சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகள் நிறைவு; பலரும் அறிந்திராத விராட் கோலியின் 18 சாதனைகள்!
சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது மற்றும் அவரது சாதனைகள் பற்றி...
இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்று கொடுத்த விராட் கோலி, இலங்கைக்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அறிமுகப் போட்டியில் 12 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அதன் பின் நடந்ததெல்லாம் வரலாறு என்றே கூற வேண்டும்.
இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ள விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ரன்களுக்கும் அதிகமாக குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற பெருமை விராட் கோலியையேச் சேரும். இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 85 சதங்கள் விளாசியுள்ள விராட் கோலி, இன்னும் 15 சதங்கள் விளாசி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை எட்டிப் பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் அவரது ரசிகர்களிடத்தில் உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமின்றி, ஐபிஎல் தொடரிலும் விராட் கோலி ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார்.
Advertisement
Advertisement
அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விராட் கோலியின் தரமான 18 சாதனைகளை பின்வருமாறு பார்க்கலாம்.
1. ஒருநாள் போட்டிகளில் அதிக முறை 150+ ரன்கள்
ஒருநாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக இல்லாத வீரர் ஒருவர் அதிக முறை 150-க்கும் அதிகமான ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி தன்வசம் வைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி 5 முறை 150 ரன்களுக்கும் அதிகமாக குவித்துள்ளார். இந்த வரிசையில் 3 முறையுடன் விவ் ரிச்சர்ட்ஸும், இரண்டு முறையுடன் ஏபி டி வில்லியர்ஸும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இந்த ஐந்து தருணங்களையும் சேர்த்து விராட் கோலி 820 என்ற நம்பமுடியாத சராசரியுடன் 820 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 183 ஆகும். கடந்த 2012 ஆம் ஆண்டு ஆசிய கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 183 ரன்கள் எடுத்தார்.
2. சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்கள் குவித்த ஒரே வீரர்
சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் மற்றும் 34, 357 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் தன்வசம் அசைக்க முடியாத சாதனையை வைத்துள்ளார். ஆனால், கிரிக்கெட்டின் கடவுளான சச்சின் டெண்டுல்கராலும் கூட ஒரு பத்தாண்டில் (Decade) விராட் கோலி அளவுக்கு அதிக ரன்கள் குவிக்க முடியவில்லை. கடந்த 2010 - 2019 ஆம் ஆண்டு இடைவெளியில் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களுக்கும் அதிகமாக குவித்துள்ளார். இந்த பத்தாண்டு இடைவெளியில் 386 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 20, 960 ரன்கள் குவித்துள்ளார். அதில் 69 சதங்கள் மற்றும் 98 அரைசதங்கள் அடங்கும். இந்த இடைவெளியில் சர்வதேசப் போட்டி ஒன்றில் அவரது தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் 254* ரன்கள் ஆகும்.
இந்த 2010- 2019 இடைவெளியில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2014, 2016 மற்றும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2011, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2013 ஆகிய தொடர்களில் விராட் கோலி மிகவும் சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.
3.ஐசிசியின் அனைத்து விருதுகளையும் வென்ற விராட் கோலி
ஐசிசியின் அனைத்து விருதுகளையும் ஒரே ஆண்டில் வென்ற வீரர் என்ற தனித்துவமான சாதனை விராட் கோலியையேச் சேரும். அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஐசிசியின் அனைத்து விருதுகளையும் வென்றார். ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒருநாள் வீரர் என அனைத்து ஐசிசி விருதுகளையும் வென்றார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு விராட் கோலி மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டில் அவர் 37 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 2735 ரன்கள் குவித்தார். அதில் 11 சதங்கள் மற்றும் 9 அரைசங்கள் அடங்கும். அதில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 558 ரன்கள் குவித்ததும் அடங்கும். 2018 ஆம் ஆண்டில் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா என வெவ்வேறு நாடுகளில் சதம் விளாசினார்.
அதிக அளவிலான ஐசிசி விருதுகளை (10) வென்ற வீரர் என்ற சாதனையும் விராட் கோலியையேச் சேரும்.
