வெக்காளியம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்! திரளானோர் பங்கேற்பு
அதிராம்பட்டினத்தில் வெக்காளியம்மன் கோயிலில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேகம் பற்றி..

20 அடி உயரமுள்ள வெக்காளியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினத்தில் அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வெக்காளியம்மன் சுமார் 20 அடி உயரத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
சிறப்பு வாய்ந்த 20 அடி உயரமுள்ள வெக்காளியம்மனுக்கு இன்று அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 18 ஆம் தேதி முதல் கால யாகசாலை தொடங்கியது. இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது.
Advertisement
Advertisement
அதனைத் தொடர்ந்து நாதஸ்வரம், மேளம், தப்பாட்டம் முழங்க கடம் புறப்பட்டு கோயிலைச் சுற்றி வலம் வந்து அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை ஊற்றினர்.
இந்த கும்பாபிஷேக விழாவில் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மஹா கும்பாபிஷேகத்தை கண்டு அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மனையும், பரிவார தெய்வங்களையும் வழிபட்டுச் சென்றனர்.