கேப்டன் கேத்ரின் பிரைஸ் அசத்தல்; உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கிய ஸ்காட்லாந்து!
டி20 உலகக் கோப்பைத் தொடரில் அயர்லாந்துக்கு எதிரானப் போட்டியில் ஸ்காட்லாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் அயர்லாந்துக்கு எதிரானப் போட்டியில் ஸ்காட்லாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் நேற்று (ஜூன் 12) தொடங்கியது. தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. மான்செஸ்டரில் இன்று (ஜூன் 13) நடைபெற்ற போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஸ்காட்லாந்து அணி முதலில் விளையாடியது.
Advertisement
Advertisement
கேத்ரின் பிரைஸ் அரைசதம்; அயர்லாந்துக்கு 162 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் கேத்ரின் பிரைஸ் 39 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, சாரா பிரைஸ் 49 ரன்களும், கேத்ரின் ஃபிரேசர் 15 ரன்களும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் யாரும் அதிக அளவில் ரன்கள் குவிக்கவில்லை.
அயர்லாந்து தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அவா கேனிங் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அய்மி மஹூர் மற்றும் அர்லின் கெல்லி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
பந்துவீச்சில் அசத்தல்; ஸ்காட்லாந்து வெற்றி!
162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணி, 19.1 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், ஸ்காட்லாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக எமி ஹண்டர் 39 ரன்களும், ஓர்லா பிரண்டர்கேஸ்ட் 33 ரன்களும் எடுத்தனர். அர்லின் கெல்லி 15 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஸ்காட்லாந்து தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய கிறிஸ்டி கார்டான் மற்றும் கேத்ரின் ஃபிரேசர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கேப்டன் கேத்ரின் பிரைஸ் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே அசத்திய கேப்டன் கேத்ரின் பிரைஸ் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
Scotland defeated Ireland by 40 runs in the T20 World Cup match.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.