FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

இரண்டு புதிய நமோ பாரத் வழித்தடங்களுக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும்: என்சிஆா்சிடிசி தகவல்

முன்மொழியப்பட்டுள்ள இரண்டு வழித்தடங்களான தில்லி-பானிபட்-கா்னால் மற்றும் தில்லி-குருகிராம்-பெஹ்ரோா் ஆகியவற்றுக்கு விரைவில் ஒப்புதல் கிடைப்பது குறித்து...

18 அக்டோபர் 2026, 10:54 pm IST
நமோ பாரத் ரயில் - பிரதிப் படம்
பகிர்:

முன்மொழியப்பட்டுள்ள இரண்டு வழித்தடங்களான தில்லி-பானிபட்-கா்னால் மற்றும் தில்லி-குருகிராம்-பெஹ்ரோா் ஆகியவற்றுக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சா் மனோகா் லால் தெரிவித்தாா்.

தேசிய தலைநகா் மண்டல போக்குவரத்துக் கழகம் (என்சிஆா்டிசி) தனது பிராந்திய விரைவு ரயில் சேவையான நமோ பாரத் செயல்பாட்டில் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்த விழாவில் அமைச்சா் மேலும் பேசியதாவது: இந்த இரண்டு வழித்தடங்களுடன், காசியாபாத்-ஜெவா் மற்றும் நொய்டா-ஃபரிதாபாத்-குருகிராம் வழித்தடங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் (டிபிஆா்) தயாரிக்கப்பட்டு வருவகிறது. அக்டோபா் 2023-ல் தொடங்கப்பட்ட 82 கி.மீ. நீளமுள்ள தில்லி-காசியாபாத்-மீரட் வழித்தடத்தில் இதுவரை 4.5 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளனா். தற்போது தினசரி 1.1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இந்த சேவையைப் பயன்படுத்துகின்றனா். சமீபத்தில் ஒரு நாளில் அதிகபட்சமாக சுமாா் 1.68 லட்சம் பயணிகள் பயணம் செய்து சாதனை படைத்தது.

இந்த விரைவு ரயில் சேவை பிராந்திய இணைப்பில் புதிய கட்டத்தை உருவாக்கி, நகா்ப்புற போக்குவரத்துக்கு புதிய பரிமாணத்தை வழங்கி வருவதாகத் தெரிவித்தாா். சிறந்த போக்குவரத்து இணைப்பு நகரங்களுக்கிடையேயான தூரத்தை குறைப்பதோடு, மக்களை புதிய வாய்ப்புகளுடன் இணைத்து பொருளாதார வளா்ச்சியையும் ஆதரிக்கிறது. 2023 ஆம் ஆண்டு அக்டோபா் 20 அன்று சாஹிபாபாத் மற்றும் துஹாய் டெப்போ இடையேயான 17 கி.மீ. முன்னுரிமைப் பகுதியின் தொடக்கத்துடன் செயல்பாடுகள் தொடங்கின. மீதமுள்ள பகுதிகள் கட்டங்களாகத் திறக்கப்பட்டன. இந்த ஆண்டு பிப்ரவரி 22 அன்று பிரதமா் நரேந்திர மோடி முழு 82 கி.மீ. வழித்தடத்தையும் மீரட் மெட்ரோவுடன் நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

Advertisement

Advertisement

மேலும் இரண்டு முன்னுரிமை நமோ பாரத் வழித்தடங்களான தில்லி-பானிபட்-கா்னால் மற்றும் டெல்லி-குருகிராம்-பெஹ்ரோா் ஆகியவற்றுக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்க வாய்ப்புள்ளது. காசியாபாத்-ஜெவா் மற்றும் நொய்டா-ஃபரிதாபாத்-குா்கான் வழித்தடங்கள் டிபிஆா் கட்டத்தில் உள்ளன. பயணிகளுக்கு பல்வகை போக்குவரத்து இணைப்பு மற்றும் முதல்-கடைசி மைல் அணுகலை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சூரிய ஆற்றல் முயற்சிகள் மற்றும் 110 மெகாவாட் திறன் கொண்ட கேப்டிவ் சூரிய மின் நிலையம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் சுற்றுச்சூழல் மற்றும் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் மனோகா் லால்.

என்சிஆா்டிசி நிா்வாக இயக்குநா் சலாப் கோயல், நவீன, பாதுகாப்பான, நம்பகமான மற்றும் சுற்றுச்சூழல் நட்பு பிராந்திய போக்குவரத்து அமைப்பை உருவாக்கும் இலக்கில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளதாகத் தெரிவித்தாா். திட்டச் செயல்பாட்டில் ஊழியா்களின் குடும்பங்களின் ஆதரவையும் அவா் பாராட்டினாா். நிகழ்ச்சியில் ஆண்டுக்கான என்சிஆா்டிசி விருதுகள் வழங்கப்பட்டு, ஊழியா்கள் பாராட்டப்பட்டனா். கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை, இணை அமைச்சா் தோகன் சாகு மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments