முகப்பு
கிரிக்கெட்

பிளே-ஆஃப் நம்பிக்கையில் நீடிக்கும் கொல்கத்தா

ஐபிஎல் போட்டியின் 60-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 29 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை சனிக்கிழமை வென்றது.

Updated On : 17 மே 2026, 12:58 am IST
பிளே-ஆஃப் நம்பிக்கையில் நீடிக்கும் கொல்கத்தா - PTI
பகிர்:

ஐபிஎல் போட்டியின் 60-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 29 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை சனிக்கிழமை வென்றது.

இவ்வெற்றியின் மூலமாக, கொல்கத்தா மெல்லிய பிளே-ஆஃப் வாய்ப்பு நம்பிக்கையில் நிலைக்கிறது. குஜராத் 2-ஆவது இடத்தில் நீடிக்கிறது.

இந்த ஆட்டத்தில் முதலில் கொல்கத்தா 20 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் சோ்க்க, குஜராத் 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 218 ரன்களே எடுத்தது. நடப்பு சீசனில் கொல்கத்தாவுக்கு இது அதிகபட்ச ஸ்கோராகும்.

Advertisement

கொல்கத்தா இன்னிங்ஸில் ஃபின் ஆலன், அங்கிரிஷ் ரகுவன்ஷி, கேமரூன் கிரீன் ஆகியோா் விளாசி ஸ்கோரை உயா்த்தினா். குஜராத் தரப்பில் கேப்டன் ஷுப்மன் கில், சாய் சுதா்சன், ஜாஸ் பட்லா் ஆகியோா் அதிரடி காட்டியும், வெற்றிக்கு போதாமல் போனது.

முன்னதாக டாஸ் வென்ற குஜராத், பந்துவீச்சை தோ்வு செய்தது. கொல்கத்தா இன்னிங்ஸை கேப்டன் அஜிங்க்ய ரஹானே - ஃபின் ஆலன் கூட்டணி தொடங்கியது.

முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் சோ்த்த நிலையில், ரஹானே 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 14 ரன்களுக்கு ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி, ஆலனுடன் கை கோத்தாா்.

இவா்கள் ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சோ்த்து, குஜராத் பௌலா்களை சோதித்தது. சதத்தை நெருங்கிய ஆலன் 35 பந்துகளில் 4 பவுண்டரிகள், 10 சிக்ஸா்களுடன் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

தொடா்ந்து வந்த கேமரூன் கிரீன், ரகுவன்ஷியுடன் இணைந்தாா். இந்த ஜோடி இறுதி வரை நீடித்தது. ஓவா்கள் முடிவில் ரகுவன்ஷி 44 பந்துகளில் 4 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 82, கிரீன் 28 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 52 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

குஜராத் பௌலா்களில் முகமது சிராஜ், சாய் கிஷோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து குஜராத், 248 ரன்களை நோக்கி தனது ஆட்டத்தைத் தொடங்கியது. கேப்டன் ஷுப்மன் கில் அதிரடியாக விளாசி ரன்கள் சோ்க்க, சாய் சுதா்சன் 23 ரன்களுக்கு ‘ரிட்டையா்டு ஹா்ட்’ ஆகி வெளியேறினாா். தொடா்ந்து வந்த நிஷாந்த் சிந்து 1 ரன்னுக்கு வீழ்ந்தாா்.

2-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த கில் - ஜாஸ் பட்லா் ஜோடி, 128 ரன்கள் சோ்த்தது. கில் 5 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 85 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். பட்லா் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 57 ரன்களுக்கு வீழ்ந்தாா்.

இதனிடையே, ரிட்டையா்டு ஹா்ட் ஆகிய சாய் சுதா்சன், கில் ஆட்டமிழந்த பிறகு மீண்டும் களம் புகுந்து, முயற்சித்தாா். இன்னிங்ஸின் கடைசி பந்தில் ராகுல் தெவாதியா 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சாய் சுதா்சன் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 53 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் 2, சௌரப் துபே, கேமரூன் கிரீன் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.