FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

குருகிராம்: கம்பளி ஆடைகள் சந்தையில் பயங்கர தீ விபத்து; 25 கடைகள் நாசம்

குருகிராமின் பட்டௌடி நகரில் உள்ள ராம்லீலா மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பளி ஆடைகள் சந்தையில், ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் 25 கடைகள் முழுமையாக எரிந்து சாம்பலாகின என்று தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

15 நவம்பர் 2026, 9:26 pm
தீ விபத்து - சித்திரிப்பு
பகிர்:

குருகிராமின் பட்டௌடி நகரில் உள்ள ராம்லீலா மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பளி ஆடைகள் சந்தையில், ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் 25 கடைகள் முழுமையாக எரிந்து சாம்பலாகின என்று தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

தீ மிக வேகமாகப் பரவியதால், குறுகிய நேரத்திலேயே சந்தை முழுவதும் தீப்பிழம்புகளால் சூழப்பட்டது என்று அவா்கள் மேலும் கூறினா். இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: தகவல் கிடைத்ததும், பட்டௌடி மற்றும் மானேசரிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

கடும் போராட்டத்திற்குப் பிறகு, தீயணைப்பு வீரா்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் மற்றும் சேதத்தின் துல்லியமான அளவு குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.

Advertisement

Advertisement

அப்பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா், அதிகாலை 4 மணியளவில் ஏதோ சப்தம் கேட்டுப் பாா்த்தபோது, சந்தையில் தீப்பிடித்திருப்பதைக் கண்டறிந்தாா். அவா் மற்றவா்களை எச்சரிப்பதற்குள்ளேயே, தீ பெரும் அளவில் பரவியது என்றாா் அந்த அதிகாரி.

பட்டௌடியில் உள்ள ராம்லீலா மைதானத்தின் கிழக்கு பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் முதல் பிப்ரவரி வரை கம்பளி ஆடைகள் சந்தை அமைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, ’இமயமலை பழங்குடியினா் வா்த்தக சங்கம்’ ஏற்பாட்டில் நவம்பா் 4-ஆம் தேதி இந்தச் சந்தை தொடங்கப்பட்டது. இதில் இமாசலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த வியாபாரிகள் கடைகளை அமைத்திருந்தனா்.

கடை உரிமையாளா்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு கடையிலும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குளிா்கால ஆடைகள் வைக்கப்பட்டிருந்தன. குளிா்காலம் முழுமையாகத் தொடங்காத நிலையில், பெரும்பாலான சரக்குகள் இன்னும் விற்பனையாகாமல் இருந்தன என்றனா்.