4. தொடர்ச்சியாக 10 ஒருநாள் போட்டிகளில் அசத்தல்
இந்திய அணிக்காக தொடர்ச்சியாக 10 ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு அதிக ரன்கள் குவித்து விராட் கோலி சாதனை படைத்திருக்கிறார். 10 ஒருநாள் போட்டிகளில் 142.14 என்ற சராசரியுடன் அவர் 995 ரன்கள் எடுத்தார். அதில் 5 சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் அடங்கும். 10 போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடியதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக (வெறும் 205 இன்னிங்ஸ்களில்) 10,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார்.
5. சுதந்திர நாள் & குடியரசு நாளில் சதம் விளாசிய ஒரே இந்திய வீரர்
சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாளில் சதம் விளாசிய ஒரே இந்திய வீரர் என்ற பெருமையும் விராட் கோலியையேச் சேரும். கடந்த 2019 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விராட் கோலி சுதந்திர நாளில் சதம் விளாசினார். அவர் 99 பந்துகளில் 114* ரன்கள் எடுத்தார்.
அதேபோல, கடந்த 2012 ஆம் ஆண்டு குடியரசு நாளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் விளாசினார். அது அவருடைய முதல் டெஸ்ட் சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
6. சேனா நாடுகளில் சதம் விளாசியவர்கள் வரிசையில் விராட் கோலி
சேனா நாடுகளில் (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) டெஸ்ட் போட்டிகளில் சதம் விளாசிய 4-வது இந்திய வீரர் என்ற பெருமை விராட் கோலியைச் சேரும். டெஸ்ட் போட்டிகளில் சேனா நாடுகள் அனைத்திலும் சதம் விளாசியதன் மூலம், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் மற்றும் முகமது அசாரூதின் வரிசையில் விராட் கோலியும் இந்தப் பட்டியலில் இணைந்தார்.
7. வெற்றிக்கு வித்திட்ட விராட் கோலியின் சதங்கள்
சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியின் சதங்கள் பலவும் வெற்றிக்கு வித்திடுபவையாக அமைந்துள்ளன. அணியின் வெற்றிக்காக அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையும் விராட் கோலியிடமே உள்ளது. விராட் கோலி சதம் விளாசிய 59 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
அதிலும் குறிப்பாக, ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியின் பல சதங்கள் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளன.ஒருநாள் போட்டிகளில் அவரது 54 சதங்களில் 44 சதங்கள் அணியின் வெற்றிக்கு காரணமானவை.
8. அதிவேகமாக அதிக இரட்டைச் சதங்கள்
டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 7 முறை இரட்டைச் சதங்கள் விளாசியுள்ளார். கேப்டனாக அதிக முறை இரட்டைச் சதங்கள் விளாசியவரும் விராட் கோலியே. டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் லெஜண்ட் டான் பிராட்மேன் முதலில் 7 இரட்டைச் சதங்கள் விளாசியிருந்தாலும், அதிவேமாக விளாசியவர் என்ற பெருமை விராட் கோலியையேச் சேரும்.
டெஸ்ட் போட்டிகளில் இந்த அனைத்து இரட்டைச் சதங்களையும் விராட் கோலி 1,176 நாள்களுக்குள் விளாசினார். இந்த சாதனையை நிகழ்த்த டான் பிராட்மேன் 1,484 நாள்கள் எடுத்துக் கொண்டார்.
9. ரன் சேஸிங் கிங் விராட் கோலி
சேஸிங்கில் விராட் கோலி அசைக்க முடியாத சாதனையை தன்வசம் வைத்துள்ளார். ஒருநாள் வடிவிலான போட்டிகளில் 350 ரன்களுக்கும் அதிகமாக சேஸ் செய்த ரன்களில் நம்பமுடியாத அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு சாதனை படைத்துள்ளார். 350 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரை சேஸ் செய்த 4 போட்டிகளில் 3 போட்டிகளில் விராட் கோலி அணிக்கு வெற்றி பெற்றுத் தந்துள்ளார். இந்த அனைத்து சேஸிங்கின்போதும், விராட் கோலி 50 ரன்களுக்கும் அதிகமாக குவித்துள்ளார்.
