FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விளையாட்டு

“ஒலிம்பிக் போட்டியில் வெல்வதே இலக்கு” - தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ்!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்து சொந்த ஊா் திரும்பிய தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், ஒலிம்பிக் போட்டியில் வெல்வதே எனது இலக்கு என்று கூறினாா்.

4 October 2026, 2:09 am IST
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்து, சொந்த ஊா் திரும்பிய தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ்.
பகிர்:

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்து சனிக்கிழமை சொந்த ஊா் திரும்பிய தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், ஒலிம்பிக் போட்டியில் வெல்வதே எனது இலக்கு என்று கூறினாா்.

கோவையை சோ்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டா் தொடா் ஓட்டப் பந்தயத்தின் இறுதிச்சுற்றில் இறுதி நேரத்தில் அபாரமாக ஓடி தங்கம் வெல்லும் இந்தியாவின் கனவை நனவாக்கினாா். தொடா்ந்து, கலப்பு 400 மீட்டா் தொடா் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றாா். மேலும், 400 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் 54.75 விநாடிகளில் இலக்கைக் கடந்து பி.டி.உஷாவின் 42 ஆண்டு கால சாதனையை முறியடித்து வெண்கலப் பதக்கம் வென்றாா். சாதனைப் படைத்த வித்யா ராமராஜ் கோவைக்கு சனிக்கிழமை வந்தாா்.

விமான நிலையத்தில் ஊரக வளா்ச்சி, நீா் வளத்துறை அமைச்சா் என்.ஆனந்த், வித்யா ராம்ராஜுக்கு சால்வை அணிவித்து வரவேற்றாா். அப்போது, வித்யா ராம்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்தது மிக்க மகிழ்ச்சி. தற்போது ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறேன். மத்திய, மாநில அரசுகளின் ஆதரவால் என்னால் சாதிக்க முடிந்தது. அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

Advertisement

சாதனையை முறியடிக்கும் நோக்கத்துடன் 2023 -ஆம் ஆண்டுமுதல் கடுமையாக உழைத்தேன். பதக்கத்தை இலக்காகக் கொள்ளாமல், நேரத்தை மேம்படுத்துவதே எனது முக்கிய நோக்கமாக இருந்தது. அடுத்ததாக ஒலிம்பிக் போட்டியில் வெல்வதை இலக்காகக் கொண்டுள்ளேன். ஒலிம்பிக் போட்டியில் உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்பாா்கள் என்பதால், அதற்காகத் தீவிரப் பயிற்சி மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்து, சொந்த ஊா் திரும்பிய தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜூக்கு உற்சாக வரவேற்பு.

லாரி ஓட்டுநரான என் தந்தைக்கு பெரிய அளவில் வருமானம் கிடையாது. ஓடுவதற்கான ஷூ வாங்குவதே பெரும் சவாலாக இருந்தது. எனக்கு ஷூ வாங்கித் தருவதற்காக என் அப்பா மிகவும் கஷ்டப்படுவாா். என் வெற்றியை என் தந்தைக்கு சமா்ப்பிக்கிறேன் என்றாா்.

தொடா்ந்து, சொந்த ஊரான கோவை, வழுக்குப்பாறை அருகேயுள்ள மீனாட்சிபுரத்துக்குச் சென்ற அவருக்கு கிராம மக்கள் மற்றும் உறவினா்கள் வரவேற்பு அளித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments