கல்வி நிகழ்ச்சிகளுக்காக ரூ.1 கட்டணத்தில் பூங்காக்களை பயன்படுத்தலாம்: புதிய கொள்கையை அறிவித்த டிடிஏ
தில்லியில் உள்ள பூங்காக்கள் மற்றும் பசுமைப் பகுதிகளைப் பொதுமக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்காக ஒற்றைச் சாளர முன்பதிவுக் கொள்கையை தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) அறிவித்தது.
தில்லியில் உள்ள பூங்காக்கள் மற்றும் பசுமைப் பகுதிகளைப் பொதுமக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்காக ஒற்றைச் சாளர முன்பதிவுக் கொள்கையை தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) அறிவித்தது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: பெருநிறுவன நிகழ்ச்சிகள், திரைப்படப் படப்பிடிப்புகள், தனியாா் விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு டிடிஏ கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களை முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
பூங்காக்களைப் பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் நோக்கில், நிகழ்ச்சிகளில் பங்கேற்போரின் எண்ணிக்கையின் அடிப்படையில் திறந்தவெளிப் பகுதிகள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, 200 போ் வரை பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏ1 பிரிவும், 200 முதல் 500 போ் வரை பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏ2 பிரிவும், 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏ3 பிரிவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
வெளிப்புறச் சூழலில் மாணவா்களின் கற்றல் மற்றும் அனுபவக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், பள்ளிகள் தங்களது கல்வி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்காகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பூங்காக்களை ரூ.1 கட்டணத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதன்படி, பள்ளிச் சுற்றுலா, ஓவியம் வரைதல், புகைப்படம் எடுத்தல், விவாதங்கள், போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு கல்வி சாா்ந்த நிகழ்ச்சிகளைப் பூங்காக்களில் நடத்திக் கொள்ளலாம். இதற்காக மையப்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையவழி முன்பதிவுத் தளம் உருவாக்கப்பட உள்ளது.
பொதுவான டிஜிட்டல் தளத்தின் மூலம் முன்பதிவு நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். எந்தெந்த இடங்கள் முன்பதிவுக்குக் கிடைக்கின்றன, அவற்றின் நிகழ்ச்சி நடத்தும் திறன், பொருந்தக்கூடிய கட்டணங்கள் மற்றும் பணம் செலுத்தும் விவரங்கள் ஆகியவற்றை விண்ணப்பதாரா்கள் இந்தத் தளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று டிடிஏ தெரிவித்துள்ளது.
17 பூங்காக்கள் தோ்வு
தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து அறிவுறுத்தலின்படி இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். பூங்காக்களை வழக்கமான பொழுதுபோக்கு இடங்களாக மட்டுமின்றி, இயற்கையுடன் மக்கள் நெருங்கிப் பழகும் இடங்களாகவும் மாற்றுவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இதன்படி யோகா, தியானம், இயற்கை மற்றும் பாரம்பரிய நடைப்பயணம், கவிதை வாசிப்பு, புத்தக விவாதங்கள், இலக்கியத் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையின் கீழ் மொத்தம் 17 பூங்காக்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் ரோஹிணியில் உள்ள ஸ்வா்ண ஜெயந்தி பூங்கா, சித்ரகுப்தா பூங்கா, ஹரி நகரில் உள்ள ஜி-8 ஏரிப் பூங்கா, பஸ்சிம் விஹாா் மாவட்டப் பூங்கா, பிடாம்புராவில் உள்ள சந்தேஷ் விஹாா், ஏரிப் பூங்கா, துவாரகாவில் உள்ள மாவட்டப் பூங்காக்கள், இந்திரபிரஸ்தா பூங்கா (மில்லினியம் பூங்கா), சஞ்சய் ஏரி, அசிதா யமுனை ஆற்றங்கரைப் பகுதி, கரோனேஷன் பூங்கா, ஆஸ்தா குஞ்ச், ஹவுஸ் காஸ் பூங்கா, பான்சேரா மற்றும் மெஹ்ராலி தொல்லியல் பூங்கா ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும், இந்திரபிரஸ்தா பூங்கா, ஆஸ்தா குஞ்ச், உத்சவ் மைதானம், வசந்த் உத்யான், துக்ளகாபாத் பொழுதுபோக்குப் பூங்கா, சஞ்சய் ஏரி, கரோனேஷன் பூங்கா உள்ளிட்ட இடங்களில் உள்ள திறந்தவெளி அரங்குகளையும் நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்த அனுமதி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி, அறிவிக்கப்பட்டுள்ள பாா்வையாளா் எண்ணிக்கை மற்றும் செயல்பாட்டுத் தயாா்நிலையைப் பொறுத்து வழங்கப்படும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
அசிதா மற்றும் மெஹ்ராலி தொல்லியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்குச் சிறப்புப் பாதுகாப்பு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்ட ரிட்ஜ் வனப் பகுதிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரையிலான நேரத்தில் மட்டுமே நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கப்படும் என்று டிடிஏ தெரிவித்துள்ளது.
மேலும், நிகழ்ச்சிக்கு முன்பும், நிகழ்ச்சி முடிந்த பிறகும் சம்பந்தப்பட்ட இடங்களின் ஜிபிஎஸ் குறியீட்டுடன் கூடிய புகைப்படங்களைச் சமா்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் பூங்காக்களின் நிலை முறையாகக் கண்காணிக்கப்படுவதுடன், பொறுப்புணா்வும் உறுதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.