10. ஐபிஎல் தொடரில் அதிக முறை 500+ ரன்கள்
ஐபிஎல் தொடரில் அதிக முறை 500 ரன்களுக்கும் அதிகமாக எடுத்த வீரர் என்ற பெருமையும் விராட் கோலியைச் சேரும். இதுவரை 9 ஐபிஎல் சீசன்களில் அவர் 500 ரன்களுக்கும் அதிகமாக குவித்துள்ளார். அதில் தொடர்ச்சியாக நான்கு சீசன்களில் 600 ரன்களுக்கும் அதிகமாக குவித்ததும் அடங்கும். அவர் அங்கம் வகிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ச்சியாக இரண்டு முறை (2025, 2026) சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
11. டி20 உலகக் கோப்பையில் அசைக்க முடியாத சாதனை
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரராக விராட் கோலி அசைக்க முடியாத சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதுவரை 35 டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 1292 ரன்கள் குவித்துள்ளார். அதில் 15 அரைசதங்கள் அடங்கும். அதே போல, எப்போதெல்லாம் விராட் கோலி ஆட்டமிழக்காமல் இருந்துள்ளாரோ அப்போதெல்லாம் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. விராட் கோலி 8 முறை நாட் அவுட் பேட்டராக இருந்துள்ளார்.
12. அதிக எதிரணிகளுடன் இரட்டைச் சதங்கள்
டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 6 வெவ்வேறு நாடுகளுக்கு எதிராக இரட்டைச் சதம் விளாசியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக விராட் கோலி இரட்டைச் சதம் விளாசியுள்ளார். இதன் மூலம், அதிக எதிரணிகளுடன் சதம் விளாசியுள்ள பாகிஸ்தானின் யூனிஸ் கான் மற்றும் இலங்கையின் குமார் சங்ககாரா வரிசையில் விராட் கோலியும் இணைந்துள்ளார்.
13. ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து சதங்கள்
ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து சதங்கள் விளாசியவர்கள் வரிசையில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். அவர் 12 முறை அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளில் சதம் விளாசியுள்ளார். இந்த வரிசையில் 7 முறையுடன் ஏபி டி வில்லியர்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
14. அனைத்து வடிவிலான போட்டிகளிலும் 900 ரேட்டிங் புள்ளிகள்
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விராட் கோலி நம்பர் 1 வீரராக இருந்துள்ளார். மேலும், அனைத்து வடிவிலான போட்டிகளிலும் 900 ரேட்டிங் புள்ளிகள் பெற்ற ஒரே வீரர் விராட் கோலி என்பதும் குறிப்பிடத்தக்கது.
15. அனைத்து வடிவிலும் 50+ சராசரி
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்துள்ள டாப் 20 வீரர்களில் விராட் கோலி ஒருவர் மட்டுமே 50-க்கும் அதிகமான பேட்டிங் சராசரியை வைத்துள்ளார். அவரது சராசரி 52.71 ஆக உள்ளது.
16. அதிக முறை தொடர் நாயகன் விருதுகள்
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருதினை வென்ற வீரரும் விராட் கோலியே. அவர் 22 முறை தொடர் நாயகன் விருதினை வென்றுள்ளார். இந்த வரிசையில் 20 விருதுகளுடன் சச்சின் டெண்டுல்கர் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
17. ஐசிசி வெள்ளைப் பந்து போட்டிகளில் அதிக ரன்கள்
ஐசிசி நடத்தும் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் அதிக ரன்கள் குவித்துள்ள வீரர் என்ற பெருமையும் விராட் கோலியையேச் சேரும். ஐசிசியின் 90 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 61.83 சராசரியுடன் 3,834 ரன்கள் குவித்துள்ளார். அதில் 6 சதங்கள் மற்றும் 33 அரைசதங்கள் அடங்கும்.
18. ஐசிசி தொடர்களில் அதிக முறை ஆட்ட நாயகன் விருதுகள்
ஐசிசி நடத்தும் தொடர்களில் அதிக முறை ஆட்ட நாயகன் விருதுகளை வென்றவர்கள் வரிசையில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். ஐசிசியின் குறுகிய வடிவிலான தொடர்களில் அவர் 15 முறை ஆட்ட நாயகன் விருதினை வென்றுள்ளார்.
On Virat Kohli completing 18 years in international cricket and his achievements...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.