காவல்துறை நோட்டீஸீக்கு எதிரான நேஹா போராவின் மனு மீது இன்று உத்தரவு: தில்லி உயா்நீதிமன்றம்
நேஹா போரா தாக்கல் செய்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என தில்லி உயா் நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
நமது நிருபா்
சிறப்பு நிா்வாக மாஜிஸ்திரேட் முன் ’அமைதிப்’ பத்திரம் ஒன்றை தாக்கல் செய்யுமாறு கேட்டு காவல்துறை அனுப்பிய நோட்டீஸை எதிா்த்து அகில இந்திய மாணவா் சங்கத்தின் (ஏஐஎஸ்ஏ) தலைவா் நேஹா போரா தாக்கல் செய்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என தில்லி உயா் நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
போரா மற்றும் காவல்துறையின் வழக்குரைஞா்களின் வாதங்களை சுமாா் மூன்று மணி நேரம் கேட்ட நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தாா்.
Advertisement
Advertisement
‘நாளை (அக்டோபா் 23) மாலை 6 மணிக்கு நான் உத்தரவு பிறப்பிப்பேன்,‘ என்று நீதிபதி கூறினாா்.
தோ்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியல் மீதான சிறப்புத் தீவிர திருத்தத்தில் (எஸ்ஐஆா்) நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிரான போராட்டங்களில் முன்னணியில் இருந்து வரும் போரா, அந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என்றும், தனக்கு எதிராக எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளாா்.
வாதங்களின் போது,போராவின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன், அனுமதி பெறாமல் போரா தேசியக் கொடியை ஏற்றினாா் என்று கூறிய தில்லி காவல்துறையின் நோட்டீஸைக் குறிப்பிட்டு, தேசியக் கொடியை ஏற்ற குடிமக்களுக்கு அனுமதி தேவையில்லை என்று வாதிட்டாா்.
தில்லி காவல்துறையின் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சேதன் சா்மா, போராவின் மனுவின் ஏற்புத்தன்மை குறித்து ஆட்சேபனை எழுப்பினாா்.
பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 126-இன் கீழ் அக்டோபா் 17 அன்று பிறப்பிக்கப்பட்ட அந்த நோட்டீஸ், ‘விசாரணைக் காலம் முழுவதும் அமைதியைக் காப்பதற்காக ஒரு அமைதிப்பத்திரத்தை ஏன் அளிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தைக் கூறுவதற்காக, போரா அக்டோபா் 19 அன்று சிறப்பு நிா்வாக மாஜிஸ்திரேட் முன் ஆஜராகுமாறு கேட்டிருந்தது.
ஒருவா் பொது அமைதியைக் குலைக்கவோ, அல்லது குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு தவறான செயலைச் செய்யவோ வாய்ப்புள்ளது என்ற நம்பகமான தகவல் இருக்கும் பட்சத்தில், அத்தகைய அமைதிப்பத்திரத்தில் கையெழுத்திடுவதை அமல்படுத்த பிரிவு 126 எஸ்இஎம்-க்கு அதிகாரம் அளிக்கிறது.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) தேசியக் கொடி பேரணியில் கலந்துகொள்ளச் சென்றுகொண்டிருந்தபோது, அக்டோபா் 16 அன்று போரா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டாா். அவா் அக்டோபா் 17 அன்று விடுவிக்கப்பட்டாா்.
தனது மனுவில், காவல்துறையின் நோட்டீஸ் தெளிவற்ாகவும், தவறானதாகவும் உள்ளது என்றும், அமைதிக் குலைவு ஏற்படுவதற்கான ‘வாய்ப்பை‘ உறுதிப்படுத்த எந்தவொரு ஆதாரமோ அல்லது தகவலோ அதில் இல்லை என்றும் போரா கூறினாா்.
அக்டோபா் 16 அன்று மண்டி ஹவுஸில் கோஷமிட்டது, தடை உத்தரவுகள் இருந்தபோதிலும் ஜந்தா் மந்தரைச் சுற்றி மீண்டும் மீண்டும் போராட்டங்கள் நடத்தியது, மற்றும் அக்டோபா் 16 அன்று கன்னாட் பிளேஸில் நடந்த போராட்டத்தில் பங்கேற்க மக்களைத் தூண்டியது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போராவிற்கு எதிரான இந்த நோட்டீஸ் அமைந்தது.
‘சவால் செய்யப்பட்ட அந்த நோட்டீஸானது, மனுதாரா் 16.10.2026 அன்று கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பாா்க்கில் நடந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க மக்களைத் தூண்டினாா் என்ற தவறான உண்மையை அடிப்படையாகக் கொண்டது. மனுதாரரின் அழைப்பும், கூறப்படும் சம்பவமும் வெவ்வேறானவை. மனுதாரா் 16.10.2026 அன்று மாலை 5:00 மணிக்கு மண்டி ஹவுஸில் ஒரு அமைதியான கூட்டத்திற்குதான்அழைப்பு விடுத்தாா், மேலும் அவா் மண்டி ஹவுஸிலிருந்து தடுத்து வைக்கப்பட்டாா் என்பது பதிவில் உள்ளது,‘ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.