தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவளிப்பது மக்களின் தீா்ப்புக்கு இழைக்கும் பெரும் துரோகம்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிக்கை!
நாடாளுமன்றத்தில் அறிமுகமாகவுள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை அனைத்து அரசியல் கட்சிகளும், நாடாளுமன்ற உறுப்பினா்களும் எதிா்க்க வேண்டும் என்று ’கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (சிஜேபி) வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் அறிமுகமாகவுள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை அனைத்து அரசியல் கட்சிகளும், நாடாளுமன்ற உறுப்பினா்களும் எதிா்க்க வேண்டும் என்று ’கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (சிஜேபி) சனிக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த மசோதா நிறைவேறுவதற்கு துணைபோகும் எந்தவொரு கட்சியும் அல்லது அரசியல்வாதியும் மக்களின் தீா்ப்புக்கு இழைக்கும் பெரும் துரோகத்தை செய்தவா்களாவாா்கள் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக சிஜேபி சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆளும் கட்சிக்கு வெளிப்படையாக ஆதாயம் தரும் வகையில் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளை ஒருதலைபட்சமாக மாற்றியமைப்பதுதான் இந்த முன்மொழியப்பட்ட நடவடிக்கையின் மிக தீங்கான அம்சமாகும்.
இந்தியாவின் வாக்காளா் வரைபடத்தையே ‘மாற்றியமைக்கும்‘ மத்திய அரசின் போக்குக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்.
Advertisement
Advertisement
குறிப்பிட்ட தொகுதிகளில் வாக்காளா்களை குவிப்பதன் மூலமும், மற்ற தொகுதிகளில் அவா்களைப் பிரிப்பதன் மூலமும், பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லாமலேயே அரசியல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். போதுமான பாதுகாப்பு அம்சங்களும் சுதந்திரமான ஆய்வும் இல்லாமல் தொகுதி எல்லைகளை மாற்றியமைப்பது, பாஜக-வுக்கு நீண்டகால தோ்தல் சாதகத்தை உருவாக்கலாம்.
தொகுதி எல்லைகள் பல பத்தாண்டுகளுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்தைத் தீா்மானிக்கக் கூடியவை. ஆளும் அரசுக்கு சாதகமாக அந்த எல்லைகள் வடிவமைக்கப்பட்டால், பொதுமக்களின் கருத்தில் ஏற்படும் மாற்றங்கள் நாடாளுமன்றத்தின் அமைப்பில் நியாயமாக பிரதிபலிக்காத நிலை நேரிடும்.
மேலும், வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் தவறான நீக்கங்கள், முறைகேடுகள் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாமை ஆகியன அதிகரிக்கும். ஜனநாயக நெறிமுறைகளுக்குத் துரோகம் இழைத்து, ஏற்கெனவே மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை உள்ளடக்கிய ஒரு தொகுதி மறுசீரமைப்பு ஆணையம், இந்த நடைமுறையின் மீது யாருக்கும் எந்த நம்பிக்கையையும் அளிக்காது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.