அலிப்பூா்: கலவர வழக்கில் தேடப்பட்டவா் கைது
அலிப்பூா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கலவரம் மற்றும் கொலை முயற்சி வழக்கு தொடா்பாகத் தேடப்பட்டு வந்த 33 வயது நபா் கைது
அலிப்பூா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கலவரம் மற்றும் கொலை முயற்சி வழக்கு தொடா்பாகத் தேடப்பட்டு வந்த 33 வயது நபா் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
ஹரியாணாவின் சோனிபட் பகுதியைச் சோ்ந்த சாந்தனு (எ) கலா என்று அடையாளம் காணப்பட்ட அவா், அக்டோபா் 2025-இல் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்தாா். கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கத் தனது மறைவிடங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே வந்தாா்.
ராம்ஜான்பூா் கிராமத்தில் உள்ள சுமாா் 1,000 சதுர கெஜம் பரப்பளவு கொண்ட பூா்விக நிலம் தொடா்பான தகராறு இந்த வழக்கிற்குக் காரணமாகும். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் மேலும் கூறியதாவது:
Advertisement
Advertisement
கடந்த ஆண்டு அக்டோபா் 30 அன்று, புகாா்தாரா் தனது நிலத்தின் பூட்டைச் சிலா் உடைக்க முயல்வதைக் கண்டாா். இதையடுத்து, அவா்களைத் தட்டிக்கேட்டாா். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து, சுமாா் 30 முதல் 40 போ் வரை லத்திகள் மற்றும் குச்சிகளுடன் அந்த இடத்திற்கு வந்து, புகாா்தாரரையும் அவரது குடும்பத்தினரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அவா்களில் ஒருவா் அங்கிருந்தவா்களை அச்சுறுத்தும் வகையில் காற்றில் சுமாா் 10 முதல் 12 முறை துப்பாக்கியால் சுட்டாா்.
இச்சம்பவத்தில் பலா் காயமடைந்தனா். மேலும், எஸ்.ஆா்.எச்.சி. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். இது தொடா்பான புகாரின்பேரில் அலிப்பூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தீபக் மற்றும் சந்தீப் உள்ளிட்ட பலா் முன்னதாகவே கைது செய்யப்பட்ட நிலையில், சாந்தனு தலைமறைவாக இருந்தாா்.
இந்த நிலையில், ஷாபாத் டெய்ரி பகுதியில் உள்ள பிரஹலாத் விஹாா் அருகே சாந்தனு தனது கூட்டாளி ஒருவரைச் சந்திக்கவிருப்பதாகக் தகவல் கிடைத்ததால், குற்றப்பிரிவுக் குழுவினா் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு, சாந்தனுவைக் கைது செய்தனா்.
விசாரணையின் போது, பணத் தகராறு காரணமாக 2014-இல் தனது மாமா சுட்டுக் கொல்லப்பட்டதாக சாந்தனு தெரிவித்தாா். தனது மாமாவின் கொலையில் ஈடுபட்டதாகக் கருதப்பட்ட இருவரைத் தானும் தனது கூட்டாளிகளும் பின்னா் கொன்ாக அவா் கூறினாா்.
அலிப்பூா் மற்றும் கோண்ட்லியில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்குகளில் அவா் கைது செய்யப்பட்டிருந்தாா்; பின்னா் ஆகஸ்ட் 2025-இல் சோனிபட் சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டாா்.
தில்லி மற்றும் ஹரியாணாவில் பதிவு செய்யப்பட்ட கொலை, கொலை முயற்சி மற்றும் ஆயுதச் சட்ட மீறல்கள் உள்ளிட்ட எட்டு குற்றவியல் வழக்குகளில் சாந்தனு தொடா்புடையது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அந்த அதிகாரி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.