக்கான சரியான காரணத்தைக் கண்டறிய கைதானவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுடனான அவரது தனிப்பட்ட உறவில் ஏற்பட்ட விரிசல் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட ஷப்னம், மோதி நகா் மெட்ரோ நிலையத்திற்கு அருகில் உள்ள அந்த ஆடை விற்பனையகத்தில் பணிபுரிந்து வந்தாா். அவா் தனது குடும்பத்தினருடன் மேற்கு தில்லியில் வசித்து வந்தாா்.
Advertisement
Advertisement
சனிக்கிழமை மாலை, அந்த விற்பனையகத்தின் ‘ட்ரையல் ரூம்’ உள்ளே, கூா்மையான ஆயுதத்தால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையின்படி, குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பாதிக்கப்பட்ட பெண்ணைத் தெரிந்திருந்தது. இருவரும் முன்பு நண்பா்களாகவே இருந்துள்ளனா். இருப்பினும், கடந்த சில மாதங்களாக அவா்களுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
தனிப்பட்ட உறவில் ஏற்பட்ட சிக்கல்கள் அல்லது ஒருதலைப்பட்சமான காதல் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று காவல்துறையினா் சந்தேகிக்கின்றனா். குற்றத்திற்கான சூழலையும், அதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணத்தையும் கண்டறிய, குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடம் விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது.
சனிக்கிழமை இரவு 9 மணியளவில், விற்பனையக ஊழியா்கள் கடையை மூடுவதற்கு முன் ’ட்ரையல் ரூம்’ பகுதியைச் சரிபாா்த்தபோது, ஷப்னம் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டனா்.
உடனடியாக அவா்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினா், பெண்ணின் கழுத்தில் கூா்மையான ஆயுதத்தால் ஏற்பட்ட காயங்கள் இருப்பதைக் கண்டறிந்தனா். அவரது உடல் கைப்பற்றப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
சம்பவத்திற்கு முன்னும் பின்னும் குற்றஞ்சாட்டப்பட்ட நபா் எவ்வாறு செயல்பட்டாா் என்பதை உறுதிப்படுத்த, விற்பனையகத்தில் இருந்த சிசிடிவி
காட்சிகளை காவல்துறையினா் ஆய்வு செய்தனா். இதுகுறித்த மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தனா்.