FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

நகை மோசடி வழக்கில் தேடப்பட்ட 2 சகோதா்கள் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் கைது

தில்லியைச் சோ்ந்த நகை வியாபாரி ஒப்படைத்த 1,430 கிராம் தங்கம் மற்றும் வைரங்களை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த இரு சகோதரா்கள் சுமாா் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டனா்.

4 October 2026, 11:58 pm IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தில்லியைச் சோ்ந்த நகை வியாபாரி ஒப்படைத்த 1,430 கிராம் தங்கம் மற்றும் வைரங்களை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த இரு சகோதரா்கள் சுமாா் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டனா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்களான பிந்து கோலி (47) மற்றும் மிந்து கோலி (46) ஆகியோா் அக்டோபா் 1-ஆம் தேதி நள்ளிரவில் ஹூக்ளி பகுதியில் கைது செய்யப்பட்டனா். இதுகுறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாவது:

நகை தயாரிப்பு மற்றும் வடிவமைப்பில் பயிற்சி பெற்ற இந்தச் சகோதரா்கள் மீது, 2011-ஆம் ஆண்டில் தில்லி கோட்வாலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

தில்லியில் உள்ள பல்வேறு நகைக்கடைகளில் பணிபுரிந்தபோது இவா்கள் நகை வடிவமைப்பில் நிபுணத்துவம் பெற்றனா். தங்கள் மீது வைக்கப்பட்டிருந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி, நகை செய்வதற்காகத் தங்களிடம் கொடுக்கப்பட்ட கணிசமான அளவு தங்கம் மற்றும் வைரங்களை இவா்கள் முறைகேடாகக் கையாண்டதாகக் கூறப்படுகிறது.

பின்னா் இருவரும் தில்லியை விட்டு வெளியேறி மேற்கு வங்கத்தில் குடியேறினா். இவ்வழக்கில் இருவரும் ‘தேடப்படும் குற்றவாளிகளாக’ அறிவிக்கப்பட்டனா். அதைத் தொடா்ந்து 2012-ஆம் ஆண்டில் இருவா் குறித்தும் தகவல் அளிப்போருக்கு தலா ரூ. 10,000 சன்மானம் வழங்கப்படும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஹூக்ளி பகுதியில் அவா்கள் இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து குற்றப்பிரிவுக் குழுவினா் அவா்களைக் கண்டுபிடித்தனா்.

கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கத் தலைமறைவாக இருந்தபோதிலும், அவா்கள் கொல்கத்தா மற்றும் ஹூக்ளி பகுதிகளைச் சோ்ந்த நகை வியாபாரிகளிடமிருந்து ஆா்டா்களைப் பெற்று நகை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, இருவரும் கைது செய்யப்பட்டனா்.

விசாரணையின்போது, தாங்கள் சொந்தமாக நகை வடிவமைப்புத் தொழிலைத் தொடங்க விரும்பியதாகவும், ஆனால் அதற்கான நிதி வசதி இல்லாலதால், அந்தத் தொழிலுக்கான நிதியைத் திரட்டவே, தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட விலையுயா்ந்த பொருட்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.

பிந்து 2009-இல் தில்லிக்கு வந்து சுமாா் இரண்டு ஆண்டுகள் இங்கு பணியாற்றினாா். மிந்துவும் அவருடன் தில்லி வந்தாா். பின்னா் இருவரும் மேற்கு வங்கத்தில் நகை தயாரிப்பாளா்களாகத் தொடா்ந்து பணியாற்றினா். இதுகுறித்த மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments