முகப்பு
பரிகாரத் தலங்கள்

திருமண பிரார்த்தனைத் தலம் வலஞ்சுழிநாதர் கோவில், திருவலஞ்சுழி

காவிரி தென்கரை பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில் 25-வது தலமாக திருவலஞ்சுழி விளங்குகிறது.

Updated On : 25 ஆகஸ்ட், 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:14 PM

காவிரி தென்கரை பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில் 25-வது தலமாக திருவலஞ்சுழி விளங்குகிறது. அம்பாள் பெரியநாயகியின் சந்நிதி, இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்துள்ளது. இத்தகைய அமைப்புள்ள தலங்கள் திருமணத் தலங்கள் என அழைக்கப்படுகின்றன. அவ்வகையில், இத்தலம் ஒரு திருமண பிரார்த்தனைத் தலமாகக் கருதப்படுகிறது. திருமணத் தலமாக இருந்தாலும், சிறப்புபெற்ற சுவேத விநாயகர் சந்நிதி இருப்பதால் இத்தலம் மேலும் சிறப்பு பெறுகிறது.

இறைவன் பெயர்: கற்பகநாதேஸ்வரர், வலஞ்சுழிநாதர், கபர்த்தீசர்

இறைவி பெயர்: பெரியநாயகி, பிருகந்நாயகி

Advertisement

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்று, திருஞானசம்பந்தர் பதிகம் மூன்று என மொத்தம் நான்கு பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது

கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில், சுவாமிமலைக்கு அருகே இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர், பாபநாசம், சுந்தரப்பெருமாள் கோயில் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துச் சாலையில் சென்று கோயிலை அடையலாம். கோயில் சாலையோரத்தில் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு வலஞ்சுழிநாதர் திருக்கோயில்,

திருவலஞ்சுழி, சுவாமிமலை அருகில்,

கும்பகோணம் வட்டம்,

தஞ்சை மாவட்டம் – 612 302.

இவ்வாலயம், தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

காவிரி நதி வலமாக சுழித்துச் செல்லும் இடத்தில் அமைந்துள்ளதால், இத்தலம் திருவலஞ்சுழி என்று பெயர் பெற்றது. அவ்வாறு வலம் சுழித்துச் சென்ற காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால், ஒரு பெரிய பிலத்துவாரம் (பள்ளம்) ஏற்பட்டது.

பாய்ந்து வந்த காவிரியாறு, ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கிவிட்டது. அதுகண்ட சோழ மன்னன் கவலையுற்றுத் திகைத்தபோது, அசரீரியாக இறைவன் தோன்றி, மன்னனோ மகரிஷியோ இறங்கி அப்பாதாளத்தில் பலியிட்டுக்கொண்டால், அப்பிலத்துவாரம் மூடிக்கொள்ளும். அப்போது காவிரி வெளிப்படும் என்றருளினார்.

அதைக்கேட்ட மன்னன், கொட்டையூர் என்ற ஊரில் ஏரண்டம் என்னும் கொட்டைச் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ள இடத்தில் தவம் செய்த ஏரண்ட (ஹேரண்ட) முனிவரிடம் சென்று, அசரீரி சொன்ன செய்தியைச் சென்னான். இதைக் கேட்ட ஏரண்ட முனிவர், நாட்டுக்காகத் தியாகம் செய்ய முன்வந்தார். அவர் அந்தப் பிலத்துவாரத்தில் இறங்கி தன்னைப் பலி கொடுக்கவும், பள்ளம் மூடிக்கொள்ள காவிரி வெளிப்பட்டாள். ஏரண்ட முனிவருக்கு இக்கோவிலில் சிலை இருக்கிறது.

இன்றும் மஹாசிவராத்திரி நாளில் இரவில் நான்கு ஜாமங்களிலும் ஆதிசேஷன் வெளிப்பட்டு திருவலஞ்சுழி, திருநாகேச்சுரம், திருப்பாம்புரம், நாகைக்காரோணம் என்னும் தலங்களில் வந்து வழிபடுவதாகச் செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது.

சுவேத விநாயகர்

திருவலஞ்சுழியில் உள்ள தல விநாயகர், சுவேத விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். தேவர்கள் திருப்பாற்கடலை கடையத் தொடங்கும்முன், விநாயக பூஜை செய்ய மறந்தார்கள். அதனால்தான் ஆலகால விஷம் பாற்கடலில் இருந்து வெளிவந்தது. அதனால் அவதிகளுக்கு ஆளான தேவர்கள், தங்கள் தவறை உணர்ந்து, அந்த வேளையில் விநாயகரை ஆவாஹனம் செய்ய வேறு ஏதும் இல்லா நிலையில், பொங்கி வந்த கடல் நுரையைப் பிடித்து பிள்ளையாரை உருவாக்கி பூஜை செய்தனர். அதன்பின், விநாயகர் அருளால் எடுத்த காரியம் பூர்த்தி அடைந்து அமுதம் பெற்றார்கள்.

