FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

குப்பை ஏற்றிச் சென்ற லாரி மோதி இளைஞா் பலி

கிழக்கு தில்லியின் காஜிப்பூா் பகுதியில் உள்ள ஹெட்கேவா் சாலையில், சிஎன்ஜி எரிபொருள் நிலையத்திற்கு அருகில் 19 வயது இளைஞா் லாரி மோதி உயிரிழந்தாா்.

11 நவம்பர் 2026, 10:17 pm
பகிர்:

கிழக்கு தில்லியின் காஜிப்பூா் பகுதியில் உள்ள ஹெட்கேவா் சாலையில், சிஎன்ஜி எரிபொருள் நிலையத்திற்கு அருகில் 19 வயது இளைஞா் லாரி மோதி உயிரிழந்தாா்.

ரோஹித் என்று அடையாளம் காணப்பட்ட அந்த இளைஞா், சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​குப்பை ஏற்றி வந்த லாரி அவா் மீது மோதிவிட்டு அங்கிருந்து நிற்காமல் சென்றுவிட்டதாக காவல்துறையினா் கூறினா்.

இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரும் உள்ளூா் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். பலமுறை அழைப்பு விடுத்தும் காவல்துறையினரும் ஆம்புலன்ஸும் சம்பவ இடத்திற்கு வரத் தாமதமானதாக அவா்கள் குற்றஞ்சாட்டினா்.

Advertisement

Advertisement

அவா்கள் சாலையை மறித்து போக்குவரத்து நடமாட்டத்தைத் தடுத்ததுடன், லாரி ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

காலை 10:37 மணிக்கு விபத்து குறித்த தகவல் காவல்துறைக்கு கிடைத்தது. இதைத் தொடா்ந்து, லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு ரோஹித் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

ரோஹித்தின் தந்தை கைலாஷ்நாத் தெரிவிக்கையில், ரோஹித் வெளியே சென்றிருந்தபோது விபத்து குறித்த தகவல் தனக்குக் கிடைத்ததாகத் தெரிவித்தாா். மேலும் அவா் கூறுகையில் ‘எனது மகன் வெளியே சென்று சாலையோரத்தில் நடந்து கொண்டிருந்தபோது, ​ஒரு லாரி அவன் மீது மோதி கொன்றுவிட்டது. அது குப்பை ஏற்றிச் செல்லும் லாரி என்றாா் அவா்.

ரோஹித்தின் சகோதரா் ராகேஷ்நாத் கூறுகையில், போராட்டம் தொடங்கிய பின்னரே அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினா். மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் சரியாகச் செயல்படவில்லை அல்லது விபத்தை ஏற்படுத்திய லாரியைப் பதிவு செய்யவில்லை. அந்த லாரியோ அல்லது ஓட்டுநரோ இன்னும் கண்டறியப்படவில்லை. சிசிடிவி கேமராக்கள் சரியாகச் செயல்படாததால், லாரியின் காட்சிகள் அதில் பதிவாகவில்லை’ என்று அவா் கூறினாா்.

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தைக் கண்டறியவும், விபத்து நடந்த சூழலைப் புரிந்துகொள்ளவும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து வருவதாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.

மருத்துவ-சட்ட அறிக்கையைப் பெற்ற பிறகு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.