ஏரிகாத்த ராமர் கோயில் பிரம்மோற்சவம்: இன்று பெரிய தேரோட்டம்
ஏரிகாத்த ராமர் கோயிலின் ஆனி மாத பிரம்மோற்சவ விழாவின் 8ஆம் நாள் விழாவாக பெரிய தேரோட்ட நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
ஏரிகாத்த ராமர் கோயிலின் ஆனி மாத பிரம்மோற்சவ விழாவின் 8ஆம் நாள் விழாவாக பெரிய தேரோட்ட நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
மதுராந்தகம் நகரின் முக்கிய வைணவக் கோயிலாக விளங்கும் ஏரிகாத்த ராமர் கோயிலின் ஆனி மாத பிரம்மோற்சவ விழா கடந்த வெள்ளிக்கிழமை (22ஆம் தேதி) கொடியேற்றத்துடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. அதைத் தொடர்ந்து யாளி, சிம்ம வாகனம், சந்திரப் பிரபை, சூரியப் பிரபை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கருணாகரப் பெருமான் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்து காட்சி அளித்தார். வியாழக்கிழமை இரவு 9.30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோதண்டராமர் புஷ்பக விமானத்தில் (வெள்ளித்தேர்) மேளதாளம் முழங்க, வாண வேடிக்கைகளுடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்து காட்சி அளித்தார்.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை, அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோதண்டராமர் எழுந்தருளி தேரடி வீதி, செட்டித் தெரு, ஹாஸ்பிட்டல் சாலை, பஜார் வீதி ஆகிய முக்கிய வீதிகளின் வழியாக பவனி வருகிறார். காலை 9 மணிக்கு பெரிய தேரோட்ட வடத்தை எம்எல்ஏ எஸ்.புகழேந்தி, எம்.பி. மரகதம் குமரவேல் ஆகியோர் இழுத்து தொடங்கி வைக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் நகரமன்ற முன்னாள் தலைவர் மலர்விழி குமார், நகர திமுக செயலர் கே.குமார், காஞ்சி மத்திய மாவட்ட அதிமுக செயலர்
எஸ்.ஆறுமுகம், பேரவைச் செயலர் ஆனூர் பக்தவத்சலம், மதுராந்தகம் சார் ஆட்சியர் மாலதி, வட்டாட்சியர் ஏகாம்பரம் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏரிகாத்த ராமர் கோயில் செயல் அலுவலர் (பொறுப்பு) தியாகராஜன் தலைமையில் விழாக் குழுவினர் செய்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.