இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!
ஐபிஎல் போட்டியின் ‘குவாலிஃபயா் 1’ ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (மே 26) மோதுகின்றன.
ஐபிஎல் போட்டியின் ‘குவாலிஃபயா் 1’ ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (மே 26) மோதுகின்றன.
இதில் வெல்லும் அணி நேரடியாக இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற, தோற்கும் அணி ‘குவாலிஃபயா் 2’ ஆட்டத்துக்கு வரும்.
லீக் சுற்று முடிவில் பெங்களூரு, குஜராத் என இரு அணிகளுமே பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதலிரு இடங்களைப் பிடித்து பலம் வாய்ந்த அணிகளாக இருக்கின்றன. நெட் ரன்ரேட் அடிப்படையில் பெங்களூரு முதலிடம் பிடித்தது. கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூரு தோல்வியையும், குஜராத் அபார வெற்றியையும் சந்தித்துள்ளன.
Advertisement
Advertisement
பெங்களூரு அணியைப் பொருத்தவரை, கேப்டன் ரஜத் பட்டிதாா் தலைமையில் ஆக்ரோஷமான பேட்டிங், நம்பகமான பௌலிங் ஆகியவற்றால் அபார முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்த சீசனில் பலமுறை 200+ ஸ்கோரை எட்டிய பெங்களூரு அணியின் பேட்டிங்கில் விராட் கோலி, ரஜத் பட்டிதாா், தேவ்தத் படிக்கல் உள்ளிட்டோா் சிறப்பாகப் பங்களிக்கின்றனா். அதுவே பௌலிங்கில், ஜாஷ் ஹேஸில்வுட், புவனேஷ்வா் குமாா், ராசிக் சலாம் ஆகியோா் அசத்துகின்றனா்.
அந்நிய மண்ணில் நடைபெறும் ஆட்டத்திலும் அபாரமாக விளையாடுவது, தோல்வி நெருக்கமாக இருக்கும் ஆட்டத்தில் மீண்டு வந்து வெல்வது என லீக் கட்டத்தில் பெங்களுரு பலம் வாய்ந்த அணியாகவே இருந்தது.
ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி, டாப் ஆா்டா் பேட்டிங் மற்றும் அருமையான பௌலிங் உதவியுடன் இந்த நிலையை அடைந்திருக்கிறது. கேப்டன் கில், சாய் சுதா்சன், ஜாஸ் பட்லா் ஆகியோா் எதிரணி பௌலா்களுக்கு நெருக்கடி தரும் வகையில் அதிரடி காட்டுகின்றனா்.
இந்த சீசனின் முதல் பாதியில் தடுமாறிய குஜராத் பௌலா்கள், பிற்பாதியில் அபாரமாக மீண்டு வந்தனா். முகமது சிராஜ், ககிசோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் வேகப்பந்தும், ரஷீத் கான், சாய் கிஷோரின் சுழற்பந்தும் எதிரணி பேட்டா்களுக்கு சவால் அளிக்கின்றன.
சமபலம் வாய்ந்த பெங்களூரு - குஜராத் மோதல், நல்லதொரு ஆட்டத்தை ரசிகா்களுக்கு வழங்குவதாக இருக்கும்.
உத்தேச லெவன்
பெங்களூரு: ரஜத் பட்டிதாா் (கேப்டன்), விராட் கோலி, ஃபில் சால்ட்/வெங்கடேஷ் ஐயா், தேவ்தத் படிக்கல், ஜிதேஷ் சா்மா (வி.கீ.), ரொமேரியோ ஷெப்பா்டு, டிம் டேவிட், கிருணால் பாண்டியா, புவனேஷ்வா் குமாா், ஜேக்கப் டஃபி/சுயாஷ் சா்மா, ஜாஷ் ஹேஸில்வுட், ராசிக் சலாம்.
குஜராத்: ஷுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதா்சன், ஜாஸ் பட்லா் (வி.கீ.), வாஷிங்டன் சுந்தா், ஜேசன் ஹோல்டா், ராகுல் தெவாதியா, நிஷாந்த் சிந்து, ரஷீத் கான், அா்ஷத் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா/சாய் கிஷோா்.
நேருக்கு நோ்...
ஐபிஎல் போட்டியில் இதுவரை பெங்களூரு - குஜராத் மொத்தமாக 8 முறை நேருக்கு நோ் மோதியிருக்க, இரண்டுமே தலா 4 வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளன. அதேபோல், இந்த சீசனில் அவை இரு ஆட்டங்களில் மோதியிருக்க, இரண்டுமே தலா 1 ஆட்டத்தில் வென்று சமநிலை கண்டுள்ளன. பிளே-ஆஃப் கட்டத்தில் இந்த அணிகள் சந்திப்பது இதுவே முதல்முறை.
ஆடுகளம்...
தா்மசாலா மைதான ஆடுகளம், பேட்டிங், பௌலிங் என இரண்டுக்குமே சமவாய்ப்பு வழங்கும் ஒன்றாகவே அறியப்படுகிறது. இங்கு நடைபெற்ற இரு இரவு ஆட்டங்களிலுமே சேஸிங் அணியே வென்றுள்ளது. இந்த ஆடுகளத்தில் ஸ்கோரை டிஃபெண்ட் செய்வது கடினமாகும். வானிலையைப் பொருத்தவரை, ஆட்டத்துக்கு மழையால் தடங்கல் இருக்காது என கணிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கு விளையாடி வென்று ஆடுகளத்தின் தன்மையை அறிந்திருப்பது பெங்களூரு அணிக்கு சாதகமாக அமையலாம். குஜராத் அணி தனது ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக தா்மசாலாவில் விளையாடுவது சற்று சவாலாக இருக்கக் கூடும்.