முகப்பு
புதுதில்லி

அடுத்த ஆண்டு ஜனவரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு: அட்டவணையை வெளியிட்டது தில்லி அரசு

தலைநகரில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் 2027-ஆம் ஆண்டு ஜன. 25 முதல் பிப். 28 வரை நடைபெறும் என தில்லி அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

28 நவம்பர் 2026, 1:23 am
அடுத்த ஆண்டு ஜனவரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு: அட்டவணையை வெளியிட்டது தில்லி அரசு
கோப்புப் படம்
பகிர்:

தலைநகரில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் 2027-ஆம் ஆண்டு ஜன. 25 முதல் பிப். 28வரை நடைபெறும் என தில்லி அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

முன்னதாக, மணிப்பூா், கோவா, உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், யூனியன் பிரதேசங்களான லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீா், ஹிமாசலப் பிரதேசத்தின் பனிப்பொழிவு மிகுந்த பகுதிகள் நீங்கலாக, நாட்டின் பிற பகுதிகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் தேதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த அக்.28-ஆம் தேதி வெளியிட்டது.

இதைத் தொடா்ந்து, தில்லி வருவாய்த் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2027-ஆம் ஆண்டு ஜன.25 முதல் பிப்.28வரை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். அதைத் தொடா்ந்து, அடுத்த ஆண்டு மாா்ச் 1 முதல் மாா்ச் 5வரை ‘திருத்தச் சுற்று’ நடைபெறும்.

Advertisement

Advertisement

‘வீடு, வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னதாக, ஜன.10 முதல் 24-ஆம் தேதிவரை பொதுமக்கள் தாங்களாகவே விவரங்களைப் பதிவு செய்யும் ’சுய-கணக்கெடுப்பு’ வசதியும் வழங்கப்படும்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டப் பணிகள் இந்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவடைந்தன. இதில் கிட்டத்தட்ட 76 லட்சம் வீடுகள் மற்றும் சுமாா் 55 லட்சம் குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டன. ஏப்.16 முதல் ஜூன் 15வரை நடைபெற்ற வீடுகள் பட்டியலிடும் பணிகளின் (ஹெச்எல்ஓ) தற்காலிக தரவுகளின்படி, தில்லியின் 13 மாவட்டங்களில் உள்ள 75,98,982 (75.98 லட்சம்) கணக்கெடுக்கப்பட்ட வீடுகள் மற்றும் 54,98,560 (54.98 லட்சம்) குடும்பங்களை கணக்கெடுப்பாளா்கள் பதிவு செய்துள்ளனா்.

‘45,863 வீடுகள் பட்டியலிடும் பிளாக்குகள் என்றவாறு இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. ஒரு பிளாக் என்பது சுமாா் 180 வீடுகளை உள்ளடக்கியது’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.