ஒரே நாளில் கோப்பை வென்ற மகிழ்ச்சியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆடவர் மற்றும் மகளிர். படம் : ஐசிசி
கிரிக்கெட்

6, 6, 6, 6.. கார்லஸ் பிராத்வெய்ட் ருத்ரதாண்டவம்.. மே.இ.தீவுகளின் மறக்க முடியாத உலகக் கோப்பை! 2016 ரீவைண்ட்!!

2016 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்று அசத்தியதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

கொல்கத்தா, ஏப்.3: இந்தியாவில் நடைபெற்ற 7-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி த்ரில் வெற்றி பெற்று 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

2016 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை முதல் முறையாக இந்தியாவில் நடத்தப்பட்டது. நாக்பூர், தரம்சாலா, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, மொஹாலி, தில்லி உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றது. குரூப்-ஏ மற்றும் குரூப்-பி பிரிவில் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 10-ன் குரூப்-1 மற்றும் குரூப்-2 ஆம் சுற்றுக்குத் தகுதி பெற்றன.

இதில், மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தானும், குரூப்-2-ல் நியூசிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அணிகளும் இடம்பெற்றன. இதில், குரூப்-க்கு முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

வலிமையான இந்திய அணி சூப்பர் 10 சுற்றில் நியூசிலாந்து அணி நிர்ணயித்த 127 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் 79 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி அதிர்ச்சியளித்தது. முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்தும், இரண்டாவது அரையிறுதியில் இந்தியாவும் வலிமை மிக்க மேற்கிந்தியத் தீவுகள் அணியும் மோதின. முதல் அரையிறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டி மும்பை வான்கடே திடலில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய விராட் கோலி 89 ரன்கள் குவித்தார். ரோஹித் சர்மா அதிரடியாக 3 பௌண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 43 ரன்கள் குவித்தார். இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் கிறிஸ் கெயில் 5, சாமுவேல்ஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால், இந்தியா நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால் லெண்டில் சிம்மோன்ஸ் இந்திய பந்துவீச்சாளர்களைச் சிதறடித்தார். 7 பௌண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். அவருடன் ஜான்சன் சார்லஸ் 7 பௌண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் குவித்து அவுட்டானார். கடைசியில் களமிறங்கிய ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் 20 பந்துகளில் 3 பௌண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 43 ரன்கள் குவித்து இந்திய அணியின் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை சீர்குலைத்தார்.

இறுதிப்போட்டி...

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் திடலில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவு அணிகள் மோதின. இரண்டாவது கோப்பைக்கான போட்டியில் இருவரும் சரிசம பலத்துடன் தீவிரம் காட்டின. இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் டேரன் ஷமி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி, இங்கிலாந்து வீரர்களில் முதலில் பேட்டிங்கை தொடங்கினர்.

ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே ஜேசன் ராயின் விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து. முதல் ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் சாமுவேல் பத்ரீ, 2 வது பந்தில் ஜேசன் ராயை கிளீன் போல்டாக்கினார். அடுத்த ஓவரை வீசிய ஆன்ட்ரே ரஸல் அலெக்ஸ் ஹேல்ஸை (1) வீழ்த்தினார். பின்னர் வந்த இயான் மோர்கன் 5 ரன்களில் வெளியேற, 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து.

இதையடுத்து ஜோ ரூட்டுடன் இணைந்த ஜோஸ் பட்லர் பௌண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார். அதன்பின், சுலைமான் பென் வீசிய 9-வது ஓவரில் ஒரு சிக்ஸரையும், 11-வது ஓவரில் இரு சிக்ஸர்களையும் விளாசினார். இதனால், இங்கிலாந்து அணி 11 ஓவர்களில் 83 ரன்களை எட்டியது. தொடர்ந்து வேகம் காட்டிய பட்லர், பிரத்வெயிட் வீசிய அடுத்த ஓவரில் பிராவோவிடம் கேட்ச் ஆனார். அவர் 22 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.

ஜோஸ் பட்லர் ஜோ ரூட் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 40 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து பென் ஸ்டோக்ஸ் களமிறங்க, ஜோ ரூட் 33 பந்துகளில் அரை சதம் கண்டார். 14-வது ஓவரை வீசிய பிராவோ, பென் ஸ்டோக்ஸ் (13), மொயீன் அலி (0) ஆகியோரை வீழ்த்த, இங்கிலாந்துக்கு பின்னடைவு ஏற்பட்டது.

