தமிழகத்தில் நிஜரூப தரிசனம் அளிக்கும் முக்கிய கோயில்கள்!
தமிழகத்தில் நிஜரூப தரிசனம் அளிக்கும் முக்கிய கோயில்கள் பற்றி...
_.jpeg?w=720&q=55&auto=format%2Ccompress&fit=max)
தமிழ்நாட்டில் எண்ணற்ற கோயில்கள் நிறைந்துள்ளன. அதிகக் கோயில்களைக் கொண்ட மாவட்டங்களின் பட்டியலில், மதுரை, தஞ்சை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட நகரங்கள் முன்னணியில் உள்ளன.
பல கோயில்களில், இறைவன் ரூபங்கள் ஆண்டு முழுக்க சந்தனம், கவசம், ஆலங்காரங்களால் மூடப்பட்டு பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் நிலையில், ஒரு சில நாள்கள் மட்டும் கவசம் அல்லது அலங்காரம் இன்றி இறைவனை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
பெரும்பாலும் இதுபோன்ற இறைவன் ரூபங்கள் சுயம்பு வடிவாகவும் அமைந்திருக்கும். தமிழகத்தில் எண்ணற்ற நிஜரூப தரிசனம் அளிக்கும் கோயில்கள் உள்ளன.
Advertisement
Advertisement
அவற்றில் முக்கியமான கோயில்களாக சிலவற்றை பட்டியலிடலாம்.
உத்தரகோசமங்கைக் கோயில்
ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கைக் கோயிலில் உள்ள மரகத நடராஜரை ஆண்டு முழுக்க சந்தனக் காப்புடன்தான் தரிசிக்க முடியும். மார்கழி மாதத்தில் வரும் ஆருத்ரா அபிஷேகத்தின்போது மட்டுமே சந்தனம் களைக்கப்பட்டு, அபிஷேகம் செய்து ஓரிரு நாள் நடராஜரை நிஜ ரூபத்தில் தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மறுநாள் மாலையில் மீண்டும் சந்தனக் காப்பு போடப்பட்டு மரகத நடராஜர், சந்தனக் காப்புடன் காட்சித் தருவார்.
திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர்
சென்னையில் திருவொற்றியூர் பகுதியில் அமைந்துள்ள திருஒற்றீஸ்வரர் எனப்படும் ஆதிபுரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சுயம்பு புற்று வடிவ ஆதிபுரீஸ்வரர் ஆண்டு முழுவதும் தங்கக் கவசத்தால் மூடப்பட்டுதான் பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.
ஆனால், கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில் கவசம் களையப்பட்டு மூன்று நாள்களுக்கு அவர் சாம்பிராணி தைலம் மற்றும் புனுகு சாத்தப்பட்டு நிஜரூப தரிசனம் தருவார். இதனைக் காண பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர்
சென்னையை அடுத்த ஆவடி பகுதிக்கு அருகே அமைந்துள்ளது திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கோயிலில் உள்ள சுயம்பு லிங்கம் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பு சாத்தப்பட்டு காட்சித் தருவார். சித்திரை மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு களையப்பட்டு நிஜரூப தரிசனம் இரண்டு நாள்களுக்கு நடைபெறும். மூலவரின் சுயம்பு தரிசனத்தை ஆயிரக்கணக்கானோர் வந்து காண்பது வழக்கம்.
திருவண்ணாமலை
முழு அலங்காரத்துடன் காட்சி தரும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், மூலவர், கார்த்திகை தீபத்தன்று, பரணி தீபம் ஏற்றுவதற்கு முன்பு,சிறப்பு அலங்காரங்கள் ஏதுமின்றி நிஜரூப தரிசனம் தருவது மிகவும் சிறப்பு.
பழனி தண்டாயுதபாணி கோயில்
நவபாஷாணத்தால் ஆன மூவருக்கு அதிகாலையில் விஸ்வரூப தரிசனத்தின்போது மட்டுமே ராஜ அலங்காரம் இன்றி ஆண்டிக் கோலத்தில் தரிசனம் தருவதை நிஜரூப தரிசனம் என வழிபடுகிறார்கள் முருக பக்தர்கள்.
இதுபோல பல கோயில்களில் இறைவன் நிஜரூப தரிசனங்கள் தருவது வழக்கம். தற்போது திருவொற்றியூரில் அமைந்துள்ள ஆதிபுரீஸ்வரர் நிஜரூப தரிசனத்தில் காட்சியளித்து வருகிறார். நாளை வரை மட்டுமே இந்த தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். பிறகு தங்கக் கவசம் சாற்றப்படும்.