FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நூல் அரங்கம்

அழகர்கோயில்

களத்தில் மேற்கொள்ளப்பட்டவற்றுடன் ஆய்வுக்கு உதவிய துணை நூல்களின் பட்டியலில் மட்டுமே 81 தமிழ் நூல்களும், 124 ஆங்கில நூல்களும் இடம் பெற்றிருப்பதே உழைப்பின் சிறப்பைக் காட்டுகிறது.

Updated On : 13 ஜூலை 2026, 5:59 pm IST
பகிர்:

அழகர்கோயில் - தொ. பரமசிவன்; பக். 384; ரூ. 380; கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை-600 017, ✆ 97910 71218.

கள ஆய்வு நூலொன்று எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான தலைசிறந்த எடுத்துக்காட்டு தொ. பரமசிவனின் அழகர்கோயில். மதுரை அருகேயுள்ள வைணவக் கோயிலான அழகர்கோயிலின் வரலாறு மட்டுமின்றி சமுதாய, பண்பாடுகளும் நூலில் ஆராயப்படுகின்றன. இந்தப் பகுதியில் வாழும் வலையர், கள்ளர் ஜாதியினருடன் கோயிலுக்கு வரும் பெருந்தொகையினரான தாழ்த்தப்பட்ட மக்கள், இடையர் ஆகியோருடன் கோயிலுக்குள்ள உறவுகளும் விரிவாக ஆய்வுக்குள்படுத்தப்பட்டுள்ளன.

பன்னிரண்டு இயல்களைக் கொண்ட நூலில் கோயிலின் அமைப்பு, தோற்றம், இலக்கியங்களில் அழகர்கோயில், ஆண்டாரும் சமயத்தாரும் என்ற இயல்பான தடத்தில் தொடங்கினாலும் கோயிலும் சமூகத் தொடர்புகளும் பற்றிய இயல் இடைநிலை, விளிம்புநிலை ஜாதியினர் எவ்வாறு கோயிலுடனும் வழிபாடுகளுடனும் கலந்திருக்கின்றனர் என்பதை விரிவாகப் பேசுகிறது.

Advertisement

Advertisement

தமிழ்நாட்டின் பிரம்மாண்டமான சித்திரைத் திருவிழா குறித்து மட்டும் மூன்று இயல்களில் பழமரபுக் கதை உள்பட அலசப்படுகின்றன. பதினெட்டாம்படி கருப்பு, வர்ணிப்புப் பாடல்கள் ஆகிய இரண்டு இயல்களும் தனித்தனி ஆய்வுகளுக்குரிய தகவல்களைக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாடெங்குமுள்ள கருப்பசாமி கோயில்களை அறிந்துகொள்ள பதினெட்டாம்படியிலிருந்து தொடங்கலாம்.

பிற்சேர்க்கையில் ஆறுபடை வீடுகளும் மலை மீதுள்ள பழமுதிர்சோலையும் தொடர்பான அனைத்து வாதங்களையும் முன்வைத்து விளக்கும் நூலாசிரியர், கோயில் தொடர்பான கல்வெட்டுக் குறிப்புகளையும் பட்டியலிட்டுள்ளார்.

களத்தில் மேற்கொள்ளப்பட்டவற்றுடன் ஆய்வுக்கு உதவிய துணை நூல்களின் பட்டியலில் மட்டுமே 81 தமிழ் நூல்களும், 124 ஆங்கில நூல்களும் இடம் பெற்றிருப்பதே உழைப்பின் சிறப்பைக் காட்டுகிறது.

தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான கோயில்களுக்கும் வரலாற்றுத் தகவல்கள், தல புராணங்களைத் தாண்டி, இத்தகைய சமுதாய, பண்பாட்டுச் சீராய்வுகள் தேவைப்படுகின்றன என்பதைச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது அழகர்கோயில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments