சுவாமிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்!
சுவாமி மலையில் கந்த சஷ்டி விழா தொடங்கியது பற்றி..
முருகனின் நான்காம் படை வீடான சுவாமி மலையில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசை நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமி மலை அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு கொண்ட இத்தலத்தில், 60 தமிழ் வருட தேவதைகளும், முருக பக்தர்களுக்கு சேவை செய்யும் வகையில், 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டுமலைக் கோயிலாகும்.
"ஓம்" எனும் மந்திரப் பொருளை, தந்தை சிவபெருமானுக்கு குருவாக இருந்து, உபதேசம் செய்து, சுவாமிக்கே, நாதன் ஆனதால் இத்தலத்தில் முருகப்பெருமான் சுவாமிநாதசுவாமி என போற்றப்படுகிறார். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும், கந்த சஷ்டி திருவிழா 10 நாள்கள் நடைபெறும். இதேபோல் இந்தாண்டு திருவிழா இன்று தொடங்கியது.
Advertisement
Advertisement
சந்திரசேகரர், அம்பாள், வள்ளி, தெய்வானை, சண்முகர் சமமேதராக வீரகேசரி, வீரபாகு ஆகியோருடன், மலைக்கோயிலில் இருந்து படியிறங்கி உற்சவ மண்டபத்திற்கு எழுந்தருதளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். விழாவினை ஒட்டி தினமும் பல்வேறு வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக 6ம் நாளான, சஷ்டி நன்ளான வரும் 18ம் தேதி சனிக்கிழமை காலை 11 மணியளவில், வள்ளி தெய்வானை சமேத சண்முகருக்கு 108 சங்காபிஷேகமும் தொடர்ந்து மாலை தாயார் மீனாட்சி அம்மனிடம், சண்முகர் சுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்து சக்திவேல் வாங்குதல் நிகழ்வும் பின்னர், கிழக்கு சன்னதியில் கஜமுக சூரன் மற்றும் சிங்கமுக சூரன் ஆகியோரை வதம் செய்கின்ற நிகழ்வும், தெற்கு வீதியில் சூரபத்மனை வதம் செய்கின்ற நிகழ்வும் நடைபெறுகிறது. பின்னர் நிறைவாக, தங்கமயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது