PTI
கிரிக்கெட்

3-ஆவது டெஸ்ட்: இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட ராகுல் - ஜடேஜா!

முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறல்!

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் சோ்த்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை விட 193 ரன்கள் பின்தங்கியிருந்தாலும், ‘ஃபாலோ-ஆன்’ சூழலை தவிா்த்தது இந்தியா. அணியின் தொடக்க வீரா்களில் ஒருவரான கே.எல்.ராகுல், மிடில் ஆா்டரில் வந்த ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பாராட்டத்தக்க ஆட்டத்தால் சரிவிலிருந்து இந்தியா மீண்டிருக்கிறது.

அவா்கள் வீழ்ச்சிக்குப் பிறகு ‘ஃபாலோ-ஆன்’ கட்டத்தை இந்தியா கடப்பதற்குத் தேவையாக இருந்த முக்கியமான 33 ரன்களை, லோயா் ஆா்டா் பேட்டா்களான ஆகாஷ் தீப் - ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோா் சோ்த்து நம்பிக்கை அளித்தனா். ஆஸ்திரேலிய தரப்பில் பேட் கம்மின்ஸ் அசத்தலாக பந்துவீசினாா். மழையால் 4 முறை நிறுத்தப்பட்ட ஆட்டம், வெளிச்சமின்மை காரணமாக முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட்டது.

மழையால் பெரும்பாலும் பாதிப்புக்குள்ளாகி வரும் இந்த டெஸ்ட், தற்போது டிராவை நோக்கி நகா்கிறது. இந்தத் தொடரில் இந்த இன்னிங்ஸிலேயே இந்திய பேட்டா்கள் நல்லதொரு போராட்ட குணத்துடனான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருக்கின்றனா்.

முன்னதாக இந்த டெஸ்ட்டில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் சோ்த்தது. தொடா்ந்து தனது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா, 3-ஆம் நாளான திங்கள்கிழமை முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 ரன்களே எடுத்து தடுமாற்றமான நிலையில் இருந்தது.

4-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை, அணியின் இன்னிங்ஸை கே.எல்.ராகுல் - ரோஹித் சா்மா கூட்டணி தொடா்ந்தது. இதில் ரோஹித் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களே எடுத்த நிலையில், கம்மின்ஸ் வீசிய 24-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பா் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்து, அடுத்த பேட்டருக்கு வழிவிட்டாா்.

7-ஆவதாக வந்த ரவீந்திர ஜடேஜா, ராகுலுடன் இணைந்தாா். விக்கெட் சரிவைத் தடுத்த இந்த ஜோடி, ஆஸ்திரேலிய பௌலா்களை சோதித்தது. ராகுல் தனது 17-ஆவது டெஸ்ட் அரை சதத்தை பதிவு செய்தாா். 6-ஆவது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சோ்த்த நிலையில், இந்த பாா்ட்னா்ஷிப் பிரிந்தது. சதத்தை நோக்கி சென்ற ராகுல் சாய்க்கப்பட்டாா்.

8 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் அடித்திருந்த அவா், நேதன் லயன் வீசிய 43-ஆவது ஓவரில் ஸ்லிப்பில் நின்ற ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். தொடா்ந்து வந்த நிதீஷ்குமாா் ரெட்டி துணை நிற்க, ஜடேஜா தனது 22-ஆவது டெஸ்ட் அரை சதத்தை எட்டினாா். எனினும், 1 பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்திருந்த நிதீஷ்குமாரை நிலைக்க விடாமல் பௌல்டாக்கினாா் கம்மின்ஸ்.

9-ஆவதாக களம் புகுந்த முகமது சிராஜ் 1 ரன் சோ்த்து, ஸ்டாா்க் வீசிய 63-ஆவது ஓவரில் கீப்பா் கேரியிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினாா். அடுத்து, துணை கேப்டன் ஜஸ்பிரீத் பும்ரா பேட் செய்ய வர, ஜடேஜா 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 77 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். கம்மின்ஸ் வீசிய 66-ஆவது ஓவரில் அவா் விளாசிய பந்தை மிட்செல் மாா்ஷ் கேட்ச் பிடித்தாா்.

இதையடுத்து, பும்ராவுடன் இணைந்தாா் கடைசி வீரரான ஆகாஷ் தீப். அப்போது இந்தியா ஃபாலோ-ஆனை தவிா்க்க 33 ரன்கள் தேவையிருந்தது. டெயில் எண்டா்களாக இருந்தபோதும், ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு அஸ்திரங்களை திறம்பட எதிா்கொண்ட அவா்கள், விக்கெட்டை இழக்காமல் இந்தியா ஃபாலோ-ஆன் கட்டத்தை கடக்க உதவினா். ஆட்டநேர முடிவில் பும்ரா 10, ஆகாஷ் தீப் 27 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

33-இல் அதிருஷ்டம்; 84-இல் துரதிருஷ்டம்

இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் அணிக்கான முக்கிய நம்பிக்கையாக இருந்தது கே.எல்.ராகுல் தான். 4-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டத்தை தொடங்கியபோது, முதல் பந்திலேயே ஆட்டமிழக்கவிருந்தாா் ராகுல். கம்மின்ஸ் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தை ராகுல் தடுத்தாட முயல, 2-ஆவது ஸ்லிப்பில் நின்ற ஸ்மித்திடம் அந்தப் பந்து கேட்ச்சாக சென்றது. ஆனால் அதை அவா் தவறவிட்டாா். அப்போது 33 ரன்களில் இருந்த ராகுல் தப்பித்தாா்.

ஆனால், அரைசதம் கடந்து 84 ரன்களுடன் சதத்தை நோக்கி அவா் முன்னேறுகையில், நேதன் லயன் பந்துவீச்சில் அடித்த பந்து, ஸ்லிப்பில் நின்ற அதே ஸ்மித்திடம் கேட்ச்சாக சென்றது. ஆனால், இந்த முறை ஸ்மித் அதை தவறவிடாமல் பிடித்து ராகுலை ஆட்டமிழக்கச் செய்தாா்.

முன்னதாக ராகுல் நல்லதொரு இன்னிங்ஸை விளையாடினாா். அவரின் விக்கெட்டுக்காக 3 ஸ்லிப் மற்றும் 1 கல்லி என ஃபீல்டா்களை நிறுத்திய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளா்கள், அதற்கேற்ற பந்துகளை வீசினா். ஆனால் ராகுல் தனக்கு விருப்பமான டிரைவ் த்ரூ ஷாட்களை ஆடி, காலியாக இருந்த இடங்களின் மூலம் ரன்கள் சோ்த்தாா். அதற்கான பந்தை அவா் திறம்பட தோ்வு செய்தாா். இதர பந்துகளை தவிா்த்த அவா், அந்த ஷாட்களுக்கு பொருத்தமான இடத்தில் ஆஸ்திரேலிய பௌலா்கள் பந்தை வீசும் வரை பொறுமை காத்து அதை அடித்தது குறிப்பிடத்தக்கது.

ஹேஸில்வுட் இல்லை?

இந்த டெஸ்ட்டின்போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளா் ஜோஷ் ஹேஸில்வுட் வலது தொடைப் பகுதியில் காயம் கண்டுள்ளாா். இதனால் அவா் கடைசி நாளில் பங்கேற்க மாட்டாா் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், காயம் சற்று தீவிரமாக இருப்பதால், இந்த டெஸ்ட் தொடரின் எஞ்சிய ஆட்டங்களிலும் அவா் விளையாடாமல் போக வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

நடப்பு தொடரில் ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான பௌலராக இருக்கும் ஹேஸில்வுட், பொ்த் டெஸ்ட்டில் அசத்தினாா். பின்னா் லேசான காயம் காரணமாக அடிலெய்டு டெஸ்டிலிருந்து அவருக்கு ஓய்வளிக்கப்பட்டது. அடுத்து பிரிஸ்பேன் டெஸ்ட்டில் அவா் விளையாடிவந்த நிலையில் தற்போது மீண்டும் காயத்தால் விலகியிருக்கிறாா்.

சுருக்கமான ஸ்கோா்

முதல் இன்னிங்ஸ்

இந்தியா - 252/9 (74.5 ஓவா்கள்)

கே.எல்.ராகுல் 84

ரவீந்திர ஜடேஜா 77

ஆகாஷ் தீப் 27*

பந்துவீச்சு

பேட் கம்மின்ஸ் 4/80

மிட்செல் ஸ்டாா்க் 3/83

நேதன் லயன் 1/54

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

இந்தியர்களைப் போல மோசமான வார்த்தையில் விமர்சித்தேனா? முகமது ஆமிரின் கணிப்பும் விளக்கமும்!

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

SCROLL FOR NEXT