பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி; சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி!
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இலங்கையில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் கொழும்புவில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்தது.
Advertisement
Advertisement
இஷான் கிஷன் அதிரடி; பாகிஸ்தானுக்கு 176 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் அபிஷேக் சர்மா கோல்டன் டக் அவுட்டான நிலையில், இன்றையப் போட்டியில் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றையப் போட்டியிலும் டக் அவுட்டாகி அவர் ஏமாற்றமளித்தார்.
அதன் பின், இஷான் கிஷனுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இஷான் கிஷன் அதிரடியில் மிரட்ட, திலக் வர்மா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 27 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 40 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இதனையடுத்து, திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி அளிக்கும் விதமாக பந்துவீசினர். திலக் வர்மா 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹார்திக் பாண்டியா முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் இறுதியில் ஷிவம் துபே 17 பந்துகளில் 27 ரன்களும், ரிங்கு சிங் 4 பந்துகளில் 11 ரன்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய சைம் ஆயுப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கேப்டன் சல்மான் அகா, உஸ்மான் தாரிக் மற்றும் ஷாகின் ஷா அஃப்ரிடி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இந்தியா அபார வெற்றி! சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி!
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 18 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பாகிஸ்தான் அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழந்தனர். ஷாகிப்ஸதா ஃபர்ஹான் 0 ரன், சைம் ஆயுப் 6 ரன்கள், கேப்டன் சல்மான் அகா 4 ரன்கள், பாபர் அசாம் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
நிதானமாக விளையாடிய உஸ்மான் கான் 34 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். ஷாகின் ஷா அஃப்ரிடி 23 ரன்களும், ஷதாப் கான் 14 ரன்களும் எடுத்தனர்.
இந்தியா தரப்பில் வருண் சக்கரவர்த்தி, அக்ஷர் படேல், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹார்திக் பாண்டியா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். குல்தீப் யாதவ், திலக் வர்மா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் விளாசிய இஷான் கிஷனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
The Indian team qualified for the Super 8 round of the T20 World Cup by defeating Pakistan in the match held in Sri Lanka.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.