அந்த விநாயகர் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்ய திருவலஞ்சுழியே ஏற்ற இடம் என இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்ட இந்திரன், ஒரு கோயிலும் கட்டினான். இன்றும் அந்தக் கோயிலில் இந்திரன் பூஜித்த அந்த விநாயகர் மூர்த்தி அருள் பாலிக்கிறார்.

அத்துடன், ஒவ்வொரு விநாயக சதுர்த்தி அன்று தேவேந்திரன் வந்து விநாயகரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். தேவர்களால் உருவாக்கப்பட்ட இந்த விநாயகர்தான் திருவலஞ்சுழியில் உள்ள ஸ்வேத விநாயகர்.

கடல் நுரையால் ஆனதால், மற்ற ஆலயங்களில் நடப்பது போன்ற அபிஷேகம் இவருக்கு இங்கே இல்லை. சுமார் 10 அங்குல உயரமே உள்ள இந்த வெள்ளைப் பிள்ளையாருக்கு புனுகு மட்டும் சாத்துவார்கள். மேலும் பச்சைக் கற்பூரத்தைக் குறிப்பிட்ட பக்குவத்தில் அரைத்து, அதை இந்த விநாகயரின் திருமேனியைத் தொடாமல், அவர் மேல் மெல்ல தூவி விடுவார் அர்ச்சகர். அதனால், இந்த விநாயகர் தீண்டாத் திருமேனி ஆவார். விநாயகர் துதிக்கை வலப்பக்கம் சுழித்துள்ளதால், திருவலஞ்சுழி என இத்தலம் பெயர் பெற்றதென்றும் கூறுவர்.

கோவில் அமைப்பு

திருவிடைமருதூருக்குரிய பரிவாரத் தலங்களுள் திருவலஞ்சுழி, விநாயகருக்கு உரிய தலமாகும். இத்தலத்திலுள்ள கற்பகநாதேஸ்வரர் கோவில் ஒரு பெரிய கோவில். கிழக்கு நோக்கி உள்ள ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. கோபுர வாயில் கடந்து நீண்ட வழியே சென்று மூன்று நிலை கோபுரத்தை அடையலாம். அம்பாள் பெரியநாயகியின் சந்நிதி, இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்துள்ளது.

இத்தகைய அமைப்புள்ள தலங்கள் திருமணத் தலங்கள் என அழைக்கப்படுகின்றன. இறைவனுக்கும், இறைவிக்கும் உள்ள தனித்தனி சந்நிதிகள் போக, அஷ்டபுஜ மஹாகாளிக்கும், வெளிப் பிராகாரத்தில் பைரவருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள அஷ்டபுஜ காளி சிறப்பு வாய்ந்த மூர்த்தம். ராஜராஜ சோழன் இக்காளியை வழிபட்ட பிறகுதான், போருக்குப் புறப்பட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான்; வெற்றிகள் பல பெற்றான் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள பைரவமூர்த்தி மிகவும் உக்கிரம் வாய்ந்தவராக விளங்கியமையால், அதைத் தணிப்பதற்காகச் சிறிது பின்னப்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. சனீஸ்வரனுக்கும் இவ்வாலயத்தில் தனி சந்நிதி உள்ளது.

இத்தலம் ஒரு திருப்புகழ் தலம். இங்கு உள் பிராகாரத்தில் உள்ள முருகப் பெருமான், ஆறு திருமுகங்களும், பன்னிரு கரங்களும் கொண்டு மயில் மீது அமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் அருகில் நிற்கின்றனர். திருப்புகழில், இத்தல முருகர் மீது ஒரு பாடல் உள்ளது.

கடல் நுரையால் செய்யப்பட்டு இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தியே ஸ்வேத விநாயகர் என்ற வெள்ளைப் பிள்ளையார் ஆவார். இவரே இத்தலத்தின் சிறப்பு மூர்த்தியாவார். இப்பிள்ளையார் உள்ள மண்டபம் இந்திரனால் அமைக்கப்பட்டது என்று புராணங்கள் கூறுகின்றன.

சித்திரத் தூண்களும், கல் குத்துவிளக்கும் கொண்ட அழகான மண்டபமாக இது விளங்குகிறது. இச்சந்நிதியில் உள்ள கருங்கல் பலகணி நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுடன் திகழ்கிறது. இத்தலம் திருமுறைத் தலம் என்பதைவிட வெள்ளை விநாயகர் தலம் என்ற பெயரிலேயே மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது.

இதலத்தின் தீர்த்தங்களாக காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம் ஆகியவையும், தலமரமாக வில்வ மரமும் உள்ளது. ஏரண்ட முனிவர், ஆதிசேஷன், உமையம்மை, இந்திரன், திருமால், பிரம்மன் ஆகியோர் வழிபட்ட தலம் என்ற பெருமையும் திருவலஞ்சுழிக்கு உண்டு.

இத்தகைய சிறப்புபெற்ற விநாயகர் சந்நிதியைக் கொண்டுள்ள இத்தலத்துக்குச் சென்று விநாயகரை வழிபட்டு எல்லா நலமும் பெறுங்கள்.

சம்பந்தர் தேவாரம் – பாடியவர்கள் குமாரவயலூர் பாலசந்திரன், முருக சுந்தர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.