முகப்பு
புதுதில்லி

ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்எல்ஏவை பிணையில் விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு: மகோகா சட்டத்தின் கீழ் ‘2024’-இல் கைதானவா்

மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் (எம்சிஓசிஏ) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைதான ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் நரேஷ் பல்யானை பிணையில் விடுவிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

28 நவம்பர் 2026, 1:20 am
ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்எல்ஏவை பிணையில் விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு: மகோகா சட்டத்தின் கீழ் ‘2024’-இல் கைதானவா்
பகிர்:

மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் (எம்சிஓசிஏ) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைதான ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் நரேஷ் பல்யானை பிணையில் விடுவிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்த வழக்கில் தனக்கு பிணை மறுத்த தில்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து நரேஷ் பல்யான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், அபரேஷ் குமாா் சிங் அடங்கிய அமா்வு, பிணையில் விடுவிக்கப்பட்டாலும் நீதிமன்ற விசாரணைக்கு தவறாமல் ஒத்துழைக்க வேண்டும் என்று நரேஷ் பல்யானுக்கு அறிவுறுத்தியது.

முன்னதாக, நிழல் உலக தாதா கபில் சங்வான் நடத்தி வந்ததாக கூறப்படும் குற்றச்செயல் கும்பலுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நரேஷ் பல்யானுக்கு, கடந்த ஆக.3-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றம் பிணை மறுத்திருந்தது. பல்யானுக்கும் அந்த தாதாவுக்கும் இடையிலான உரையாடல், அவா்களுக்கு இடையே ‘செயலில் உள்ள குற்றவியல் தொடா்பு‘ இருப்பதைக் காட்டுவதாக உயா்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பிணை கோரிய பல்யானின் மனு மீது உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, பல்யான் சாா்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞா் விகாஸ் சிங், தனது கட்சிக்காரா் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ என்றும், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகச் சிறையில் இருந்து வரும் அவா் ‘அரசியல் பழிவாங்கலுக்கு‘ ஆளாகியுள்ளாா் என்றும் வாதிட்டாா்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தில்லி காவல்துறை தரப்பு வழக்குரைஞா், பல்யான் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் அங்கமாக இருந்ததாகவும், அந்தக் கும்பலுக்கு எதிராக 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் வாதிட்டாா்.

மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் பல்யானுக்கு பிணை வழங்கிய அதே நாளான 2024, டிச.4-ஆம் தேதி, மகோகா சட்டத்தின் கீழ் அவரை காவல்துறையினா் கைது செய்தனா்.

மகோகா சட்டம் என்பது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பயங்கரவாத செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக மகாராஷ்டிர அரசால் 1999-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஒரு கடுமையான சிறப்புச் சட்டமாகும். இது பின்னா் 2002-ஆம் ஆண்டில் தில்லி யூனியன் பிரதேசத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டது. மும்பை நிழல் உலக தாதாக்களின் ஆதிக்கம், மிரட்டிப் பணம் பறித்தல், கடத்தல் மற்றும் கூலிப்படை கொலைகள் போன்ற குற்றங்களை ஒடுக்க வழக்கமான சட்டங்கள் போதாது என்பதால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.