பிரத்வெயிட் வீசிய அடுத்த ஓவரில் ஸ்வீப் ஷாட் அடித்த ஜோ ரூட் பென்னிடம் கேட்ச் ஆனார். அவர் 36 பந்துகளில் 7 பௌண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 7 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. இதன்பிறகு கிறிஸ் ஜோர்டானுடன் இணைந்த டேவிட் வில்லே பிராவோ வீசிய 17 வது ஓவரில் இரு சிக்ஸர்களை விளாசிய டேவிட் வில்லே, பிரத்வெயிட் வீசிய அடுத்த ஓவரில் பவுண்டரி அடித்த கையோடு ஆட்டமிழந்தார்.

அவர் 14 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த பிளங்கெட் 4 ரன்களில் வெளியேற இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணித் தரப்பில் பிராவோ, பிரத்வெயிட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், சாமு வேல் பத்ரி இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர், 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. வழக்கத்துக்குமாறாக 2வது ஓவரை வீச ஜோ ரூட்டை அழைத்தார் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன். அதற்கு கைமேல் பலனும் கிடைத்தது.

முதல் பந்தில் சார்லஸையும் (1) 3-வது பந்தில் கெயிலையும் (4) வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார் ஜோ ரூட். பின்னர் வந்த சிம்மன்ஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த சிம்மன்ஸ் டக் அவுட்டானது அந்த அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. இதனால் 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது மேற்கிந்தியத்தீவுகள்.

இதையடுத்து சாமுவேல்ஸுடன் ஜோடி சேர்ந்தார் பிராவோ. ஒருபுறம் சாமுவேல்ஸ் சரியான பந்துகளை தேர்ந்தெடுத்து பவுண்டரியை விளாச, மறுமுனையில் பிராவோ நிதானம் காட்டினார். இதனால், முதல் 10 ஓவர்களில் 54 ரன்கள் மட்டுமே எடுத்தது மேற்கிந்தியத் தீவுகள்.

இதன்பிறகு சாமுவேல்ஸ் 47 பந்து களில் அரை சதமடிக்க, பிராவோ 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரஸல் களம்புகுந்தார். மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கு 6 ஓவர்களில் 70 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. பிளங்கெட் வீசிய 15-வது ஓவரில் சாமுவேல்ஸ் ஒரு பவுண்டரி, இரு சிக்ஸர்களை விளாசினார். இதனால், ஆட்டத்தில் கொஞ்சம் பதற்றம் தனிந்தது.

ஆனால், அடுத்த ஓவரிலேயே ரஸல் (1), கேப்டன் டேரன் ஷமி (2) ஆகியோர் ஆட்டமிழக்க, கடைசி 4 ஓவர்களில் 45 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஒருபுறம் பிரத்வெயிட்டை வைத்துக்கொண்டு மறுபுறம் போராடினார் சாமுவேல்ஸ்.

கடைசி 2 ஓவர்களில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஜோர்டான் வீசிய 19-வது ஓவரில் 8 ரன்கள் எடுக்கப்பட்டன. இதனால், கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவானது. இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்று நினைத்திருந்த சூழலில் பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்துகளை தொடர்ச்சியாக நான்கு முறை சிக்ஸருக்குப் பறக்க விட்டார் கார்லஸ் பிராத்வெயிட். மேற்கிந்தியத் தீவுகள் 194 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. சாமுவேல்ஸ் 66 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பௌண்டரிகளுடன் 85, பிரத்வெயிட் 10 பந்துகளில் 4 சிக்ஸர், 1 பௌண்டரியுடன் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அதிரடியாக நான்கு சிக்ஸர்கள் விளாசியது மற்றும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கார்லஸ் பிராத்வெயிட் ஆட்ட நாயகன் விருதைக் கைப்பற்றினார்.

மகளிர் உலகக் கோப்பை: மேற்கிந்தியத் தீவுகள் சாம்பியன்

ஆடவர் போட்டிக்கு முன்னதாக, கொல்கத்தா ஈடன் கார்டன் திடலில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி கோப்பையை வென்றது.

முதல் முறையாக உலகக் கோப்பையை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, தொடர்ந்து 3 முறை சாம்பியன் பட்டம் வென்றிருந்த ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது. மேலும், ஒரே நேரத்தில் ஆடவர் மற்றும் மகளிர் உலகக் கோப்பையை கைப்பற்றிய பெருமையையும் மேற்கிந்தியத் தீவுகள் அணி படைத்தது.

(தினமணி கருவூலத்தின் உதவியுடன்...)

Carlos Brathwaite broke English hearts with FOUR sixes in a row in the final over to win the 2016 T20 World Cup for West Indies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழையால் தாமதமாகும் நியூசிலாந்து - பாகிஸ்தான் போட்டி!

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26

கமல் - ரஜினி புரோமோவில் இதைக் கவனித்தீர்களா?

ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின்

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றி!

SCROLL FOR NEXT