காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் புதிய திருத்தேர் பணிகள் தொடக்கம்!
300 ஆண்டு பழமையான வரதராஜ பெருமாள் திருத்தேருக்கு பதிலாக ரூ. 4.5 கோடி மதிப்பில் புதிய தேர் பற்றி..
300 ஆண்டுகள் பழமையான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் திருத்தேருக்குப் பதிலாக ரூ. 4.5 கோடி மதிப்பீட்டில் புதிய தேர் செய்யும் பணியினை அமைச்சர்கள் தென்னரசு, ரஞ்சித்குமார், ஆட்சியர் சினேகா தொடங்கி வைத்தனர்.
கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் வைணவ தலங்களில் புகழ்பெற்றதும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான உள் மற்றும் வெளிமாநில பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
திருக்கோயில் மிகவும் புகழ்பெற்ற வைகாசி பிரம்மோற்சவத்தில் 63 அடி திருத்தேரில் ஏழாம் நாள் காஞ்சி நகரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதில் பல லட்சம் மக்கள் கலந்து கொண்டு இறையருள் பெறுவர்.
Advertisement
Advertisement
இந்நிலையில், 300 ஆண்டுகள் பழமையான இந்த திருத்தேருக்குப் பதிலாக புதிய செய்யும் பணி கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தின் போது ரூ. 4.5 கோடி மதிப்பீட்டில் தனி நபர் ஒருவரின் கைங்கரியத்தால் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது ஆட்சி மாற்றம் நடைபெற்றுள்ள நிலையில், புதிய திருத்தேர் செய்யும் பணி இன்று திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் தமிழக வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் தென்னரசு வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித் குமார் மற்றும் காஞ்சிபுரம் ஆட்சியர் சினேகா எஸ்.பி. அரவிந்த் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமாரத்துரை உள்ளிட்டோர் பங்கேற்று பணிகளைச் சிறப்புப் பூஜைகளுடன் துவக்கி வைத்தனர்.
இத்திருத்தேர் செய்யும் பணிகளை மேற்கொள்ளும் ஸ்தபதி கதிரவன் கூறுகையில், 63 அடி உயரமும் 25 அடி 5 அங்குலம் அகலமும் கொண்ட தொண்டை மண்டல பாரம்பரிய முறைப்படி இத்திருத்தேர் அமையும். ஏழு நிலை கொண்ட இந்த தேர் பணிகளை 60 பேர் கொண்ட குழுவினர் ஒரு வருட காலத்திற்குள் செய்து முடிக்கும் வகையில் இது அமையும். தேர் நிலைகளுக்கு ஏற்ப மரங்களின் பயன்பாடு இதில் இருக்கும். முற்றிலும் இது புதிய தேர் எனத் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.